‘வரலாற்றில் நடந்தவற்றுக்காக நாம் பழி வாங்க வேண்டும்’ என்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கருத்து சமூக வலைத்தளங்களின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
“வரலாறு நமக்கு சவால் விடுகிறது. ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் அந்த தீப்பொறி இருக்க வேண்டும். ‘பழிவாங்குதல்’ என்பது சிறந்த வார்த்தை அல்ல, அனால் பழிவாங்குதல் என்பது ஒரு வலிமையான சக்தி. நமது வரலாற்றில் நிகழ்ந்தவற்றுக்காக நாம் பழிவாங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் அவரின் கருத்தை கண்டித்தனர். ஆனால் பாஜக தலைவர்கள் உட்பட சிலர் அஜித் தோவலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தோவலின் கருத்தை ‘துரதிர்ஷ்டவசமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, முக்கிய பொறுப்பில் உள்ள அஜித் தோவல் போன்ற அதிகாரியின் இத்தகைய கருத்து துரதிர்ஷ்டவசமானது என மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முக்கிய பொறுப்பில் உள்ள அஜித் தோவல் போன்ற அதிகாரியின் இத்தகைய கருத்து துரதிர்ஷ்டவசமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ள அவர், வெறுப்பு என்ற வகுப்புவாத சித்தாந்தத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை இயல்பாக்கியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்பு அங்கம் வகித்த மெஹபூபா முஃப்தி மேலும் கூறும் போது “நூற்றாண்டு பழமையான சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என 21-ஆம் நூற்றாண்டில் கூறுவது, ஏழை மற்றும் படிக்காத இளைஞர்களை சிறுபான்மையின சமூகத்தினரை குறிவைக்க தூண்டி விடுவதாக உள்ளது, அவர்கள் ஏற்கனவே எல்லா பக்கங்களிலும் இருந்து தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர்.” என்றார்.
“கொள்ளையடிக்கப்பட்ட கோவில்கள்”
சனிக்கிழமை நடைபெற்ற ‘வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் விவாதம் – 2026’ நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய அஜித் தோவல், “சுதந்திர இந்தியாவில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்பதே அதிஷ்டம் . நீங்கள் பார்ப்பதை போல எப்போதும் இந்தியா சுதந்திரமாக இல்லை . இதற்காக நமது முன்னோர்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்.”
“பல அவமானங்களைத் தாங்கியுள்ளனர், பல ஆண்டுகாலம் உதவி இல்லாமல் கடந்துள்ளனர். பலரும் தூக்கிலிடப்பட்டனர். பகத் சிங் தூக்கு மேடையை ஏற்றுக்கொண்டார். சுபாஷ் சந்திர போஸ் தனது வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருந்தது, மகாத்மா காந்தி சத்தியாகிரஹத்தை மேற்கொண்டார் மற்றும் எண்ணிலடங்காத மக்கள் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
“நமது கிராமங்கள் தீக்கிரையாகப்பட்டன, நமது கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நாம் வாய்மூடி மௌனியைப் போல உதவியற்றவர்களாக இருந்தோம். இந்த வரலாறு நமக்கு சவால் விடுகிறது. பழிவாங்குதல் என்று வார்த்தை சிறந்தல்ல, ஆனால் பழிவாங்குதல் என்பது ஒரு பெரிய சக்தி.”
“வரலாற்றில் நடந்தவைகளுக்காக நாம் பழிவாங்க வேண்டும். நமது உரிமைகள், நமது கருத்துக்கள் மற்றும் நமது நம்பிக்கைகளின் அடிப்படையிலான ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கக்கூடிய இடத்திற்கு இந்த நாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும்.” என்றார்.
‘வரலாறு நமக்கு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது’
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, அஜித் தோவல்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் உதாரணம் ஒன்றைக் குறிப்பிட்டு பேசும்போது, “செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மிக வயதான ரப்பி வாழ்ந்து வந்தார். அங்கு வாழ்ந்த பிஷப்புடன் அவர் நல்ல நண்பராக இருந்தார். அவருக்கு 80-85 வயது இருக்கும். ஒரு நாள் பிஷப், ரப்பியின் வீட்டிற்கு வந்தார். அவரது கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது, அவர் எதையோ குறித்து ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பிஷப், ‘எதைப் பற்றி சிந்திக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ரப்பி, ‘யூதர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்’ என்று பதிலளித்தார்.”
“பின்னர் பிஷப், ‘கடந்த 2,000 ஆண்டுகளாக நீங்கள் போராடி வந்திருக்கிறீர்கள், துன்புறுத்தல்களையும் அனுபவித்துள்ளீர்கள். இதற்காகத்தான் இப்போது கண்ணீர் சிந்துகிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு ரப்பி, ‘இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ வைத்த அந்த போராட்ட மரபை அடுத்த தலைமுறைகள் மறந்து விடுவார்களோ? மீண்டும் நாம் நம்மை வலுப்படுத்தி,பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விடுவார்களோ? என்று நான் சிந்தித்தேன்’ என்று பதிலளித்தார்.” என்றார் அஜித் தோவல்.
“இது ஒரு உணர்வு, இது மிகவும் வலுவான ஒரு மனநிலை. அதிலிருந்தே நாம் ஊக்கம் பெற வேண்டும். பல நேரங்களில் பலவிதமான அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நமக்கு ஏற்படுகின்றன. அப்போது நமக்கு அநீதி நடந்தாகவோ அல்லது நாம் தவறாக நடத்தப்பட்டதாகவோ உணர்கிறோம். நமது கிராமங்கள் எரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலைகளில் நாம் மேலும் வலுவடைய வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற வேண்டும்.” எனத் தெரிவித்தார் தோவல்.
தற்போதைய அரசு குறித்து தோவல் கூறும்போது, “மனஉறுதியை நிலைநாட்ட தலைமை அவசியம். இன்று நமது நாட்டுக்கு அத்தகைய தலைமை இருப்பது நமது அதிர்ஷ்டம். கடந்த 10 ஆண்டுகளில், நாடு இருந்த இடத்திலிருந்து இன்றைய நிலைக்கு கொண்டு வந்த ஒரு தலைவர் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமத் தனது எக்ஸ் தளத்தில்” தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பணி நாட்டை பாதுகாப்பதாகும். அதை விடுத்து இளைஞர் மத்தியில் வரலாற்றை பழிதீர்க்க தூண்டி விடுகிறார். அஜித் தோவல் முதலில் புல்வாமா மற்றும் பஹல்காம் தாக்குதலின் தீரவிரவாதிகள் எங்கே என்பது குறித்து பதிலளிக்க வேண்டும். டெல்லி தாக்குதலை நடத்தியது யார்? புல்வாமா, பஹல்காம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களின் உளவுத்துறை தோல்விக்கு நீங்கள் தான் பொறுப்பு. நீங்கள் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் டாவ்லீன் சிங் “நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் உரை எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாகரிகத்தை அழித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். அப்படியானால் முதலில் யாரை நாம் தாக்க வேண்டும் ஆப்கானிஸ்தானையா, உஸ்பெகிஸ்தானையா அல்லது துருக்கியையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி இந்துவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்தியா தனது காலனிய ஆட்சிக்கு உட்பட்ட காலத்திற்கு பழிவாங்கும் என்று கூறுகிறாரா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி பேராசிரியரும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான ரத்தன் லால் எக்ஸ் தளத்தில் “இந்த செய்தி உண்மை என்றால், முதலில் தோவல் தனது மகனை முன்னால் அனுப்ப வேண்டும்.” என்றார்.
தோவலுக்கு ஆதரவு
பட மூலாதாரம், Getty Images
அஜித் தோவலின் கருத்தை சிலர் கண்டித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வந்துள்ளன.
பாஜகவின் ஓபிசி பிரிவு தேசிய பொதுச் செயலாளர் நிகில் ஆனந்த் “தயவு செய்து ஆச்சரியப்பட வேண்டாம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியவை அனைத்தும் பொருத்தமானவை. அது நாட்டின் நலனுக்கும் அதன் தேசிய பாதுகாப்பிற்கும் உகந்தது. தேசிய பாதுகாப்புக்கும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக குரல் எழுப்புவோருக்கு எதிரான ஒரு செய்தியை அவர் தெரிவித்துள்ளார். வரலாறு நியாயமாகவும் நேர்மையுடனும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கோகலே இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “ஷார்ட்ஸ் அல்லது ரீல்களை அடிப்படையாகக் கொண்டு கருத்து உருவாக்க வேண்டாம். அவரின் முழு உரையையும் கேட்டு பின்னர் உங்கள் கருத்தை உருவாக்குங்கள். இல்லையெனில், பல அனுபவமுள்ள செய்தியாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு நடந்தது போல, தவறான புரிதல் ஏற்படும் அபாயம் உள்ளது.” என்றார்.
பேராசிரியர் ஷிரிஷ் காஷிகர் இது குறித்து குறிப்பிடுகையில், “தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் இந்த உரை மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நாட்டை கட்டமைக்கும் இளைஞர்களின் பங்கை அவர் தெளிவாக வரையறுத்துள்ளார். இன்றைய இந்திய இளைஞர்கள் நாட்டிற்கு பயனுள்ளதாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள சில முக்கியமான பரிந்துரைகளையும் தோவல் பகிர்ந்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.