பட மூலாதாரம், Abeer Khan/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார் (குறியீட்டுப் படம்).
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்பு ஐந்து நாட்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளன; அவற்றின் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதி காலியாக உள்ளது என்று பிபிசி ஆய்வு கூறுகிறது.
2025 ஆம் ஆண்டு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தச் சேமிப்பு வசதிகள் பல ஆண்டுகளாக முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் பல இந்திய நகரங்களில் பீதியுடன் பொருட்களை வாங்க வழிவகுத்துள்ளது, அதே வேளையில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.
மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக உறுதியளித்தார். இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பன்முகப்படுத்தியுள்ளதாகவும், நெருக்கடியைச் சமாளிக்கச் சேமிப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த வாரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் கூறுகையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு அதன் மொத்த கொள்ளளவில் சுமார் 64% மட்டுமே என்று தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட பதிலின்படி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மூன்று இடங்களில் உள்ள மூலோபாய இருப்புகளில் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது.
இதில், தற்போது 3.372 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது, அதாவது கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதி காலியாக உள்ளது.
இந்த இருப்புகள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனமான இந்திய மூலோபாய பெட்ரோலிய இருப்பு நிறுவனத்தின்(ஐ.எஸ்.பி.ஆர்.எல்) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
வளைகுடா மீதான அதீத சார்புநிலை
பட மூலாதாரம், Imtiyaz Shaikh/Anadolu via Getty Images
படக்குறிப்பு, சௌதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றி வந்த லைபீரியக் கொடி கொண்ட கப்பல், மார்ச் 12 அன்று மும்பை வந்தடைந்தது.
இந்தியா ஒவ்வொரு மாதமும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்துகிறது, அதாவது சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 0.67 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.
தற்போதைய நிலையில், மூலோபாய இருப்புகள் சுமார் ஐந்து நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இந்த மூலோபாய இருப்புகளுடன் கூடுதலாக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 64.5 நாட்களுக்கான தேவைக்கு சமமான கையிருப்பைக் கொண்டுள்ளதாகக் கடந்த ஆண்டு அரசாங்கம் மாநிலங்களவையில் தெரிவித்தது.
இந்தியாவின் மொத்த சேமிப்புத் திறனுடன், ஐ.எஸ்.பி.ஆர்.எல்-இன் 9.5 நாட்களுக்கான கையிருப்பையும் சேர்த்தால், அது தோராயமாக 74 நாட்களாகும்.
இந்தியா கச்சா எண்ணெயைப் பயன்படுத்துவதில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது மற்றும் அதன் தேவையில் 88 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவை மத்திய கிழக்கிலிருந்து, முக்கியமாக இராக், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளன.
2019 மற்றும் 2022-க்கு இடையில், இந்தச் சார்பு நிலை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாகச் சென்றிருந்தது.
இந்த அதிகப்படியான சார்பு நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இத்துறையில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும்.
இத்தகைய சூழ்நிலைகளில் அல்லது திடீர் விலை மாற்றங்களின் போது ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்படும் வகையில் மூலோபாய இருப்பு உள்ளது.
Get in touch
பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ-வின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் பிபிசியிடம் கூறுகையில், “நமது மூலோபாய எண்ணெய் இருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. எரிசக்தி அமைச்சர் கூறியது போல், ஒருங்கிணைந்த மூலோபாய மற்றும் செயல்பாட்டு இருப்புகள் சுமார் 74 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. நாம் இறக்குமதியை பெரிதும் நம்பியிருப்பதால் இது ஒரு பலவீனமாகும். காலப்போக்கில், அரசாங்கம் தனது சேமிப்புத் திறனை அதிகரித்துள்ளதோடு, அதை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
இந்தியாவின் எதிர்கால உத்தி குறித்து வசிஷ்ட் கூறுகையில், “முதலாவது, செயல்பாட்டு மற்றும் மூலோபாய இருப்புகளை அதிகரிப்பது. இரண்டாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மீதான சார்பை அதிகரிப்பது. மூன்றாவது, உற்பத்தியை அதிகரிக்க நமது உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை வலுப்படுத்துவது” என்று தெரிவித்தார்.
