0
‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் மகேஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘தடை அதை உடை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முயன்றே விழுவோம்.. விழுந்தே எழுவோம்..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை ‘இசை சாம்ராட்’ டி. இமான் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தடை அதை உடை’ எனும் திரைப்படத்தில் மகேஷ், குணா பாபு, கணேஷ், மகாதீர் முஹம்மத், கே. எம். பாரிவள்ளல், வேல்முருகன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தங்கபாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. சாய் சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘யார் சொன்னது தோல்வி தீ என்பது…தீ என்பது உன்னை கூர் செய்வது…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவழகன் எழுத, பின்னணி பாடகர்கள் ஜோன் ஜெரோம் – ரமேஷ் கலியபெருமாள் – எம். ஜே. ஜெகதீஷ் – ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் இடம் பிடித்திருக்கும் வரிகள் அனைத்தும் தோல்வியால் துவண்டிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இருப்பதால்… பாடசாலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடையே இந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.