• Sat. Jan 3rd, 2026

24×7 Live News

Apdin News

இணையத்தில் ஆபாச புகைப்படம் வெளியானால் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது?

Byadmin

Jan 3, 2026


இன்றைய டிஜிட்டல் உலகில் பெண்களை குறிவைத்து நடைபெறும் மிகக் கொடூரமான இணையக் குற்றங்களில் ஒன்று மார்பிங் (Morphing). பல பெண்கள் தங்களுடைய பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றிய புகைப்படங்களை சமூக விரோதிகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அவற்றை மாற்றியமைத்து ஆபாசமாக வெளியிடுகின்றனர்.

சில சமயங்களில், பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை மொபைல் போன்களில் சேமித்து வைத்திருப்பார்கள். அந்த மொபைல் போன் தொலைந்தாலோ அல்லது தவறான கைகளில் சிக்கினாலோ, அந்த புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மார்பிங் செய்து பேஸ்புக் அல்லது பிற இணையதளங்களில் வெளியிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

ஒரு வேளை பேஸ்புக் தவிர வேறு எந்த இணையதளத்திலாவது உங்கள் ஆபாச புகைப்படம் அல்லது வீடியோ வெளியானால், அந்த தளத்தில் உள்ள “Contact Us” அல்லது “Report” என்ற வசதியின் மூலம் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். பெரும்பாலான இணையதளங்கள் புகார் அளித்தவுடன் அந்த உள்ளடக்கத்தை விரைவாக நீக்குகின்றன.

இந்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத பட்சத்தில், தயக்கமின்றி பொலிஸில் புகார் அளிப்பது மிக அவசியம். அவ்வாறு செய்தால் மட்டுமே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும், அவர்கள் வேறு யாருக்கும் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும்.

பேஸ்புக்கில் உள்ள Privacy Settings என்ற வசதியை சரியாக அமைத்துக் கொண்டால், உங்கள் நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்கள் உங்கள் புகைப்படங்களைப் பார்க்க முடியாது. இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மார்பிங் குற்றங்களை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்த உதவும்.

பல பெண்களுக்கு இன்னமும் மார்பிங் என்றால் என்ன? மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை எப்படி நீக்குவது? என்பதுபற்றி முழுமையான தகவல்கள் தெரியாமல் இருக்கின்றன. ஒரு பெண்ணின் புகைப்படத்தில் உள்ள முகம் அல்லது தலையை அகற்றி, அதை இன்னொரு பெண்ணின் உடலுடன் பொருத்தி, அந்த படத்தை இணையத்தில் வெளியிடுவதையே மார்பிங் என்று அழைக்கிறார்கள். இந்த வகையான குற்றங்கள் உலகம் முழுவதும் அதிக அளவில் நடைபெற்று வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

அதனால், இணையதளங்களில் புகைப்படங்களை பகிரும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டும். இவ்வாறு கவனமாக இருந்தால், புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை பெருமளவு தடுக்க முடியும்.

மார்பிங் போன்ற குற்றங்கள் சில நேரங்களில் பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கி, உயிர் இழக்கும் நிலைக்கே தள்ளி விடுகின்றன. எனவே, பெற்றோர்களும் பெண்களும் இந்த இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

By admin