0
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் இன்று (26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற பிரதான குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு, தேசியக் கொடியை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க தேசிய மரியாதை செலுத்தப்பட்டது.
தேசத்தின் வலிமையையும் பாதுகாப்புத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். அவருடன் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவுக்கு வருகை தந்த அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த அணிவகுப்பில் இந்திய இராணுவம், கடற்படை, விமானப் படை, சிஆர்பிஎஃப் படை வீரர்கள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் படையினர் பங்கேற்று தங்களின் ஒழுக்கம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் 13 துறைகள் மற்றும் 17 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படைகள் பயன்படுத்திய முக்கிய ஆயுத அமைப்புகளின் மாதிரி வடிவங்களும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.