• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து–வேல்ஸில் நில வாடகைக்கு உச்சவரம்பு: அரசு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

Byadmin

Jan 27, 2026


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குத்தகைதாரர்கள் செலுத்தும் நில வாடகைக்கு உச்சவரம்பு ஒன்றை அரசு செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கவுள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. தொழிற்கட்சியின் 2024 தேர்தல் அறிக்கையில், கட்டுப்பாடற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத நில வாடகை கட்டணங்களை கட்டுப்படுத்துவோம் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இத்தகைய உச்சவரம்பு ஓய்வூதிய நிதிகளுக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த கவலைகள் காரணமாக, அரசு தனது முன்னைய உறுதிமொழியிலிருந்து பின்வாங்கக்கூடும் என்ற கருத்துகளும் எழுந்தன. இருப்பினும், உச்சவரம்பு எவ்வளவு என அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அது ஆண்டுக்கு சுமார் £250ஆக இருக்கலாம் என பிரச்சாரகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், முன்னாள் வீட்டுவசதி செயலாளர் ஏஞ்சலா ரெய்னர், நில வாடகை தொடர்பான தேர்தல் உறுதிமொழிகளை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது சுமார் ஐந்து மில்லியன் குத்தகை வீடுகள் உள்ளன. இதில், ஒரு சொத்தின் உரிமை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஃப்ரீஹோல்டரிடமிருந்து குத்தகை முறையில் வழங்கப்படுகிறது.

தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் குத்தகைமுறைமையே பொதுவாக நடைமுறையில் உள்ளது. 2024ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 99 சதவீதம் குத்தகை வீடுகளாக இருந்ததாக நிலப் பதிவேடு மதிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் புதிய குடியிருப்பு குத்தகை சொத்துகளுக்கு நில வாடகை இரத்து செய்யப்பட்டாலும், ஏற்கெனவே உள்ள குத்தகை வீடுகளுக்கு அது தொடர்ந்தே வசூலிக்கப்படுகிறது.

2023–2024 காலப்பகுதியில், குத்தகை உரிமையாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக £120 நில வாடகை செலுத்தியதாக ஆங்கில வீட்டுவசதி கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. தொழிற்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த போது, தற்போதைய வீட்டுவசதி அமைச்சர் மேத்யூ பென்னிகுக், நில வாடகை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், கருவூலமும் வீட்டுவசதி துறையும் இந்த விவகாரத்தில் முரண்பட்ட நிலைப்பாடுகளில் உள்ளதாகவும், உச்சவரம்பு ஃப்ரீஹோல்டுகளை வைத்திருக்கும் ஓய்வூதிய நிதிகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

By admin