• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவிடம் தோல்வி: பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வழிகள் என்ன?

Byadmin

Feb 24, 2025


காணொளிக் குறிப்பு, சச்சின், சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோலி!

இந்தியாவிடம் தோல்வி: பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வழிகள் என்ன?

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் குஷ்தில் ஷா வீசிய 43வது ஓவரின் மூன்றாவது பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு விளாசிய கோலி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதுமட்டுமின்றி அந்த பவுண்டரி மூலம் விராட் கோலி தானும் ஒரு புதிய உயரத்தை எட்டினார்.

ஒருநாள் போட்டிகளில் தனது 51வது சதத்தையும் ஒட்டுமொத்தமாக தனது 82வது சதத்தையும் அந்த பவுண்டரி மூலம் விராட் கோலி பதிவு செய்தார்.

மேலும், இந்த போட்டிக்கு தொடங்குவதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் 14,000 ஆயிரம் ரன்களை கடப்பதற்கு கோலிக்கு 15 ரன்களே தேவைப்பட்ட நிலையில், அந்த மைல்கல்லை குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

14 ஆயிரம் ரன்களை எட்ட சச்சினுக்கு 350 இன்னிங்ஸ்களும் சங்கக்காராவுக்கு 378 இன்னிங்ஸ்களும் தேவைப்பட்ட நிலையில் 36 வயதாக விராட் கோலி இதை 287 இன்னிங்ஸ்களில் சாத்தியப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.

இந்த போட்டிக்கு முன்பு பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கோலியின் ஃபார்ம் பற்றி குறிப்பிடத் தவறவில்லை, விமர்சிக்கத் தவறவில்லை. ஆனால், அனைத்துக்கும் இந்த சதத்தின் மூலம் கோலி பதில் அளித்துள்ளார்.

சரி, இப்போது போட்டியின் சுருக்கத்தை பார்க்கலாம்.

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது. அந்த தோல்விக்கு பின் ஆறு முறை ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வென்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய பவுலர்கள் தொடக்கம் முதலே தலைவலி கொடுத்தனர்.

பாபர் ஆசம் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார். பாண்டியாவின் பந்துவீச்சு ஸ்லோபால், ஸ்விங் என ஏகப்பட்ட வேரியேஷன்களுடன் அற்புதமாக இருந்தது. 8 ஓவர்களையும் 3.4 ரன் ரேட்டில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா.

ஜடேஜா, அக்ஸர், குல்தீப் ஆகிய மூவரும் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே ஓவருக்கு சராசரியாக 4 ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்திருந்தனர்.

குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமமல் இந்திய அணி திணறுகிறது என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர்களின் பந்துவீச்சு இருந்தது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா வழக்கம் போல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாகத் தொடங்கினார். ஆனால், அப்ரிடி வீசிய 5வது ஓவரின் கடைசிப் பந்து கணிக்க முடியாத வகையில் இன்-ஸ்விங் யார்க்கராக சென்று, ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கியது. அவர் 20 ரன்கள் சேர்த்திருந்தார்.

அதன்பின் விராட் கோலி களமிறங்கி, சுப்மன் கில்லுடன் சேர்ந்தார்.

ஆங்கிலத்தில் Unplayabale Delivery என வர்ணிக்கப்படும் ஒரு பந்தை வீசி கில்லின் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் தட்டித் தூக்கினார்.

அதன்பின் கோலி இந்த ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக தன் கையில் எடுத்துக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அணியோ தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்த தொடரில் நீடிக்க இன்னும் ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது, வங்கதேச அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடிக்கும் அதேநேரத்தில, நியூசிலாந்து அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. நியூசிலாந்து அணி அடுத்து வரும் ஆட்டங்களில் வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகளுடன் மோதவிருக்கிறது.

பாகிஸ்தானின் தோல்விக்கு என்ன காரணம்?

பாகிஸ்தான் அணி கவனமாக ஆட வேண்டும், விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடு ஆடியதே தவிர ரன்சேர்ப்பில் கவனம் செலுத்தவில்லை.

தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் பேட்டர்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்களையே சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகீல்(62), கேப்டன் ரிஸ்வான்(42) தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை

பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் மட்டும் 152 பந்துகளை ரன்னே எடுக்காமல் டாட் பாலாக விட்டுள்ளது, இது ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு சமம்.

பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங்கும் படுமோசமாக இருந்தது. சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் என 3 பேருக்கும் அவர்கள் கேட்சை கோட்டைவிட்டனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin