0
தமிழ் திரையிசையில் மேலத்தேய தாள லயங்களும் ..றாப் இசை உள்ளிட்ட இசை வடிவங்களும்.. இளைய தலைமுறை ரசிகர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ‘மாய பிம்பம்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘எனக்குள்ளே மாற்றமும் நடந்ததா..’ எனத் தொடங்கும் பாடல் வரிகளை இசை ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி முணுமுணுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாய பிம்பம்’ எனும் திரைப்படத்தில் ஆகாஷ், ஜானகி, ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நந்தா இசையமைத்திருக்கிறார். யதார்த்த வாழ்வியலுடன் கூடிய இந்த திரைப்படத்தை செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்… இப்படத்தில் இடம்பெற்ற ‘எனக்குள்ளே மாற்றமும் நடந்ததா.. உயிருக்குள் நீ வந்து நுழைந்ததால்..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் வி. பத்மாவதி எழுத, பின்னணி பாடகி வினய்தா பாடியிருக்கிறார். காதல் வயப்பட்ட இளம் பெண்ணின் உணர்வுகளை மெல்லிசையுடன் கூடிய எளிமையான பாடல் வரிகள் மூலம் விவரித்திருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக ‘முதல் முறை பார்வையில் நனைகிறேன்.. இதுவரை வாழ்ந்ததை மறக்கிறேன்..’ , ‘உன் விழிகள் ரசிக்க தானே உடைகள் அணிகிறேன்.. உள்ளங்கை உரசி போக உலகம் மறக்கிறேன்..’, போன்ற வரிகள் ரசிகைகளை குறிப்பாக காதல் வயப்பட்ட பெண்ணின் உணர்வுகளை துல்லியமாக பிரதிபலிப்பதால் அனைத்து தரப்பு இசை ரசிகைகளின் உதடுகளில் தங்கி முணுமுணுக்க வைக்கிறது.