படக்குறிப்பு, மாசுபட்ட தண்ணீரால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் நலன் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மோகன் யாதவ் மருத்துவமனைக்குச் சென்றார்.கட்டுரை தகவல்
நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகிவரும் வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் பகீரத்புரா பகுதியில், நர்மதா நதி நீர் விநியோகக் குழாயில் கழிவுநீர் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது.
இந்தோர் நகரின் இந்தப் பகுதியில் குடிநீர் மாசு காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாநில அரசு அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா 8 முதல் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று இன்று கூறினார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
மாசுபட்ட நீரினால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பல நபர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பத்து நாட்களுக்கு மேலாகியும், பகீரத்புராவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இன்னும் சுத்தமான குடிநீர் சென்றடையவில்லை. அதேபோல், இந்தூர் நகராட்சியால் இந்த மாசுபட்ட நீர் எங்கே விநியோகக் குழாயில் கலந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
”சுமார் 1,400 முதல் 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 198 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர” என்று கைலாஷ் விஜயவர்கியா கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறியது என்ன?
மாசுபட்ட நீரினால் உயிரிழந்த ஐந்து மாதக் குழந்தை ஆவ்யான் சாஹுவின் தந்தை சுனில் சாஹு பிபிசியிடம் கூறுகையில், தனது குடும்பத்தில் அவரது பெற்றோர், மனைவி மற்றும் பத்து வயது மகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
சுனில் சாஹு ஒரு கூரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ஆவ்யான் பிறந்தான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தாய்ப்பாலுடன் சேர்த்து, குழந்தைக்கு வெளியிலிருந்து வாங்கிய பாலில் தண்ணீர் கலந்து கொடுக்கப்பட்டது. நர்மதா நதி நீர் மாசடைந்து இருந்தது எங்களுக்குத் தெரியாது. பல குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று பிறர் சொன்னபோதுதான் தெரியவந்தது”என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “டிசம்பர் 26 அன்று, குழந்தைக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பக்கத்து வீட்டிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம், ஆனால் மருந்து கொடுத்தும் நிலைமை சரியாகவில்லை. தொடர் வயிற்றுப்போக்கினால் டிசம்பர் 29 மாலை உடல்நிலை மோசமான போது, மீண்டும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். பரிசோதித்த மருத்துவர், மிகவும் தாமதமாகிவிட்டதாகக் கூறினார். ஆவ்யான் இறந்துவிட்டான்”என்றும் குறிப்பிட்டார்.
சூழ்நிலையைப் பற்றி விசாரிக்க இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், ”இனி யாருக்கும் இப்படி நடக்காமல் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
“அந்த நீரைக் குடித்ததால் எனது 69 வயது தாய்க்கு டிசம்பர் 26 மாலை முதல் வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. மருந்து கொடுத்தும் பலனில்லாததால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், 22 மணிநேர சிகிச்சைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார்” என்று தையல் கலைஞரான சஞ்சய் யாதவ் தெரிவித்தார்.
சஞ்சய் யாதவ் தனது 11 மாதக் குழந்தை இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குழந்தையின் உடல்நிலை ஓரளவு முன்னேற்றமடைந்தாலும், இன்னும் வயிற்றுப்போக்கு உள்ளது. அண்டை வீட்டாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றார் அவர்.
விநியோகிக்கப்படும் நீர் இன்னும் அசுத்தமாகவே உள்ளது என்றார் அவர்.
பகீரத்புராவில் வசிக்கும் 76 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் நந்தலால் பாலின் மகள் சுதா பால், தனது தந்தை இரண்டு மூன்று நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
”அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் உடல்நிலை தேறவில்லை.”
டிசம்பர் 30 அன்று தொற்று பாதிப்பால் தனது தந்தை இறந்துவிட்டதாக சுதா பால் கூறினார்.
பட மூலாதாரம், SAMMER KHAN
படக்குறிப்பு, டிசம்பர் 29 அன்று, 50 வயதான சீமா பிரஜாபத் இறந்தார்.
மாசடைந்த நீர் இன்னும் வீட்டிற்கு வருவதாக சுதா பால் தெரிவித்தார். ”தண்ணீர் பார்ப்பதற்கு மோசமாகத் தெரியவில்லை, ஆனால் துர்நாற்றம் வீசுகிறது” என்றார் அவர்.
50 வயதான சீமா பிரஜாபத்தும் மாசடைந்த நீரைக் குடித்த பிறகு டிசம்பர் 29 அன்று காலமானார்.
அவரது மகன் அருண் பிரஜாபத், “டிசம்பர் 28 இரவு, தந்தை குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டார். ஆனால் டிசம்பர் 29 காலை, அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்” என்றார்.
“தண்ணீர் கசப்பாக இருந்தது, ஆனால் அது உயிரைப் பறிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. இப்போது நாங்கள் தண்ணீரைச் சூடுபடுத்திக் குடிக்கிறோம். எனக்கும் உடல்நிலை சரியில்லை. பக்கத்து வீட்டுச் சிறுமி ஒருவற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், ஆனால் இங்கே தண்ணீர் இல்லை. நாங்கள் அதே தண்ணீரைத்தான் குடிக்க வேண்டியுள்ளது. இதுவரை எங்கள் தெருவுக்கு யாரும் வரவில்லை. கவுன்சிலர் மட்டுமே வந்தார். அவரிடம் தண்ணீர் பிரச்னை இருப்பதாகவும், நாங்கள் அசுத்தமான நீரைக் குடிப்பதாகவும் கூறினோம், ஆனால் அவர் மீண்டும் வரவில்லை”என்றார் அருண் பிரஜாபத்.
அமைச்சர் கூறியது என்ன?
இந்தூரில் மாசுபட்ட குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்பட்ட விவகாரத்தில், தவறு நடந்துவிட்டதாக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தூரில் மாசுபட்ட குடிநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பகீரத்புரா பகுதி, இந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் கைலாஷ் விஜய்வர்கியாதான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.
குடிநீர் விநியோகத்திற்குப் பொறுப்பான இந்தூர் மாநகராட்சி, மத்தியப் பிரதேச நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
விஜய்வர்கியா பிபிசியிடம் கூறுகையில், “இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளது. அசுத்தமான நீர் விநியோகிக்கப்படுவது தெரியவந்தவுடன், ஊழியர்கள் அதை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிப்பு செய்திருக்க வேண்டும். தண்ணீர் லாரிகளை அனுப்பியிருக்க வேண்டும். தவறு அவர்களுடையது என்பதால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் அஜாக்கிரதையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது” என்றார்.
பட மூலாதாரம், SAMEER KHAN
படக்குறிப்பு, கைலாஷ் விஜய்வர்கியா மீது மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று அதே பகுதியில் வசிக்கும் சப்னா பால் தெரிவித்தார்.
தற்போது ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன என்றும் தனது தெருவில் வசிக்கும் ஒரு நபர் வயிற்றுப்போக்கினால் உயிரிழந்தார் என்றும் அவர் கூறினார். மக்கள் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
விசாரணைக் குழு அமைத்துள்ள காங்கிரஸ்
பட மூலாதாரம், SAMEER KHAN
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜிது பட்வாரியும் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
இந்தூர் மக்கள் விஷம் கலந்த நீரைக் குடித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியும் இது குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.