செலி பெரெய்ராவுக்கு 82 வயதாகிறது. அவர் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மருத்துவர் கண் பார்வையைப் பாதுகாக்க பழங்களைச் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தும் வீடியோவை கண்டார். அது நம்பத் தகுந்ததாகத் தோன்றியதால் அவர் அந்த ஆலோசனையை உண்மையென்றே கருதினார். ஆனால் அந்த “மருத்துவர்” உண்மையான மனிதர் இல்லை. அவரது முகமும் குரலும் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டவை.
யூடியூப் அந்த வீடியோவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு இருந்தாலும், அந்த வீடியோ சுமார் 3 லட்சம் பார்வைகளையும் நூற்றுக்கணக்கான கமென்ட்களையும் பெற்றிருந்தது. அந்த எச்சரிக்கை இருந்தபோதிலும், தாம் உண்மையான மருத்துவரின் ஆலோசனையைத்தான் கேட்பதாகவே நம்பியதாக பெரெய்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
இது ஏதோவொரு ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. ஒரு விசாரணையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவர்களைப் பயன்படுத்தும் 29 போர்த்துகீசிய மொழி யூடியூப் சேனல்கள் கண்டறியப்பட்டன. அவை மொத்தமாகக் குறைந்தபட்சம் 7 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளன.
இந்தப் போக்கு உலகளாவிய அளவிலும் பரவி வருகிறது. போர்ச்சுகீஸ், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலியன், போலிஷ், ஜெர்மன், துருக்கி உள்ளிட்ட பல மொழிகளில் ஏஐ மருத்துவர்களைக் கொண்டு வீடியோக்கள் உருவாக்குவது எப்படி எனக் கற்றுக் கொடுக்கும் குறைந்தது 50 யூடியூப் சேனல்களை பிபிசி பிரேசில் சேவை கண்டறிந்துள்ளது.
இந்த உள்ளடக்கத்தை உருவாக்குவோர் முதியவர்களை லாபகரமான இலக்காகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதிக ஓய்வு நேரமும், பொருளாதாரத் திறனும் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
தனது உருவம் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறும் ஓர் உண்மையான மருத்துவர், போலி மருத்துவர்களின் ஆலோசனைகள் முதியவர்களின் உடல்நலத்திற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, “உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம்” என எச்சரித்துள்ளார்.
யூடியூப்பின் மூல நிறுவனமான கூகுள், ஏஐ மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களுக்கும் தளத்தின் விதிமுறைகள் பொருந்தும் என்றும், கடுமையான நிஜ உலக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தவறான மருத்துவ தகவல்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Celi Ferreira
படக்குறிப்பு, செலி பெரெய்ரா தான் யூடியூப் சேனலில் பார்த்த ஏஐ மருத்துவரை உண்மையான மருத்துவர் என்று நம்பியிருந்தார்.
அச்சத்தை தூண்டும் வீடியோ உத்தி
இந்த வகை வீடியோக்களின் நடைமுறை பெரும்பாலும் ஒன்றுதான். வெள்ளை கோட் அணிந்த நம்பிக்கை தரும் முகம், அமைதியான செயற்கை குரலில், அன்றாட உணவுகள், மருந்துகள் அல்லது பழக்க வழக்கங்கள் முதியவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக எச்சரிக்கும். பின்னர், இதுவரை யாரும் கவனிக்காத ஓர் “அற்புதத் தீர்வை” பரிந்துரைக்கும்.
சில வீடியோக்களில் மருத்துவர் முழுமையாகக் கற்பனையாக உருவாக்கப்படுகிறார். வேறு சிலவற்றில், உண்மையான மருத்துவர்களின் முகம், குரல் அல்லது அடையாளம் அவர்களது அனுமதி இன்றி ஏஐ மூலம் நகலெடுக்கப்படுகிறது. இரண்டுமே பார்வையாளர்களுக்கு தகுதி பெற்ற மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ஏஐ மருத்துவர்களைப் பயன்படுத்தும் 29 போர்த்துகீசிய மொழி சேனல்களை, பிரேசிலின் லாப நோக்கமற்ற பத்திரிகை அமைப்பான CTRL+Z தனது ஆய்வில் வெளிக்கொணர்ந்தது. பின்னர் பிபிசி பிரேசில் சேவை, இதேபோன்ற தலைப்புகள் மற்றும் செயல்பாட்டு முறைகளை ஆய்வு செய்து மேலும் பல சேனல்களையும் கண்டறிந்தது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, அந்த சேனல்களில் வெளியான வீடியோக்களில் பதிவான சுமார் 27,000 கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் பயனாளர்கள் நடத்தை மாற்றங்களை வெளிப்படுத்தும் பதிவுகள் அடையாளம் காணப்பட்டன.
பட மூலாதாரம், Getty Images
மருந்துகளை நிறுத்தும் முதியவர்கள்
பல முதியவர்கள் ஏஐ மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றியதாக கருத்துகளில் தெரிவித்துள்ளனர். சிலர் வீட்டு வைத்தியங்களைத் தொடங்கியதாகவும், சிலர் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை நிறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
இதுபோல, 85 வயதான ஒருவர், வயிற்றில் அமில உற்பத்தியைக் குறைக்கும் ஒமேப்ரசோல் மருந்தை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு 77 வயது மூதாட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவரைச் சந்திக்கவில்லை என்றும் அல்ஜைமர் நோய் தொடர்பான ஆலோசனைகளுக்கு ஏஐ மருத்துவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். பிபிசி பிரேசில் சேவை கண்டறிந்த ஏஐ பயிற்சி வீடியோக்களில், பார்வையாளர்கள் உடனடி உடல்நல ஆபத்தில் இருப்பதாக உணரும்படி பயத்தையும் அவசர உணர்வையும் தூண்டும் தலைப்புகளை உருவாக்குமாறு கற்றுக் கொடுக்கப்படுவது தெரிய வந்தது.
இந்த சேனல்களை நடத்துவோர் யூடியூப் பார்வைகள் மூலமாகவும், தங்களது சேனல்களில் விளம்பரப்படுத்தப்படும் மின் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் மூலமாகவும் வருமானம் ஈட்டுகின்றனர்.
பிரேசிலை சேர்ந்த பயிற்சியாளர் ஜெஃப் கோயிம்ப்ரா, இத்தகைய சேனல்களை நடத்துபவர்கள் மாதத்திற்கு 30,000 ரெய்ஸ் (சுமார் 5,816 அமெரிக்க டாலர்) வரை சம்பாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஒரு வீடியோவில், “நீங்கள் உறங்கச் செல்லும் முன் இதைக் கவனியுங்கள். தூக்கத்திலேயே உயிரிழக்காமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்” போன்ற அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கியிருந்தார்.
பிபிசி பிரேசில் சேவை இதுகுறித்து தொடர்புகொண்ட பிறகு, அந்த வீடியோக்களில் ஒன்று பொது மக்கள் பார்வையில் இருந்து அகற்றப்பட்டது.
விளக்கம் அளித்த கோயிம்ப்ரா, காட்டப்பட்ட ஏஐ சேனல்கள் தனது சொந்த சேனல்கள் அல்ல, எடுத்துக்காட்டுகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்று தெரிவித்தார். மேலும், இந்தத் தகவல்கள் மருத்துவருக்கு மாற்றாக இருக்க வேண்டுமென்ற நோக்கமின்றி ஏஐ தகவல் உள்ளடக்கங்களை உருவாக்குவது குறித்தே தான் பயிற்சி அளிப்பதாகவும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘மனிதாபிமானமே இல்லை’
பிரபல பிரேசிலிய மருத்துவர் ஹெலியோ பிராசிலெய்ரோவின் உருவத்தை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தி, பயத்தை தூண்டும் உடல்நலக் கூற்றுகள் மற்றும் மருந்துகளுக்குப் பதிலான இயற்கை சிகிச்சைகளை விளம்பரப்படுத்தும் குறைந்தது ஐந்து யூடியூப் சேனல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
சுமார் மூன்று இலட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட தனது யூடியூப் சேனலை நடத்தி வரும் மருத்துவர் ஹெலியோ பிராசிலெய்ரோ, இந்த வீடியோக்கள் தொடர்பாக யூடியூப் நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன், சாவோ பாவ்லோ காவல்துறையில் வழக்கு ஒன்றும் பதிவு செய்துள்ளார்.
“இதை உருவாக்குவோருக்கு எந்த மனிதாபிமானமும் இல்லை. பணம் சம்பாதிக்க இதுபோன்று செயல்படுவது முதியவர்களின் உயிரையே பறிக்கக்கூடும்,” என்று அவர் பிபிசி பிரேசில் சேவையிடம் கூறினார்.
அவர், தனது முகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது ஒருபுறம் என்றாலும், அந்த வீடியோக்களை பார்த்து முதியவர்கள் மருந்துகளை நிறுத்திவிடக் கூடும் என்பதே உண்மையான கவலை என்றார்.
சாவோ பாவ்லோவின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இஸ்ரேலைட் மருத்துவமனையில் பணியாற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ஜெய்மே சலடெக் கில், இதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து குறித்து எச்சரிக்கிறார்.
அவரது கூற்றுப்படி, “மருத்துவ பலன் தராதவற்றை நோயாளிகள் பயன்படுத்தத் தொடங்கலாம். அது நோயை மேலும் மோசமாக்குவதோடு மட்டுமின்றி, சரியான நோயறிதலை தாமதப்படுத்தவும் செய்யும்,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், YouTube/Dr. Hélio – MedInformações
படக்குறிப்பு, உண்மையான மருத்துவரின் அடையாளத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏஐ மருத்துவர்
மேலும், “ஒரேயொரு வீடியோ அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தருமென நம்புவதற்குப் பதிலாக, முறையான மருத்துவப் பரிசோதனைகளும் வலுவான சுகாதார அமைப்பும்தான் தேவை,” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பிரேசிலிய சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, தங்களை மருத்துவர்களாக பொய்யாகக் காட்டிக் கொண்டு உள்ளடக்கங்களை உருவாக்குவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
வீடியோக்களில் இடப்படும் ஏஐ குறிச்சொற்கள் மற்றும் எச்சரிக்கை லேபிள்கள், அந்த உள்ளடக்கம் மாற்றியமைக்கப்பட்டதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவுவதாகவும் கூகுள் கூறியுள்ளது.
CTRL+Z அமைப்பின் ஆய்வு தொடர்பாக பிபிசி பிரேசில் சேவை கூகுளை தொடர்புகொண்ட பின்னர், யூடியூப் சில பெரிய சேனல்களை நீக்கியது. அந்த சேனல்கள் மட்டும் சேர்ந்து சுமார் 4.1 கோடி பார்வைகளைப் பெற்றிருந்தன.
இதற்கிடையில், செலி பெரெய்ரா இணையத்தில் தாம் பார்க்கும் தகவல்களை மேலும் நுட்பமாக அடையாளம் காணக் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறுகிறார்.
“என் வயதுக்கு நான் கணினியை நன்றாகப் பயன்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், எது ஏஐ உருவாக்கியது, எது உண்மையானது என்பதை இன்னும் என்னால் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.