பட மூலாதாரம், Getty Images
அலாஸ்காவில் அதிபர் புதினுக்கும் டிரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என்று ஆகஸ்ட் 13 அன்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார்.
உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் பிரான்சின் அர்னாட் பெர்ட்ராண்ட், இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்து , “இது இந்தியாவின் பல-சீரமைப்பு ராஜ்ஜீய உத்தியின் தோல்வி என்பது தெளிவாகிறது. இந்த உத்தி இந்தியாவை அனைவருக்கும் முக்கியமானதாக மாற்றுவதாக இருந்தது, ஆனால் அது அனைவருக்கும் தேவையற்றதாகிவிட்டது” என்று பதிவிட்டு இருந்தார்.
“வேறு சொற்களில் சொல்வதானால், இந்தியா தன்னை எந்த ஆபத்தும் இல்லாமல் எளிதில் தாக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
சீனாவுடன் நேரடியாக மோதாமல், பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்ப வேண்டிய நேரத்தில், டிரம்ப் இந்தியாவை அச்சுறுத்துகிறார். ஏனெனில், இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பெரிய நாடாக இருந்தாலும், பதிலடி கொடுக்கும் அளவுக்கு வலிமையான நாடாக இல்லை.”
“எல்லோருக்கும் நண்பராக இருக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அனைவருக்கும் ஒரு அழுத்தத்தை வெளியிடும் குழாயாக (pressure valve) மாறுகிறீர்கள். குறிப்பாக, உங்கள் சொந்த நிலைப்பாட்டை வலியுறுத்தும் திறன் இல்லாதபோது, அந்த சூழல் மேலும் சிக்கலாகிறது”என்று அர்னாட் பெர்ட்ராண்ட் பதிவிட்டார்.
‘பன்முகக் கூட்டணி கொள்கை’ என்பதற்கு , இந்தியா அனைத்து முக்கிய நாடுகளுடனும் நட்புறவைப் பேண முயற்சி செய்வது எனப் பொருள்.
இது நேருவின் ‘அணிசேராமை’ கொள்கையிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், ‘எல்லோருடனும் இருப்பது’ என்ற நிலைப்பாடு, இறுதியில் ‘யாருடனும் இல்லை’ என்ற நிலையை உருவாக்கும் என்பதால், இது வெறும் சொற்களின் வேறுபாடு மட்டுமே என்று பலரும் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
‘பன்முகக் கூட்டணி’ கொள்கை தோல்வியடைகிறதா?
ஆறு நாட்களுக்கு முன் இந்தியாவைப் பற்றிய விமர்சனங்கள் எழுதிய அர்னாட் பெர்ட்ராண்ட், ஆகஸ்ட் 19 அன்று தனது நிலைப்பாட்டை மாற்றியதுபோல் தோன்றுகிறது. அந்த நாளில் தான், பிரதமர் மோதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டார்.
“இந்தியாவைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஐரோப்பாவிடம் இல்லாத அரசியல் துணிச்சல் மோதியிடம் இருக்கிறது. ஐரோப்பா ரஷ்யாவுடன் இதேபோல் நேரடியாக செயல்பட்டிருந்தால், டிரம்பிற்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்திருக்காது. ஐரோப்பாவிற்கு டிரம்பின் மத்தியஸ்தம் தேவைப்பட்டிருக்காது”என அதே பதிவை மறுபதிவு செய்து , அர்னாட் குறிப்பிட்டிருந்தார்.
” டிரம்ப், ஐரோப்பியத் தலைவர்களை பள்ளிக் குழந்தைகளைப் போல நடத்தி, பொருளாதார ரீதியாக சேதம் ஏற்படுத்தியதைக் குறித்து நான் பேசவே இல்லை.
தற்போதைய சூழ்நிலை, ஐரோப்பா எல்லா வகையிலும் பாதிக்கப்படும் அளவுக்கு மோசமாக உள்ளது. ஒருபுறம், அமெரிக்காவின் கைக்கூலியாக அவமானப்படுத்தப்படுகிறது. மறுபுறம், டிரம்ப் இந்த நிலையை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
ஐரோப்பா ஒரு மறைமுகப் போருக்கான விலையைச் செலுத்துகிறது, அதேசமயம் அண்டை நாட்டின் விரோதத்தையும் எதிர்கொள்கிறது. இதற்கிடையில், டிரம்ப் ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்தி வருகிறார்.”
“சீனா மீது இந்தியர்கள் கொண்டுள்ள விரோதம், ஐரோப்பாவில் ரஷ்யா மீது இல்லை. அதாவது, இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசியல் ரீதியாக மிகவும் கடினமான சூழ்நிலை இருந்தது. உத்தி சார்ந்த சுயாட்சி மீது ஆசியத் தலைவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, ஐரோப்பாவில் காணப்படுவதில்லை”என்றும் அர்னாடின் பதிவு கூறுகிறது.
“நாடுகள் நீண்ட காலத்திற்கு சிந்திக்கின்றன. ஆய்வாளர்கள் குறுகிய காலத்திற்கு சிந்திக்கின்றனர்”என மாற்றம் அடைந்த அர்னாட்டின் நிலைப்பாடு குறித்து, ‘தி இந்து’ செய்தித்தாளின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜானி கூறுகிறார்.
பிரான்சுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃப்பிடம், மோதி அரசாங்கத்தின் ‘பன்முகக் கூட்டணி கொள்கை’ உண்மையில் தோல்வியடைகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“நான் அப்படி நம்பவில்லை. நரேந்திர மோதி எஸ்சிஓ மாநாட்டிற்குச் செல்கிறார் என்றால், அவர் அமெரிக்காவிற்கு எதிராகப் போகிறார் என்று அர்த்தமல்ல.
டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பே, சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியில் சில பிரச்னைகள் இருந்தாலும், மற்ற உறவுகள் நிலைத்திருக்கின்றன.”
என்று ஜாவேத் அஷ்ரஃப் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த உடன்பாடும் இல்லாததற்கான காரணம், இந்தியா தனது தேசிய நலன்களில் எந்தவித சமரசமும் செய்யவில்லை என்பது தான்.
இந்தியா அமெரிக்காவுடன் உத்தி சார்ந்த சுயாட்சியுடன் பேசுகிறது. சீனாவும் ரஷ்யாவும் அதிக சக்தி வாய்ந்த நாடுகள், எனவே அவர்கள் அமெரிக்காவிற்கு அதன் சொந்த மொழியில் பதிலளிக்கிறார்கள். நமக்கும் அந்த சக்தி இருந்திருந்தால், நாமும் அதேபோல் பதிலளித்திருப்போம். இதுதான் ஒரே வித்தியாசம்”என்றார்.
மோதியின் சீனப் பயணம் டிரம்பின் நிலைப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் முயற்சி திடீரென்று தொடங்கியதல்ல என்று சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான தன்வி மதன் கருதுகிறார்.
“கடந்த ஆண்டு, ரஷ்யாவின் கசானில் பிரதமர் மோதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இருக்கவும், இந்தியாவின் உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார பரப்பை விரிவுபடுத்தவும், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது,” என அவர் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.
“ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், சீனா இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமா? என்பது தான்.
எல்லைப் பிரச்னைகள் காரணமாக, பல பேச்சுவார்த்தைகள் முழுமையடையாமல் முடிந்ததை நாம் பார்த்துள்ளோம். சீனா இந்தியாவை பலவீனமாகக் கருதினால், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம்.”
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதியின் சீனப் பயணம்
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.
இதன் பின்னர், ஆகஸ்ட் 21 அன்று அவர் பாகிஸ்தானை அடைந்தார். இந்தியாவிற்குப் பிறகு, பாகிஸ்தானுக்குச் சென்ற வாங் யியின் பயணத்திலிருந்து பல அர்த்தங்கள் பெறப்படுகின்றன.
“இந்தியா சீனாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினால், சீனா அதை வரவேற்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது. சீனா தனது நலன்களில் எந்தவித சமரசமும் செய்யாது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதையும் நிறுத்தாது”என்று நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார் ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக்கழகத்தில் தெற்காசியாவுடனான சீனாவின் உறவுகள் குறித்த நிபுணரான லின் மின்வாங்.
அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளது.
இந்த 50 சதவீத வரி ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் வணிகம் செய்வது கடினமாகிவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது.
2024-25 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலராக இருந்தது.
அமெரிக்காவுடனான இவ்வளவு பெரிய வர்த்தகம் தடைபட்டால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது, தவிர்க்க முடியாதது.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் அல்லது புதிய சந்தைகளைத் தேட வேண்டும் என்ற அழுத்தம் இந்தியா மீது உள்ளது.
“இந்தியா, வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஈடாக அமெரிக்காவிற்கு அடிபணிய மறுத்தால், அதனால் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியையும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையையும் இழக்க நேரிடும். சீனாவுடனான நட்பை அதிகரிப்பது அல்லது நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது நல்லது தான் , ஆனால் அவற்றால் அமெரிக்காவின் இடத்தை ஈடுசெய்ய முடியாது” என்று ப்ளூம்பெர்க் தனது செய்தியில் கூறியுள்ளது.
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவும் வளர்ந்து வரும் பொருளாதார நாடு தான், எனவே அமெரிக்காவுடனும் சீனாவுடனும் மோசமான உறவுகளைப் பேணுவதன் மூலம், இந்தியா அதன் சிக்கல்களை அதிகரிக்க விரும்பவில்லை.
அதேசமயம் இந்த இரு நாடுகளுடனான உறவுகளும் இணக்கமாக இல்லை என்பது உண்மைதான்.
சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 127.7 பில்லியன் டாலராக இருந்தது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை தியான்ஜினில் நடைபெறும் எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி சீனா செல்கிறார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோதி சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவும் சீனாவும் இணக்கமாக இருப்பதன் முக்கியத்துவம்
கிழக்கு லடாக்கில் ஏப்ரல் 2020க்கு முந்தைய நிலை இன்னும் திரும்பாத நேரத்தில், பிரதமர் மோதி சீனாவுக்குச் செல்ல உள்ளார்.
2020 க்குப் பிறகு சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை மாண்டரின் மொழியில் பல முறை மறுபெயரிட்டுள்ளது.
சீனா அருணாச்சலப் பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என அழைக்கிறது.
திபெத் மற்றும் தைவான் ஆகிய இரண்டும் சீனாவின் ஒரு பகுதியாகும் எனக் கூறும் ‘ஒரே சீனா’ கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்பது வேறு விஷயம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோதி சீனா செல்ல உள்ளார் என்பது எதிர்பாராத முடிவு அல்ல.
இந்தியா, 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு முன்னிலை வகித்து, இந்த மாநாட்டை மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்தது.
இவ்வாறு இந்த மாநாட்டை , இந்தியா மெய்நிகர் முறையில் நடத்தியது, சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள குழுக்கள் மீது இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது, சீன அதிபர் ஜி ஜின்பிங் அதில் கலந்து கொள்ளவில்லை.
இந்தச் சூழலில், மோதியின் சீனப் பயணம், இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைவதோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
‘கலிங்கா இந்தோ-பசிபிக் ஆய்வுகள் நிறுவனத்தின்’ நிறுவனர் பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா, அமெரிக்காவுடனான உறவு முறிந்ததன் காரணமாக இந்தியா சீனாவிற்கு தூது அனுப்புகிறது என்று கருதவில்லை.
“அமெரிக்காவுடனான உறவில் முறிவு ஏற்படவில்லை, சீனாவிற்கு புதிய உறவுக்கான தூதும் அனுப்பப்படவில்லை. டிரம்ப் சில முடிவுகளை எடுத்துள்ளார், அவை இந்தியா மீது மட்டுமல்ல, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் இந்தியாவின் ஒவ்வொரு முடிவையும் டிரம்புடன் இணைக்க முடியாது. பதற்றமான நாட்களிலும் சீனாவுடனான நமது வர்த்தகம் அதிகரித்துள்ளது” என்று பேராசிரியர் மகாபத்ரா விளக்குகிறார்.
இந்திய தொழில்துறை, சீனாவின் தொழில்நுட்பத்தை அதிகமாக சார்ந்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி , 2024 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிலிருந்து 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் மற்றும் மின் உபகரணங்களை இறக்குமதி செய்தது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு வலையமைப்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு சீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இது தவிர, இந்தியாவின் மருந்துத் துறையும் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவும் அரிய மண் தாதுக்களுக்கு சீனாவையே சார்ந்துள்ளது. அது இல்லாமல், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகளின் இலக்குகளை, இந்தியாவால் அடைய முடியாது.
சமீபத்தில், சீனா தனது இறக்குமதியைக் கட்டுப்படுத்தியபோது, இந்தியாவின் பல தொழில்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகவும் பாதிக்கப்பட்டது.
மறுபுறம், சீனாவிற்கும் இந்தியா தேவை.
இந்தியா ஒரு பெரிய சந்தையாக இருப்பதால், சீனா தனது பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு