பட மூலாதாரம், Getty Images
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் 158 பேர் இறந்தனர்.
விபத்து விசாரணை அறிக்கையில், விமானி தூங்கியதுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
13 ஆண்டு நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, விமானிகள் சோர்வை தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தப்படும் தருவாயில் உள்ளன.
ஆனால் தற்போது ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டும் பிப்ரவரி 10, 2026 வரை இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தோன்றினாலும், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் விமானங்கள் மற்றும் அவற்றில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இண்டிகோ பிரச்னைக்கு யார் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்தப் பிரச்னையின் பின்னணியைப் பார்ப்போம்.
பட மூலாதாரம், Getty Images
விமானிகள் எதிர்கொள்ளும் சோர்வு
இந்தக் கதை, மே 2010இல் துபையிலிருந்து மங்களூருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் இருந்து தொடங்குகிறது. அந்த விபத்தில் 158 பேர் இறந்தனர்.
விமானத்தை ஓட்டிச் சென்ற செர்பிய விமானி, அந்த மூன்று மணி நேர விமானப் பயணத்தில் பெரும்பாலான நேரம் தூங்கியதால், இந்த விபத்து நடந்ததாக விசாரணை அறிக்கை கூறுகிறது.
விமானிகள் எதிர்கொள்ளும் சோர்வு மற்றும் அதன் விளைவாக பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவில் விவாதம் எழுந்தது அதுவே முதல் முறையாகும்.
விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012ஆம் ஆண்டு, இந்தியாவில் விமான அட்டவணைகள் விமானிகள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது விமானப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று குற்றம் சாட்டி, பல விமானிகள் அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது இந்தப் பிரச்னை நீதிமன்றத்தை அடைந்தது.
விமானிகளின் சோர்வை சமாளிக்க சர்வதேச தரத்தின்படி விதிகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அமைப்புகள் கோரின.
ஜனவரி 2024இல், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப புதிய பணி விதிகளை அறிமுகப்படுத்தியது.
விமான நிறுவனங்கள் இவற்றை இரண்டு கட்டங்களாக – ஜூலை மற்றும் நவம்பர் 2025இல் – ஏற்றுக்கொள்ளவிருந்தன.
டெல்லி உயர்நீதிமன்றம் புதிய விமானப் பணிக்கான நேர வரம்பு விதிகளை அமல்படுத்துவதற்கான வழியை தெளிவுபடுத்தியபோது, கிட்டத்தட்ட 13 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்தது.
இந்த விதிகளில், முதல் பகுதி இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும், மீதமுள்ள பகுதி நவம்பர் 1ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.
இண்டிகோ நெருக்கடியின் தொடக்கம்
பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 2ஆம் தேதி டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமானது மற்றும் ரத்துசெய்யப்பட்டது குறித்து பயணிகள் முதன்முதலில் புகார் அளித்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸின் நெருக்கடி தொடங்கியது.
அடுத்த சில நாட்களில், நிலைமை வேகமாக மோசமடைந்தது, நவம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்த விமானிகளின் புதிய பணி நேர வரம்பு விதிகளுடன் தொடர்புடைய விமானிகளின் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
புதிய விதிகளின் கீழ், விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு காலம் 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இரவில் விமானத்தை தரையிறக்கும் வரம்புகளும் கடுமையாக்கப்பட்டன.
இந்த விதிகள் விமானிகளின் சோர்வைக் குறைக்க வடிவமைக்கப்பட்டன, ஆனால் இண்டிகோ இந்த மாற்றங்களை முன்கூட்டியே திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது, இதன் விளைவாக தேவையான அளவு ஊழியர்கள் (புதிய விதிகளின் கீழ் போதுமான ஓய்வு நேரம் பெற்றவர்கள்) இல்லாததாலும், அதன் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இயக்க முடியாததாலும் இது நிகழ்ந்தது.
இதன் விளைவு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பம்.
ஏர் இந்தியா போன்ற பிற முக்கிய விமான நிறுவனங்கள் விதிகளை அமல்படுத்தியதாகக் கூறினாலும், இண்டிகோ “சரியான நேரத்தில் அவற்றை முழுமையாக செயல்படுத்தும் நிலையில் தாங்கள் இல்லை” என்று ஒப்புக்கொண்டுள்ளது.
அரசாங்கம் என்ன செய்தது?
டிசம்பர் 4ஆம் தேதி, விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு, இண்டிகோவின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, “விமான நிறுவனம் நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து அமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்”.
“கூட்டத்தின் போது, விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்த தரவை இண்டிகோ வழங்கியது. விமானக் குழு திட்டமிடலில் உள்ள சவால்கள், திருத்தப்பட்ட பணி நேர வரம்பு (FDTL) விதிகளை செயல்படுத்துதல் மற்றும் வானிலை தொடர்பான கட்டுப்பாடுகள் ஆகியவை இடையூறுக்குக் காரணம்” என்று செய்திக்குறிப்பு கூறியது.
ஒரு நாள் கழித்து, டிசம்பர் 5ஆம் தேதி, விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றொரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.
அதில் ” விமானிகளின் பணி நேர வரம்பு உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்றும், “பயணிகள், குறிப்பாக முதியவர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய வேலைகளுக்காக, விமானப் பயணத்தை நம்பியிருப்பவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.
விமானப் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘இது மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றது’
பட மூலாதாரம், Getty Images
விமானிகளின் புதிய பணி நேர வரம்பு விதிகள் நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய (விமான) விமானிகள் சங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்த நடவடிக்கை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது என்று கூறியது.
சஞ்சய் லாசர் ஒரு பிரபலமான விமானப் போக்குவரத்து நிபுணர்.
இண்டிகோ நிறுவனத்திற்கு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைப் பற்றி அவர் பேசுகையில், “விதிகளைப் பின்பற்றாதவர்களிடம், நீங்கள் சமாளிக்கக்கூடிய வகையில், உங்களுக்காக விதிகளை நான் நிறுத்தி வைக்கிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது உண்மையில் உங்களை பழைய முறைக்கு இட்டுச் சென்றுள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசிய லாசர், “புதிய விதிகளை செயல்படுத்துவதை நிறுத்துவது, இனி விமானங்கள் விபத்தில் சிக்கும் என்று அர்த்தமல்ல. புதிய விதிகள் வெளியிடப்பட்ட பிறகும், பழைய விதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தன. ஆனால் இந்த விலக்கு ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, இது தான் பிரச்னை. இது சரியல்ல, கடந்த சில ஆண்டுகளாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோ நிறுவனத்திற்கு அளித்து வரும் சிறப்பு அந்தஸ்து தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது.” என்று கூறினார்.
இண்டிகோ புதிய விதிகளுக்கு ஏன் தயாராக இல்லை?
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது, அப்படி இருந்தும் இண்டிகோவால் ஏன் அதற்கு தயாராக முடியவில்லை? என்பதே தொடர்ந்து எழும் ஒரு கேள்வி.
இதற்கு பதிலளிக்கும் சஞ்சய் லாசர், “இந்தப் புதிய விதிகளை அவர்கள் பின்பற்ற விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். நான் இதை மிகவும் தீவிரமாகச் சொல்கிறேன், ஏனென்றால் அவர்களுக்கு 22 மாதங்கள் – அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் – இருந்தன. சிஏஆர் (சிவில் ஏவியேஷன் தேவைகள்) ஜனவரி 2024 இல் வெளியிடப்பட்டது. இந்த விஷயம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருந்தது. எனவே அவர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய நிறைய நேரம் இருந்தது. அவர்கள் மே-ஜூன் 2025 வரை கூட ஆட்சேர்ப்பு செய்தனர். ஆனால் தேவையான விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்தனர். புதிய விதிகளின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் அதை லேசாக எடுத்துக் கொண்டனர். புதிய விதிகளை செயல்படுத்துவது ஒத்திவைக்கப்படும் அல்லது தாமதமாகும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருந்ததாக நான் நினைக்கிறேன்.” என்கிறார்.
இந்த விவகாரம் குறித்து இண்டிகோவின் விளக்கத்தைப் பெற பிபிசி முயற்சித்தது, மேலும் எழுத்துவடிவில் கேள்விகளை அனுப்பியது. இந்த செய்தி வெளியிடப்பட்ட நேரத்தில், இண்டிகோ எந்த பதிலும் அளிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இந்த முழு நெருக்கடிக்கும் யார் பொறுப்பு?
டிசம்பர் 9 செவ்வாய்க்கிழமை, விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு சமூக ஊடக தளமான எக்ஸ்-இல், இண்டிகோவின் மொத்த விமான வழித்தடங்களைக் குறைப்பது அவசியம் என்று தனது அமைச்சகம் கருதுவதாகக் குறிப்பிட்டார்,
இண்டிகோவின் மொத்த வழித்தடங்களில் 10 சதவீதம் குறைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இண்டிகோ முன்பு போலவே அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து சேவை வழங்கும் என்றும் நாயுடு எழுதினார்.
ராம் மோகன் நாயுடுவின் கூற்றுப்படி, இண்டிகோவின் ஒட்டுமொத்த வழித்தடங்களில் 10% குறைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; ஆயினும்கூட, இண்டிகோ நிறுவனம் முன்பு போலவே அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து சேவையை வழங்கும்.
மோசமான வானிலை, திட்டமிடுதலில் ஏற்பட்ட பிழைகள் மற்றும் புதிய விதிகளை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறிய இண்டிகோ கடந்த சில நாட்களில் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளது.
அதே நேரத்தில், இதுவரையிலான அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பார்க்கும்போது, இந்த முழு நெருக்கடிக்கும் இண்டிகோவையே பொறுப்பேற்கச் செய்வது போல் தெரிகிறது.
அப்படியானால் யார் பொறுப்பு?
சஞ்சய் லாசரின் கூற்றுப்படி, இதில் பலருக்கும் பொறுப்பு உள்ளது.
” விமானப் போக்குவரத்து அமைச்சர் மீது தவறு இல்லை என்றாலும் அவருக்கும் பொறுப்பு உள்ளது. இண்டிகோவின் நீட்டிக்கப்பட்ட அட்டவணையை அங்கீகரித்த அதே இணை இயக்குநர் ஜெனரல் இப்போது விசாரணை மேற்கொள்கிறார். இண்டிகோவின் விமானிகளை மேற்பார்வையிடாத அதே தலைமை விமான செயல்பாட்டு ஆய்வாளர் இப்போது அவர்களின் பயிற்சியை மேற்பார்வையிடுகிறார். அரசாங்கம் ஏன் இந்த நபர்கள் மீது சிவிசி (CVC) அல்லது சிபிஐ (CBI) விசாரணையை நடத்தவில்லை? அமைச்சகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள கூட்டுச் சதி ஆழமானது. இவர்கள் அனைவரும் பொறுப்பு என்று நான் நம்புகிறேன்.” என்கிறார் அவர்.
இந்த விஷயத்திற்கான முழுப் பொறுப்பும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரிடமே உள்ளது என்று கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகிறார்.
“அவர்கள் நீதிமன்றம் பிறப்பித்த கட்டாய பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து, ஓய்வு மற்றும் விடுப்புக்கான ஏற்பாடுகளை ஒத்திவைத்தனர். இதுவும் நீதிமன்ற அவமதிப்புதான்” என்று அவர் கூறுகிறார்.
“இண்டிகோ நிறுவனம் விதிமுறைகளை மீறி, அட்டவணையை மாற்றியமைத்து தவறு செய்துள்ளது. போதுமான பணியாளர்கள் இல்லை என்பதை அறிந்தும் அவர்கள் சமீபத்தில் ஒரு குளிர்கால அட்டவணையை சமர்ப்பித்தனர். ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்ட அவர்கள், குளிர்கால அட்டவணையில் இன்னும் அதிக விமான பயணங்களைச் சேர்த்தனர். டிஜிசிஏ இந்த அட்டவணையை அங்கீகரித்தது. எனவே ஒருவர் மட்டுமல்ல, மூன்று தரப்பு மீதும் தவறு உள்ளது. அனைவருக்கும் சமஅளவு பொறுப்பு உள்ளது.” என்கிறார் மோகன் ரங்கநாதன்.
பட மூலாதாரம், Getty Images
மற்ற விமான நிறுவனங்களுக்கு இது ஏன் பொருந்தவில்லை?
புதிய விமானப் பணி நேர வரம்பு விதிகள் இண்டிகோ நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தால், இந்த விதிகள் ஏன் மற்ற விமான நிறுவனங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் பெரிய கேள்வி.
இதைப் புரிந்துகொள்வதற்கு முன், சில புள்ளிவிவரங்களைப் பார்ப்பது முக்கியம்.
இண்டிகோ நிறுவனத்திடம் 434 விமானங்களை இயக்க 5,085 விமானிகள் உள்ளனர். மறுபுறம், ஏர் இந்தியா நிறுவனத்திடம் 191 விமானங்களை இயக்க 6,350 விமானிகள் உள்ளனர்.
எனவே ஏர் இந்தியாவிடம் இண்டிகோவை விட பாதிக்கும் குறைவான விமானங்கள் உள்ளன, ஆனால் அவர்களிடம் அதிகமான விமானிகள் உள்ளனர் என்பது தெளிவாகிறது.
புதிய விதிகள் ஏன் ஏர் இந்தியா மீது எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பிபிசி ஏர் இந்தியாவிடம் கேட்டது.
இந்தச் செய்தி வெளியிடப்படும் வரை ஏர் இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.
இருப்பினும், அந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த ஊழியர், ‘பல சவால்கள் இருந்தபோதிலும், நவம்பர் 1ஆம் தேதிக்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா அதன் ரோஸ்டரிங் (Rostering- பணி அட்டவணைகள்) மென்பொருள் அமைப்பை புதிய தரநிலைகளுக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்ததாகக் கூறினார்.
“புதிய விதிமுறைகளின்படி ஏர் இந்தியா ஏற்கனவே அக்டோபர் மாத நடுப்பகுதியில் விமானிகளுக்கான ரோஸ்டர் (Roster) பட்டியலை வெளியிட்டது, அதாவது நவம்பர் 1 காலக்கெடுவிற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பு. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான விமானிகளை தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் தேவையான விமானிகள் குழுவும் முன்கூட்டியே உருவாக்கப்பட்டது” என்று ஊழியர் கூறினார்.
சஞ்சய் லாசரின் கூற்றுப்படி, மற்ற விமான நிறுவனங்கள் விமானிகளை ஆட்சேர்ப்பு செய்ததால் அவை பாதிக்கப்படவில்லை.
“ஆகாசா விமான நிறுவனம் உரிய காலத்திற்கு முன்பே ஆட்களைப் பணியமர்த்தியதால், அங்குள்ள விமானிகளுக்குக் குறைவான விமானப் பயணங்களே கிடைப்பதாக அவர்கள் புகார் அளித்தனர் என்று தகவல்கள் வந்தன. மற்றொரு காரணம் என்னவென்றால், ஏர் இந்தியா ஒரு முழுச் சேவை விமான நிறுவனம். அது இண்டிகோவை விட மிகவும் வலுவான கட்டமைப்பில் செயல்படுகிறது. அதேசமயம், இண்டிகோ மிகக் குறைந்த செலவின மாதிரியில் செயல்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உதாரணமாக, இண்டிகோ ஒரு விமானத்திற்கு ஐந்து அல்லது ஆறு விமானிகளை கொண்டுள்ளது, ஏர் இந்தியா சுமார் 7.5 விமானிகளை கொண்டுள்ளது. எனவே, ஏர் இந்தியா மற்றும் பிற நிறுவனங்கள் சரியான நேரத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால், கூடுதல் விமானிகளைக் கொண்டுள்ளன. இண்டிகோ செலவுகளைக் குறைக்கவும் அதன் ஊழியர்களிடமிருந்து அதிக உழைப்பைப் பெறவும் முயற்சித்தது, இது ஓரளவுக்கு நல்லது. ஆனால் இதற்கும் வரம்புகள் உள்ளன.” என்கிறார்.
இது தொடர்பாக பேசிய கேப்டன் மோகன் ரங்கநாதன், “மற்ற விமான நிறுவனங்களிடம் போதுமான பணியாளர்கள் உள்ளனர், மேலும் அட்டவணை விதிகளின்படி உள்ளது. ஆனால் இண்டிகோ அவ்வாறு செய்யவில்லை. அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது. சமீபத்திய நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டு பயணிகள், சர்வதேச பயணிகள் அல்ல என்று நான் கூறுகிறேன். எந்த சர்வதேச இண்டிகோ விமானங்களும் பாதிக்கப்படவில்லை.”
“விமான நிறுவனத்தை தண்டிக்க விரும்பினால், உள்நாட்டு பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இண்டிகோவின் சர்வதேச விமான அனுமதியை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து, உள்நாட்டு விமான வழித்தடங்களுக்கு விமானிகள் மற்றும் விமானங்களை ஒதுக்கி, இங்குள்ள பிரச்னையை தீர்க்கவும். ஆனால் இண்டிகோ மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லாததால் அரசாங்கம் இதைச் செய்யாது.” என்கிறார்.
அடுத்த கட்டம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
கடந்த 15 ஆண்டுகளில், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் மற்றும் கோ ஏர் போன்ற பல இந்திய விமான நிறுவனங்கள் கடன் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் காரணமாக மூடப்பட்டுவிட்டன.
அவை மூடப்பட்டதைத் தொடர்ந்து, இண்டிகோ விரைவாகப் பலம் பெற்றது. சிறிய நகரங்களுக்கும் புதிய வழித்தடங்களுக்கும் விமானங்களை இயக்கத் தொடங்கியது, இண்டிகோவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியது, பல தசாப்தங்களாக எந்த இந்திய விமான நிறுவனமும் வைத்திருக்காத சந்தைப் பங்கை அது அடைந்தது.
ஆனால் சமீபத்திய நெருக்கடி இண்டிகோவின் எதிர்காலப் பாதை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
“புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளன என்பது ஒரு வருடமாகவே தெரிந்திருந்தும், சமீபத்திய விமான இடையூறுகள் இண்டிகோவின் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் வள மேலாண்மையில் பெரும் குறைபாடுகளை வெளிப்படுத்தியதாக” புகழ்பெற்ற மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.
மூடிஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, “இண்டிகோவின் குறைந்த கட்டணச் செயல்பாடுகள் சாதாரண நேரங்களில் நன்றாக இருந்தன. ஆனால் விதிமுறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும் வலிமை இல்லாததால், டிசம்பர் 5 அன்று சிஸ்டம் ரீசெட் செய்யப்பட்டு சுமார் 1,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.”
இண்டிகோ நிறுவனம், “பல நாட்களாகத் தொடர்ந்த மேம்பாட்டு பணிகளுக்குப் பிறகு, தங்களது விமான சேவைகள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக” டிசம்பர் 9 அன்று அறிவித்தது.
விமான நிறுவனம் தனது இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயங்கும் என்று கூறியது, இருப்பினும் நெட்வொர்க் சிறிது மாற்றப்பட்டுள்ளது.
இன்று, இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தையில் இண்டிகோ சுமார் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இண்டிகோ போன்ற நெருக்கடி மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தாத சந்தையை உருவாக்க வேண்டும் என்று சஞ்சய் லாசர் கூறுகிறார்.
“இந்தியாவில் 50% வழித்தடங்களில் இண்டிகோ மட்டுமே ஒரே நிறுவனமாக உள்ளது. அவர்களின் மொத்த பங்கை 50%க்கும் கீழ் குறைக்காவிட்டால், இயல்புநிலையை மீட்டெடுக்க முடியாது. இந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இண்டிகோ, டிஜிசிஏ மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மீதான ஒரு சிறப்புத் தணிக்கை யார் மீது தவறு என்பதை வெளிப்படுத்தும். நிறைய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு