சென்னை: இசிஆர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது அதிமுகவினர் தான் என தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காரில் திமுக கொடியை கட்டிக் கொண்டு திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எந்த ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றாலும் அதை திமுகவோடு தொடர்பு படுத்த வேண்டும் என்ற தீய உள் நோக்கத்தோடு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடர்ந்து முயன்று வருகிறார். இசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை சிலர் வழி மறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவை சார்ந்தவர்.
கைது செய்யபட்டவர் பயணித்த கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருடைய சகோதரர் மகனுக்குச் சொந்தமானது. அண்ணா நகர் சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவை சார்ந்த வட்ட செயலாளர் சுதாகர். திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிமுகவை சார்ந்தவர். ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்தவர் அதிமுக பிரமுகர்.
படப்பை பகுதியைச் சார்ந்த குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் வீட்டில் வடைக்கு இருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி இன்னும் எத்தனையோ குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எல்லாம் அதிமுகவினரே.
ஆனால் அதை எல்லாம் மறைத்து, மக்களை திசை திருப்பும் நோக்கில் வேண்டும் என்றே திமுக மீது அவதூறு பரப்பி வருகிறார் பழனிசாமி. அதிமுகவினர் செய்யும் தவறுகள் அனைத்தையும் திமுகவினர் மீது பழிபோட்டு வருகிறார். மக்களிடம் திமுக அரசு பெற்றுள்ள நற்பெயரைக் குலைப்பதற்கு, திட்டமிட்ட வகையில் அதிமுக முயற்சி செய்து வருகிறது.
அந்த வகையில் இசிஆர் விவகாரத்தில் காரில் திமுக கொடியை கட்டி திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் 10 மணிக்கு மேல் உணவகங்கள் இயங்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் தூங்கா நகரமாக சென்னை இருக்கிறது. இதன் மூலம் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தானே அர்த்தம்” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.