சேமிப்புத் திறன்
பட மூலாதாரம், Firdous Nazir/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, சேமிப்புத் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை தெரிவித்தது.
ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைக்கான மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான கிரித் பரிக் பிபிசியிடம் கூறுகையில், “எண்ணெய் தேவையை விரைவாகவும் விரிவாகவும் குறைப்பதற்கான பணத்தைச் செலவிடுவதே சிறந்த உத்தியாக இருக்கும். தேவையை உடனடியாகக் குறைப்பதற்கான வழிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். நாங்கள் ஏற்கனவே அவற்றில் பணியாற்றி வருகிறோம். நாம் அதை விரைவுபடுத்தினால் போதும்” என்றார்.
சேமிப்புத் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை கூறியுள்ளது.
2024 நிதியாண்டில், 3.98 எம்எம்டி கொள்ளளவு கொண்ட நிலத்தடி பாறை குகைகளில் 2.91 எம்எம்டி கச்சா எண்ணெய் மட்டுமே இருந்தது, இதனால் 27% காலியாக இருந்தது.
இந்தியாவில் நிலத்தடி பாறை குகைகளில் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது. இந்த குகைகள் பாறைகளில் செதுக்கப்பட்ட பெரிய செயற்கை இடங்களாகும். இந்த குகைகளிலிருந்து கச்சா எண்ணெய் குழாய்கள் மூலம் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
சேமிப்புத் திறனை அதிகரிப்பதில் நிலவும் முன்னேற்றம் மந்தமாக இருப்பது குறித்தும் இந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
“முதல் கட்டத்தில் 19 நாட்கள் இறக்குமதியை ஈடுசெய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கம்/ஐஎஸ்பிஆர்எல் 5.33 மில்லியன் டன்கள் (எம்எம்டி) சேமிப்புக் கொள்ளளவை மட்டுமே உருவாக்கியுள்ளது. இது (மார்ச் 2024-க்குள்) 7.88 நாட்கள் இறக்குமதியை மட்டுமே பூர்த்தி செய்யும்” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இது குறித்து கருத்து கேட்க ஐ.எஸ்.பி.ஆர்.எல்-ஐ பிபிசி தொடர்பு கொண்டது, ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பதில் கிடைத்தவுடன் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.
உலகளவில், சர்வதேச எரிசக்தி முகமை 90 நாட்களுக்கான இறக்குமதிக்கு இணையான இருப்பை வைத்திருக்கப் பரிந்துரைக்கிறது.
டிசம்பர் 2025 நிலவரப்படி, ஜப்பான் 208 நாட்களுக்கான இறக்குமதி இருப்புகளையும், தென்கொரியா சுமார் 200 நாட்களுக்கான கையிருப்பையும் கொண்டிருந்தன.
சீனாவின் சுமார் 120 நாள் இறக்குமதி செய்யும் அளவுக்கு இணையாக எண்ணெயை இருப்பு வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுடன் ஒப்பிடுகையில், மூலோபாய இருப்புகள் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் கையிருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் மொத்த சேமிப்புத் திறன் மிகக் குறைவு. அதாவது 74 நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது.
ஆனால், அதிகப்படியான கையிருப்பை பராமரிப்பதும் செலவுமிக்கது என்று கூறுகிறார் பரிக்.
“தற்போதைய நெருக்கடியான சூழலில், இருப்பை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் இது மிகவும் செலவுமிக்கதாக இருக்கும். ஒரு பேரல் 120 அல்லது 110 டாலர் விலையில் வாங்கும்போது, அதைச் சேமித்து வைப்பதில் நியாயம் இல்லை. விலை 60 டாலர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தபோது நாம் இருப்பை அதிகரித்திருக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.