0
இலண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியென் லூங், இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்று விரிவான பசிபிக் பங்காளித்துவ முற்போக்கு உடன்பாடு (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) ஆகும்.
பொருளியலை வலுவாக்குவதும் அனைத்துலக ஒழுங்குமுறைகளைக் காப்பதும் குறித்த உடன்பாட்டின் நோக்கம்.
அந்த உடன்பாட்டின் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் ஆசியானும் எந்தெந்த வகைகளில் இணையலாம் என்று மேற்படி இரு தலைவர்களும் கலந்துரையாடினார்.
12 நாடுகள் இடம்பெற்றிருக்கும் அந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரே ஐரோப்பிய நாடு, இங்கிலாந்து ஆகும்.
சிங்கப்பூரும் இங்கிலாந்தும் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த விரும்புகின்றன. அதன்படி, மின்னிலக்கமயமாதல், பசுமை எரிசக்தி மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகளை எப்படி அதிகரிக்கலாம் என்று இரு தரப்பும் ஆராய்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பொருளாதார இணைப்புகள் உள்ளன. அதை அடிப்படையாகக் கொண்ட ஆழமான, நீண்டகால உறவும் உள்ளது.
அவற்றை இரு நாடுகளும் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளன.