• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவின் ரூ 4.5 லட்சம் கோடி பொதுப்பணி ஒப்பந்த சந்தையில் பிரிட்டன் – மலையளவு சவால்களைத் தாண்டுமா?

Byadmin

Aug 13, 2025


இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் கைகுலுக்கிக்கொள்ளும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறிப்பிட்ட துறைகளில் இந்திய அரசு ஒப்பந்த ஏலங்களில் பங்கேற்கும் பிரிட்டன் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு சமமாக நடத்தப்படுவார்கள்

    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

இந்தியா – பிரிட்டன் இடையே கடந்த மாதம் கையெழுத்தான தடையில்லா வர்தக ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய அம்சம், இந்திய அரசின் பொதுப்பணி ஒப்பந்த சந்தையை பிரிட்டன் நிறுவனங்களுக்கு திறந்து விட்டதுதான்.

இதில் அரசு வாங்கும் பொருட்கள், சேவைகள் முதல் சாலை போன்ற பொதுப்பணிக்கான ஒப்பந்தங்கள் வரை அடங்கும்.

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டியிட முடியாத அளவு பாதுகாக்கப்பட்டு வந்த போக்குவரத்து, பசுமை ஆற்றல் மற்றும் கட்டமைப்பு போன்ற துறைகளில் மத்திய அரசின் 38 பில்லியன் பவுண்ட் (சுமார் 4.5 லட்சம் கோடி) மதிப்புள்ள சுமார் 40,000 உயர் மதிப்பு ஒப்பந்தங்களில் தற்போது பிரிட்டன் தொழில் நிறுவனங்கள் பங்கேற்க முடியும்.

இந்த அனுமதி முன்பெப்போதும் இல்லாதது என்கின்றனர் நிபுணர்கள்.

இது ஐக்கிய அரசு எமிரேட்ஸுடன் இந்தியா முன்னதாக செய்துகொண்ட ஒப்பந்தத்தைவிட “மிகப் பெரியது,” என்பதுடன் ஒரு புதிய அளவுகோலாக அமைந்தது என்று டெல்லியை சேரந்த சிந்தனைக்குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவை (GTRI) சேர்ந்த அஜய் ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறிப்பிட்ட துறைகளில் இந்திய அரசு ஒப்பந்தங்களுக்கான ஏலங்களில் பங்கேற்கும் பிரிட்டன் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட சமமான முறையில் நடத்தப்படுவார்கள். வரவிருக்கும் பொது ஏலங்கள் மற்றும் கொள்முதல் வாய்ப்புகள் பற்றிய தகவல்களை நிகழ்நேரத்தில் பெற முடியும்.

மேலும், பிரிட்டனில் இருந்து வெறும் 20% உள்நாட்டு உள்ளீடு மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்திய அரசுக்கு கொடுக்க முடியும், இது பிரிட்டன் நிறுவனங்களுக்கு 80% வரையிலான பாகங்கள் அல்லது மூலப்பொருட்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, அப்படி வாங்கினாலும் இந்தியாவில் பொதுப்பணி ஒப்பந்தம்/ கொள்முதல் முன்னுரிமைக்கு தகுதி பெற முடியும்.

இந்த நிறுவனங்கள் பங்கேற்கும் ஏலங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், ”பிரிட்டன் நிறுவனங்கள் இப்போது கிராமப்புற சாலைகள், பள்ளிகளுக்கான சூரிய ஆற்றல் உபகரணங்கள், அல்லது அரசு அலுவலகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் போன்ற பல குறைந்த மதிப்பு திட்டங்களுக்கான ஏலங்களில் பங்கேற்க முடியும். இவை முன்பு அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தன” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

ஓர் அழகிய கிராமப்புற வயல்வெளியை ஒட்டி செல்லும்  சாலையின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் நிறுவனங்கள் இப்போது கிராமப்புற சாலைகள் போன்ற பல குறைந்த மதிப்பு திட்டங்களுக்கான ஏலத்தில் பங்கேற்கமுடியும்

ஆனால் பிரிட்டன் நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது களத்தில் சுலபமானதாக இருக்காது என பல நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பிரிட்டன் நிறுவனங்கள் இரண்டாம் நிலை உள்ளூர் நிறுவனங்களாக ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவர்களாக இருந்தாலும், இந்திய நிறுவனங்கள் முதல் நிலை நிறுவனங்களாக முன்னுரிமை சலுகைகளைப் பெறுவார்கள் என்று இந்திய பன்னாட்டு பொருளாதார உறவுகளுக்கான ஆராய்ச்சி கவுன்சிலின் வர்த்தக நிபுணர் அர்பிதா முகர்ஜி கூறுகிறார்.

மேலும், ஏலங்களை பெறுவதில் விலை நிர்ணயம் முக்கிய பங்காற்றுகிறது, “பிரிட்டன் நிறுவனங்களின் விலைகள் இந்திய நிறுவனங்களை விட பொதுவாக உயர்ந்தவை என்பதால், இது அவர்களுக்கு ஒரு முக்கிய சவாலாக இருக்கும்,” என்று அவர் மேலும் சொல்கிறார்.

“இந்தியாவில் பணிக்கான ஒப்பந்தங்களின் நீண்டகால பிரச்னைகளாக உள்ள பணம் பெறுவதில் தாமதங்கள் மற்றும் ஒப்பந்த அமலாக்கத்தில் உள்ள சிரமங்கள் ஆகியவை முக்கிய தடைகளாக இருக்கும்,” என்று ஆப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆய்வு மைய, சிந்தனைக்குழுவின் ஸ்ரீஜன் ஷுக்லா கூறுகிறார்.

2017 முதல் 2020 வரை இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி ஒப்பந்தம் குறித்த ஆய்வு ஒன்று, நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை பெரும்பாலும் ஒரு வருடத்தின் சராசரி மொத்த ஒப்பந்த மதிப்பை விட அதிகமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

“இது இந்தியாவின் பொது பணி ஒப்பந்த சந்தைகளில் நிலவும் நீண்ட கால அவகாசம், தாமதம், ஒழுங்குமுறை மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்றவை இதில் நுழைய முயற்சிக்கும் பிரிட்டன் நிறுவனங்களை பாதிக்கும்” என்று ஷுக்லா பிபிசியிடம் தெரிவித்தார்.

நீண்ட காலமாக நிலுவைத் தொகைகள் தரப்படாமல் இருப்பது இந்தியாவின் சிறு வணிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் முக்கியமான விசயமாக இருந்து வந்திருக்கின்றன. இது குறுகிய கால பணப்புழக்க பிரச்னைகளை ஏற்படுத்தி, “அவர்களை இந்த பணி ஒப்பந்த சந்தைகளில் இருந்து வெளியேற்றி, அந்த வணிகத்தை பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது” என்று ஷுக்லா கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலக வங்கியின் 2020 ஆம் ஆண்டு டூயிங் பிசினஸ் அறிக்கையின் ஒப்பந்த அமலாக்க தரவரிசையில் 190ல் 163ஆவது என மோசமான இடத்தில் இந்தியா இருப்பது இதை பிரதிபலிக்கும் விதத்திலேயே உள்ளது.

இந்த தரவரிசைகள் வெளியிடப்பட்ட பிறகு, ‘கவர்ன்மென்ட் இ-மார்க்கெட்பிளேஸ்’, ‘மத்திய பொது கொள்முதல் இணையதளம்’ அல்லது சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆன்லைன் தகராறு தீர்வு இணையதளம் போன்ற ஒரே-இடத்தில்-எல்லாம் செய்துகொள்ளும் தளங்கள் மூலம் பொது ஏல செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மேம்பட்டிருந்தாலும், அரசு நிறுவனங்களின் பணம் செலுத்தும் நடைமுறை தொடர்ந்து சிக்கலாகவே உள்ளது என்று ஷுக்லா கூறுகிறார்.

அர்பிதா முகர்ஜியின் கூற்றுப்படி, இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் பொதுப்பணி ஒப்பந்தம்/ கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துகிறது, ஆனால் நிலுவைத் தொகைகள், ஒப்பந்த அமலாக்கம் மற்றும் அபராதங்கள் போன்ற பிரச்னைகளைப் பற்றி பேசவில்லை.

இந்த ஒப்பந்தம், விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) தகராறு தீர்வு விதிகளை, CETA நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்கு விலக்கி வைக்கிறது. இந்த விதிகள் பொதுவாக தகராறுகள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்தியாவில் தொழில் செய்வது பழக்கத்தால் வருவது. பொது ஏலங்களை வெல்வதற்கான கலையையும், சிக்கலான ஒழுங்குமுறைகளை சமாளிக்கும் வழிகளையும் பிரிட்டன் நிறுவனங்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று ஷுக்லா கூறுகிறார்.

பணிபுரியும் பெண் ஒருவரின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் அரசு பொதுப்பணி ஒப்பந்த சந்தை நீண்ட காலமாக உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், இந்திய அரசு பொதுப்பணி ஒப்பந்தம்/கொள்முதல் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது ஒரு பாரதூர கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது.

நீண்ட காலமாக உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியை திறந்து விடும் இந்திய அரசின் நோக்கத்தை காட்டுகிறது. மேலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் வெளிநாடுகளுக்கு இந்தியா வழங்க தயாராக உள்ள சலுகைகளை இது பிரதிபலிக்கலாம் என்று ஜிடிஆர்ஐ சொல்கிறது.

வர்த்தக ஒப்பந்தங்களில், பொதுப்பணி ஒப்பந்தம்/கொள்முதல் விதிகளை சேர்ப்பதை இந்தியா தாமதப்படுத்தியதால் தற்போது அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விட்டதை பிடிக்கும் முயற்சியாகத்தான் மாற்றியிருக்கிறது என்கிறார் ஷுக்லா.

“தனது நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களுடன் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் போட்டியிட முடியும் என்ற இந்திய அரசின் நம்பிக்கையின்” அடையாளமாகவும் இது உள்ளது என்று அவர் கூறுகிறார்.

பணம் செலுத்துவதில் அதீத தாமதம் மற்றும் ஒப்பந்த அமலாக்கத்தில் மோசமாக இருக்கும் இந்தியாவின் ஏல மற்றும் பொது பணி நடைமுறையை உலகளாவிய தரத்திற்கு “தரப்படுத்த” வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு உதவும் என்று நம்பப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin