11
இங்கிலாந்தில் நீடித்த ஈரப்பதமான மற்றும் மந்தமான வானிலைக்குப் பிறகு, நாட்டின் பல பகுதிகளில் பனி மற்றும் பனிக்கட்டியுடன் கூடிய குளிர்கால வானிலை மீண்டும் தொடங்கவுள்ளது. ஆர்க்டிக் காற்றோட்டம் காரணமாக, வெப்பநிலை சராசரியை விட 6 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (12) மாலை 04 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை பனி மற்றும் பனிக்கட்டிக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நிலவவுள்ள கடும் குளிரைக் கருத்தில்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை வரை குளிர்கால சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரச் சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், நலிவடைந்த நிலையில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வியாழன் இரவு மழை பனியாக மாறத் தொடங்கும், குறிப்பாக 200 மீட்டருக்கு மேல் உள்ள உயரமான பகுதிகளில் 10 செமீ வரை பனி படிய வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் மழை மற்றும் பனி தெற்கு நோக்கி நகரும்போது, வெப்பநிலை வேகமாக வீழ்ச்சியடையும். இது வீதிகளில் பனிக்கட்டிகள் உருவாகி ஆபத்தான பயணச் சூழலை ஏற்படுத்தக்கூடும்.
சனிக்கிழமையன்று நாட்டின் பெரும்பகுதிகளில் சிறிது சூரிய ஒளி தென்பட்டாலும், இந்த மாற்றம் குறுகிய காலமே நீடிக்கும். சனிக்கிழமை இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கும், மேலும் உயரமான இடங்களில் தற்காலிகமாக பனிப்பொழிவு இருக்கலாம்.
நிலத்தடி நீர் ஏற்கெனவே அதிகப்படியாக இருப்பதால், கனமழை மற்றும் வெள்ள அபாயம் குறித்த கூடுதல் எச்சரிக்கைகள் வரக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் வெப்பநிலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.