பட மூலாதாரம், Getty Images
இண்டிகோ ஏர்லைன்ஸ் நெருக்கடி ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கத் தயாராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமானச் சேவையைத் தொடங்க விரும்பும் ‘ஷாங்க் ஏர்’ (Shankh Air), ‘அல் ஹிந்த்’ (Al Hind) மற்றும் ‘பிளை எக்ஸ்பிரஸ்’ (Fly Express) ஆகிய நிறுவனங்களின் குழுக்களை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்ததாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பெரும் திட்டமிடல் நெருக்கடியில் சிக்கியது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான பயணிகள் தவிப்புக்குள்ளானதோடு, நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
உள்நாட்டு சந்தையில் இண்டிகோ 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளதால், இது விமானப் பயணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பெரும் நெருக்கடி காரணமாக, மோதி அரசு கடும் விமர்சனங்களைச் சந்திக்க நேரிட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இண்டிகோ நெருக்கடி பல நாட்கள் நீடித்தபோது, அரசின் விமானப் போக்குவரத்து கொள்கை கேள்விக்குறியானது.
உள்நாட்டு விமானச் சந்தையில் இண்டிகோ நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கமே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, அரசு மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, மக்களவையில் இண்டிகோ நெருக்கடி குறித்த விவாதத்தின் போது, விமானப் போக்குவரத்துத் துறை வலுவான மற்றும் ஆரோக்கியமான போட்டி நிறைந்த சூழலை உருவாக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மூன்று விமான நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கப்பட்ட தகவலை நாயுடு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அவர் தனது பதிவில், “இந்திய வான்வெளியில் பறக்கத் தயாராகி வரும் ஷாங்க் ஏர் , அல் ஹிந்த் ஏர் மற்றும் பிளை எக்ஸ்பிரஸ் ஆகிய புதிய விமான நிறுவனங்களின் குழுக்களை, கடந்த ஒரு வாரத்தில் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஷாங்க் ஏர் ஏற்கனவே அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றைப் பெற்றுவிட்டது, அல் ஹிந்த் ஏர் மற்றும் பிளை எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது தடையில்லா சான்றைப் பெற்றுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று புதிய விமான நிறுவனங்களின் வருகையால், பயணிகளுக்கு கூடுதல் தேர்வுகள் கிடைக்கும் என்றும், விமானப் போக்குவரத்துத் துறையில் 90 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இது சவாலாக அமையும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த புதிய நிறுவனங்கள் மண்டல அளவிலான இணைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்ஹிந்த் ஏர்லைன்ஸ்
அல் ஹிந்த் ஏர் நிறுவனத்தைத் தொடங்கியது கேரளாவைச் சேர்ந்த அல் ஹிந்த் குரூப் ஆகும்.
அந்த விமான நிறுவனத்தின் இணையதளத் தகவலின்படி, இந்த குழுமம் தனது விமானச் சேவையை ஒரு மண்டல பயணியர் விமானமாக தொடங்கும். ஆரம்பத்தில், உள்நாட்டு விமானச் சேவைகளுக்காக ATR 72-600 ரக விமானங்களை இயக்க இது திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு, சர்வதேச அளவில் தனது சேவையை விரிவுபடுத்த உள்ளது.
கொச்சி நகரம் அல் ஹிந்த் ஏர்லைன்ஸின் முக்கிய மையமாக இருக்கும்.
அதன் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, தனது செயல்பாட்டுத் தளத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கொச்சி சர்வதேச விமான நிலைய லிமிடெட் உடன் இந்த நிறுவனம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
ஃப்ளைஎக்ஸ்பிரஸ் விமான நிறுவனம்
தடையற்ற சான்றிதழ் பெற்ற இரண்டாவது விமான நிறுவனம் பிளை எக்ஸ்பிரஸ் ஆகும்.
பிளை எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான காலக்கெடு எதையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், விரைவில் தனது சேவைகளைத் தொடங்கப்போவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிளை எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தனது விமானச் சேவைகளைத் தொடக்கத்தில் மண்டல மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் செயல்படுத்த வாய்ப்புள்ளது.
கான்ச் விமான நிறுவனம்
பட மூலாதாரம், @RamMNK
ஷாங்க் ஏர் விமான நிறுவனத்தின் இணையதளத் தகவல்படி, இது விரைவில் உத்தரப் பிரதேசத்தின் மிகப்பெரிய முழு சேவை விமான நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது.
இந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் நொய்டா சர்வதேச விமான நிலையத்தை மையமாகக் கொண்டு தொடங்கும்.
இது உத்தரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பகட்டத்தில் வாரணாசி, கோரக்பூர், லக்னோ மற்றும் டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு இடையிலான வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும்.
ஷாங்க் ஏர் நிறுவனத்தின் தலைவராக ஷ்ரவன் குமார் விஷ்வகர்மா பொறுப்பு வகிக்கிறார். சமீபத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பகிர்ந்த புகைப்படத்தில், விஷ்வகர்மா அவரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டது.
