பட மூலாதாரம், Getty Images
இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது.
வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.
உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும்.
இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு?
குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது.
மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை” என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார்.
“சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே.”
பட மூலாதாரம், Getty Images
அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி?
மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது.
இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர்.
உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.
நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி.
“சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை.” என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார்.
“ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
“இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன.” என்றார்.
“நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்” என்று அறிவுரை கூறுகிறார்.
நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா?
சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது.
“நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்,” என ‘டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே’வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார்.
அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.
நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.
சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு