படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை எட்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.
முத்தாக்கியின் வருகையை உறுதிப்படுத்திய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், முத்தாக்கி இந்தியாவுக்கு வர, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் குழு அக்டோபர் 3-ஆம் தேதி அனுமதி அளித்ததாகக் கூறியிருந்தார்.
முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார். அதனால்தான் அவர் இந்தியாவுக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் அக்டோபர் 8-ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு வந்துள்ள வேளையில், முத்தாக்கியும் வர உள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
பிரதமர் நரேந்திர மோதியை முத்தாக்கி சந்திப்பாரா, இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
முத்தாக்கி தனது இந்திய பயணத்தின் போது பல வணிகக் குழுக்களைச் சந்திக்க உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், தாலிபன்களின் அங்கீகாரம் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் பெண் கல்வியைத் தடை செய்வது போன்ற கடுமையான மனித உரிமை மீறல்களைக் கொண்ட பல முடிவுகளை எடுத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உலகில் தாலிபன்களை அங்கீகரித்த ஒரே நாடு ரஷ்யா மட்டுமே.
ஆப்கன் ஊடகங்களில் விவாதம் நடப்பது ஏன் ?
இந்தியாவின் முன்னணி ஆங்கில செய்தித்தாளான தி இந்துவின் தகவலின்படி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் முத்தாக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
முத்தாக்கியின் இந்திய வருகை ஆப்கானிய ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அமு டிவி எனும் ஊடகம் பாஷ்டோ மொழி மற்றும் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டது.
அமு டிவி வெளியிட்ட செய்திபடி, “தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, இந்தியா மற்றும் ரஷ்ய பயணங்களை முன்னிட்டு, தாலிபன் தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடாவிடமிருந்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பெற்றுள்ளார்.
இந்த இரண்டு பயணங்களுக்கும் முன் அகுண்ட்சாடா, முத்தாக்கியை கந்தஹாருக்கு ஒரு சந்திப்புக்காக அழைத்திருந்தார். ஆனால், அந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியாவுக்கு செல்ல ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் முத்தாக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது”.
”கடந்த வெள்ளிக்கிழமை கந்தஹாரில் முத்தாக்கி, அகுண்ட்சாடாவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கந்தஹாரில் வசித்து வரும் அகுண்ட்சாடா, முக்கிய கொள்கை முடிவுகளின் மையமாக உள்ளார். அகுண்ட்சாடாவின் எதிர்ப்பின் காரணமாவோ அல்லது வேறு நடைமுறை காரணங்களாலோ சமீப மாதங்களில் முத்தாக்கியின் பாகிஸ்தான் பயணங்கள் பலமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அமு டிவி தெரிவித்துள்ளது.
“இந்தியா ஆப்கானிஸ்தான் குடியரசை ஆதரித்து வருவதோடு, தாலிபன்களுடனான உறவில் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் பாகிஸ்தானுடனான நீண்டகால சண்டையுமே இந்தியா தாலிபன்களுடனான உறவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.”
மேலும், “முத்தாக்கி கடந்த மே மாதத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசியிருந்தார். மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி முத்தாக்கியைச் சந்தித்தார். சமீப மாதங்களில் பல தாலிபன் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்” என்றும் அமு டிவி செய்தி குறிப்பிடுகிறது.
“ஆப்கன் மருத்துவ மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஹம்துல்லா ஜாஹித், செப்டம்பரில் இந்தியாவுக்குப் பயணம் செய்து சர்வதேச மருந்து மற்றும் சுகாதாரக் கண்காட்சியில் கலந்து கொண்டார். அதே மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தின்போது இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பியது. பின்னர், இரானின் சபாஹர் துறைமுகம் வழியாகவும் உதவிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானை சென்றடைந்தன.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் எட்டு நாட்கள் இந்தியாவில் இருப்பார், மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரையும் சந்திக்க உள்ளார்.
‘பாகிஸ்தான் முக்கிய காரணம்’
ஆப்கானிஸ்தானின் ஆங்கில செய்தி வலைத்தளமான டோலோ நியூஸ், அக்டோபர் 4 அன்று வெளியிட்ட செய்தியில், ”தாலிபனுக்கு அங்கீகாரம் பெறுவது, முத்தாக்கியின் இந்திய பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது”
“இந்தியா இப்போது தாலிபன்களை அங்கீகரிக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்கிறார், டோலோ நியூஸின் அரசியல் ஆய்வாளர் சையத் அக்பர் சியால் வார்டக்.
“அது போன்ற எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு இந்தியா பிற பிரச்னைகளை பரிசீலித்து வருகிறது,” என்றார்.
“இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சமீப ஆண்டுகளில் பல நேர்மறையான முன்னேற்றங்களை கண்டுள்ளன. இந்த பயணம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது” என்று டோலோ நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
“இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இதற்கான முக்கிய காரணம் ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் உறவுகள் மோசமடைந்து வருவது தான். இந்த நிலையை இந்தியா தன் நலனுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது,” என்கிறார் டோலோ நியூஸின் சர்வதேச உறவுகள் ஆய்வாளர் வாஹித் ஃபகிரி.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. உலகில் தாலிபன்களை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா. இதுவரை பாகிஸ்தான் உட்பட வேறு எந்த நாடும் தாலிபன்களை முறையாக அங்கீகரித்ததில்லை.
“இந்தியா தாலிபன்களை அங்கீகரித்தால், அது பிற நாடுகளையும் அதேபோல் செய்ய ஊக்குவிக்கும். இருப்பினும், மற்ற நாடுகள் இந்தியாவின் முடிவைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கின்றன,” என்கிறார் டோலோ நியூஸின் அரசியல் ஆய்வாளர் அஜீஸ் மர்ரி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜனவரியில், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாக்கியைச் சந்தித்தார்.
மறுபுறம், தாலிபன்களுடனான உறவை இந்தியா வலுப்படுத்திக் கொண்டிருப்பதை பல ஆப்கானியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிய பத்திரிகையாளர் ஹபீப் கான் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள இந்தியாவே, தாலிபன் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் விருந்தோம்பல் ஆப்கானிய மக்களுக்கு செய்யப்படும் துரோகம். இது, பள்ளியில் இருந்து தடை செய்யப்பட்ட சிறுமிகளின் முகத்தில் அறைவதைப் போன்றது. பயங்கரவாதம் மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறையின் அடிப்படையில் இயங்கும் ஆட்சியை புகழ்ந்து பேச வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.