இண்டிகோ நெருக்கடி மற்றும் அரசின் முடிவு
பட மூலாதாரம், Getty Images
இந்த மாதத் தொடக்கத்தில், இண்டிகோ நெருக்கடியால் அரசின் விமானப் போக்குவரத்து கொள்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, புதிய விமான நிறுவனங்களின் வருகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
உண்மையில், ‘புதிய விமானப் பணிக்குழு பணி நேர வரம்பு’ விதிகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளத் தவறியதால், இண்டிகோ நிறுவனம் பத்து நாட்களில் 4,500 விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
இதனால் ஏற்பட்ட பெரும் குழப்பம், இத்தகைய நெருக்கடியிலிருந்து மீள அரசுக்கு கடும் அழுத்தத்தை உருவாக்கியது.
இருப்பினும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) சில விதிகளைத் தளர்த்தி, 2026ம் ஆண்டு பிப்ரவரி வரை புதிய விதிகளைப் பின்பற்றுவதிலிருந்து இண்டிகோவிற்கு தற்காலிக விலக்கு அளித்தது.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமானக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்ததோடு, இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து ரீஃபண்டுகளையும் உடனடியாக வழங்க உத்தரவிட்டது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இண்டிகோவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் அமைச்சகம் விமான நிறுவனத்திற்கு அதன் தற்போதைய சேவைகளை பத்து சதவீதம் குறைக்க உத்தரவிட்டது.
டிசம்பர் 8 முதல் ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும், இந்த சூழல் டிசம்பர் இரண்டாவது வாரம் வரை நீடித்தது.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தை எவ்வளவு பெரியது?
இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக உள்ளது.
மக்களின் வருமான உயர்வு, வேகமான நகரமயமாக்கல் மற்றும் விமானப் பயணத்தின் மீதான ஆர்வம் ஆகியவை இத்துறையை வலுப்படுத்தியுள்ளன.
2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், 2025 செப்டம்பர் மாதத்திற்குள் விமான நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 162-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விமானப் பயணத்தை ஊக்குவிப்பதற்காக, அரசு உதான் (UDAN) திட்டத்தைத் தொடங்கியது.
2016ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கூறுகையில், “விமானப் போக்குவரத்து ஒரு காலத்தில் குறிப்பிட்ட சிலருக்கானது எனக் கருதப்பட்டது, ஆனால் விமானங்களின் வருகை இந்தச் சிந்தனையை மாற்றியுள்ளது. செருப்பு அணிந்த ஒரு சாமானிய மனிதனும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதே எனது கனவு,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இண்டிகோ போன்ற நெருக்கடியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
இண்டிகோ நெருக்கடியின் போது, விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர் ஹர்ஷ் வர்தன், பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது. முன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஒரு நிறுவனம் மூடப்பட்டால் மற்றொரு நிறுவனம் உள்ளே வரும் சூழல் இருந்தது. 2013-ல் இண்டிகோவின் சந்தைப் பங்கு சுமார் 32 சதவீதமாக இருந்தது, தற்போது அது 65 சதவீதத்தை எட்டியுள்ளது,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏகபோக ஆதிக்க உரிமைகளைத் தடுக்க அரசு கடுமையான விதிகளை இயற்ற வேண்டும். ஒரு நிறுவனம் எந்த அளவிற்குச் செயல்படலாம் என்பதற்கான வரம்புகளை அரசு நிர்ணயிக்க வேண்டும். முன்னதாக ஏகபோக ஆதிக்கத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, ஆனால் இப்போது அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் போட்டி ஆணையம் (CCI) பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கிறதே தவிர, நியாயமற்ற ஆதாயங்களைத் தடுப்பதில்லை,” என்றார்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது, இது பொதுவாக உலகிலேயே வேகமானது என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும்.

ஏகபோக ஆதிக்க உரிமையைத் தவிர்க்க இரண்டு வழிகள் உள்ளன என்கிறார் ஹர்ஷ் வர்தன்.
“முதலில், அரசு தனது செலவுக் கட்டமைப்பை நியாயப்படுத்த வேண்டும். தற்போது அதிகப்படியான வரிகள் விதிக்கப்படுகின்றன, விமான நிலைய நிர்வாகிகள் பயணிகளிடமிருந்து பல்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றனர். ஜிஎஸ்டி போன்ற பெயர்களில் பல்வேறு வரிகளும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் புதிய முதலீடுகள் இந்தத் துறைக்கு வரவில்லை. அரசு சரியான சூழலை உருவாக்காவிட்டால், புதிய முதலீடுகள் வராது” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மேலும், “ஒரு நிறுவனத்தின் சந்தைப் பங்கிற்கு உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டும். எந்தவொரு நிறுவனமும் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்க அனுமதிக்கக் கூடாது”என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு