வளைகுடா நாடுகளில் இருந்து குறிப்பாக துபையில் இருந்து ரகசியமாக தங்கம் கொண்டு வரப்படும் செய்திகளை இந்திய ஊடகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ் துபையில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை எடுத்து வந்தபோது வருவாய் புலனாய்வு துறையினரால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) கைது செய்யப்பட்டார்.
அதன் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. பெங்களூருவின் கெம்பகெளடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவ் தங்கத்துடன் பிடிபட்டார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரு தூதரக பார்சலில் இருந்து 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோகிராம் எடையுள்ள (66 பவுண்டுகள்) 24 காரட் தங்கத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் கைப்பற்றியது.
இதையடுத்து கேரள அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கரின் பெயர் இந்த கடத்தலில் அடிபட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1. இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து ஏன் தங்கம் கொண்டு வருகிறார்கள்?
இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது ஒருவிதமான கவர்ச்சி உள்ளது. கூடவே இது ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் உள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம்.
இந்தியாவில் தங்கத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
இதனால்தான் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து தங்கம் வாங்குகிறார்கள். அங்கு தங்கத்துக்கு வரி கிடையாது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உலகிலேயே அதிகளவில் தங்கம் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது
வரி இல்லாத காரணத்தால் இந்தியாவை ஒப்பிடும்போது அங்கு தங்கத்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது. தங்கத்தின் குறைவான விலை அனைவரையும் ஈர்க்கிறது.
2025 மார்ச் 5 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 83,670 ரூபாயாக இருந்தது. அதேசமயம் இந்தியாவில் அதன் விலை 87,980 ரூபாய்.
வெளிநாட்டில் இருந்து வரும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் கொண்டு, வந்தால் அது குறித்து விமான நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது கடத்தலின் கீழ் வந்துவிடும்.
2. வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்கத்தை வெளிநாட்டில் இருந்து எடுத்து வரும்போது அதுகுறித்த விவரங்களை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதற்கான ரசீதையும் வைத்திருக்க வேண்டும்
வெளிநாட்டில் இருந்து ஒரு ஆண் 20 கிராமும், ஒரு பெண் 40 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். அதற்கு சுங்க வரி கிடையாது.
தங்கம் கொண்டு வருவதற்கான கட்டணத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) நிர்ணயித்துள்ளது.
கட்டணம் செலுத்தி எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் கொண்டு வர முடியுமா?
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 40 கிராம் தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உறவுமுறை குறித்த சான்றை அளிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் படி இந்திய குடிமக்கள் அனைத்து வகையான தங்கத்தையும் (நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள்) கொண்டு வரலாம்.
3. தங்கக் கடத்தல் ஏன் நடக்கிறது?
பட மூலாதாரம், PIB
படக்குறிப்பு, நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து திரும்பியபோது 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் அங்கு அதன் விலை குறைவாக இருப்பதே ஆகும். அங்கு தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அதன் விலை குறைவாக உள்ளது.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கு தங்கத்தின் மீதான வரி மிக அதிகம். இதன் காரணமாக, தங்கத்தின் விலை உண்மையான விலையை விட அதிகமாக உள்ளது.
குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்க வேண்டும் என்ற பேராசை கடத்தலுக்கு வழி வகுக்கிறது.
தலைமறைவு கும்பல் தலைவர்கள் ஹாஜி மஸ்தான் மற்றும் தாவூத் இப்ராகிம் போன்றோர், கடல் வழியாக தங்கத்தை கடத்தி வந்தனர். ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் புதிய புதிய முறைகள் உருவாகி வருகின்றன.
4. மிக அதிக அளவு கடத்தல் தங்கம் எங்கிருந்து வருகிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெருமளவு கடத்தல் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்தே இந்தியாவுக்கு வருகிறது
நாட்டின் பெரும் பங்கு கடத்தல் தங்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வருகிறது. இதையடுத்து, மியான்மர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தவிர சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் கடத்தல்காரர்கள் தங்கம் கொண்டு வருகிறார்கள்.
கடத்தல் தங்கத்தில் 10 சதவிகிதம் மட்டுமே பிடிபடுகிறது என்று டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2023-24 இல் சிபிஐசி சுமார் 4,869.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது.
மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்கக் கடத்தலில் முன்னணியில் உள்ளன. சுமார் 60 சதவிகித கடத்தல் வழக்குகள் இங்குதான் பதிவு செய்யப்படுகின்றன.
இறக்குமதி வரியை 15 இல் இருந்து 6 சதவிகிதமாக குறைத்த பிறகு கடத்தல் குறைந்துள்ளது என்று தங்கக் கடத்தல் தொடர்பாக சிபிஐசி தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் சமீபத்தில் தெரிவித்தார்.
தங்கம் கடத்தும் போது ஒருவர் பிடிபட்டால் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் அபராதம், ஆயுள் தண்டனை மற்றும் வெளிநாடு செல்ல வாழ்நாள் தடையும் விதிக்கப்படலாம்.