பட மூலாதாரம், Getty Images
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மீதான பாலியல் சீண்டல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாரத் நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 74 (ஒரு பெண்ணின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலப் பிரயோகம்) மற்றும் பிரிவு 78 (பெண்களைப் பின்தொடர்தல், தொடர்பு கொள்ள முயற்சிப்பது) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து இந்தூரின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்) ராஜேஷ் தண்டோதியாவிடம் பிபிசி பேசியது. “கஜ்ரானாவில் வசிக்கும் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அகில் அகமது என்ற அந்த நபர் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, நடந்து சென்றுக் கொண்டிருந்த இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகளை பாலியல்ரீதியாக சீண்டினார். பின்னர் தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஐந்து காவல் நிலையங்களைச் சேர்ந்த குழு ஒன்றிணைந்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளது” என தெரிவித்தார்.