படக்குறிப்பு, உலகளாவிய ஏஐ பபிளுக்கு எதிராக இந்தியா ஒரு பாதுகாப்பாக உள்ளது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.கட்டுரை தகவல்
டிசம்பர் தொடக்கத்தில், தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகியவை இந்தியாவில் 50 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தன. இந்த அறிவிப்பு செயற்கை நுண்ணறிவுத் துறை மீது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெல்லா, ஆசியாவில் தனது நிறுவனம் இதுவரை செய்ததிலேயே மிகப்பெரிய முதலீடான 17.5 பில்லியன் டாலரை செலவிடப்போவதாக அறிவித்தார். இது “இந்தியாவின் ஏஐ-முதன்மை எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்பு, திறன்கள் மற்றும் இறையாண்மைத் திறன்களை உருவாக்க உதவும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அமேசானும் இதே அணுகுமுறையைப் பின்பற்றி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்விருப்பதாகவும், அந்த முதலீட்டில் ஒரு பகுதி ஏஐ திறன்களை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும் என்றும் கூறியது.
இந்த அறிவிப்புகள் ஒரு முக்கியமான தருணத்தில் வெளிவந்தன. உலகளாவிய சந்தைகளை ‘AI பப்பிள்’ (AI bubble) பற்றிய அச்சம் சூழ்ந்திருக்க, பல முன்னணி பங்கு நிறுவனங்கள் இந்தியாவின் ஏஐ தொழில்நுட்பத்தை அதற்கு நேர்மாறான கோணத்தில் அணுகுகின்றன.
ஜெஃப்ரிஸின் கிறிஸ்டோபர் வூட், நாட்டின் பங்குகள் ஒரு “தலைகீழ் ஏஐ வர்த்தகம்” என்று கூறினார். அதாவது, “உலகளாவிய ஏஐ பப்பிள் திடீரென்று வெடித்தால்”, இந்திய பங்குகள் உலகின் பிற சந்தைகளைவிட மேம்பட்ட செயல்திறனைக் காட்டும் வாய்ப்புள்ளது என்பதே இதன் அடிப்படை அர்த்தம்.
ஹெச்எஸ்பிசி (HSBC) நிறுவனமும் இதேபோன்ற கருத்தைக் கொண்டிருந்தது. இந்திய பங்குச் சந்தைகள், தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு எழுச்சியால் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு “பாதுகாப்பான இடத்தையும் பல்வகைப்படுத்தலையும்” வழங்குவதாகக் கூறியது.
கடந்த ஓர் ஆண்டில், மும்பை பங்குகள் ஒப்பீட்டளவில் ஆசியாவின் பிற சந்தைகளைவிடப் பின்தங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஒப்பிடத்தக்க வாய்ப்புகள் இல்லாத நிலையில், கொரிய மற்றும் தைவானிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் முதலீடுகள் மிகவும் தேவையான ஓர் ஊக்கத்தை அளிக்கின்றன. இருப்பினும், உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியா உண்மையில் எங்கு நிற்கிறது என்ற கேள்வியை எழுப்புவது முக்கியமானதாக உள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் திறன் செயல்பாட்டின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆனால் இந்தக் கேள்விக்கு எளிதான பதில் கிடைப்பதில்லை.
ஒருபுறம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் அடித்தளமாகிய டேட்டா சென்டர்கள், சிப் உற்பத்தி நிலையங்கள் போன்ற மதிப்பு சங்கிலியின் சில பகுதிகளுக்கான முதலீடுகள் மெதுவாக வரத் தொடங்கியுள்ளன.
இந்த வாரம்தான், அமெரிக்க சிப் நிறுவனமான இன்டெல், மும்பையை சேர்ந்த டாடா எலெக்ட்ரானிக்ஸுடன் இணைந்து இந்தியாவில் சிப்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்தது.
ஆனால் தனது சொந்த ஏஐ மாதிரியைப் பொறுத்தவரை, இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசு ஒரு செயற்கை நுண்ணறிவு திட்டத்தைத் தொடங்கியது. அதன் மூலம் ஸ்டார்ட்அப்கள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு உயர் திறன் கொண்ட கம்ப்யூட்டிங் சிப்கள் வழங்கப்பட்டு, ஓபன்ஏஐ அல்லது சீனாவின் டீப்சீக் போன்ற பெரிய, சொந்தமான ஒரு ஏஐ மாடலை உருவாக்க ஊக்கமளிக்கப்பட்டது.
மத்திய மின்னணு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 22க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும் இந்த சுயாதீன மாதிரி விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கிடையில், டீப்சீக், ஓபன்ஏஐ போன்றவை அடுத்த கட்டங்களுக்கு முன்னேறி, புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
கண்காணிக்கப்படுவதற்கான மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கான அபாயங்களின் காரணமாக வெளிநாட்டு தளங்களின் மீது அதிகமான நம்பிக்கை வைக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தாலும், இந்தியாவின் 1.25 பில்லியன் டாலர் சுயாதீன திட்டமானது, பிரான்சின் 117 பில்லியன் டாலர் அல்லது சௌதி அரேபியாவின் 100 பில்லியன் டாலர் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது.
பட மூலாதாரம், Getty Images
செமிகண்டக்டர் கிடைப்பது, திறமையான உயர்தர பணியாளர்கள் கிடைப்பது, ஒன்றிணைக்கப்படாத தரவு சூழல்கள் என இந்தியாவின் இலக்குகளை அடைய மற்ற பல சவால்கள் இருப்பதாக ஈஒய் (EY) என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவிடம் தற்போது போதுமான கணக்கீட்டு உள்கட்டமைப்போ (computational infrastructure) அல்லது சீனா மற்றும் அமெரிக்காவுக்கு ஒரு தனித்துவமான பலத்தை அளித்த, பல தசாப்தங்களாகச் செய்யப்பட்ட பில்லியன் டாலர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடோ இல்லை.
செயற்கை நுண்ணறிவு சார்ந்து உலகளாவிய பலம் இருந்தபோதிலும், இந்தியா தனது திறன்மிகு பணியாளர்களை உள்நாட்டிலேயே வைத்திருக்கப் போராடுகிறது.
“தற்போதைய வெளிநாட்டு பணி விசாக்கள் இறுக்கமடைந்துள்ளதால், உள்நாட்டு திறமைகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திறமைகளை உள்நாட்டில் ஈர்க்கவும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
இருப்பினும், உயர்மட்ட ஏஐ நிபுணர்கள் உலகளவில் எளிதாக இடம்பெயரக் கூடியவர்கள் என்பதால், அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வதை ஊக்குவிக்க கவர்ச்சிகரமான கொள்கை சார் சலுகைகள் அமல்படுத்தப்பட வேண்டும்,” என்று ஈஒய் அறிக்கை கூறுகிறது.
உதாரணமாக, சீனா “நிதி உதவி மற்றும் மானியங்கள், வரிச் சலுகைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதியுதவி, சிறப்புத் திறன் விசாக்கள் மற்றும் விரைவான குடியேற்றம்” போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியா, உலக சராசரியைவிட 2.5 மடங்கு அதிக திறன்மிகு ஏஐ நிபுணர்களைக் கொண்டிருந்தாலும், அவர்களை நாட்டில் தக்க வைத்துக்கொள்ளத் தேவையான கொள்கைகள் இன்னும் நடைமுறையில் இல்லை.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
படக்குறிப்பு, தரவு மையங்களில் இந்தியா பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
ஆனால் சவால்கள் இருந்தபோதிலும், பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் “அதன் பொருளாதார வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, ஏஐ துறையில் தனது நிலையைவிட சிறப்பாகவே செயல்படுகிறது” என ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான மாநாட்டின் (UNCTAD) ஆய்வு தெரிவித்துள்ளது.
உலகளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் ஸ்டான்ஃபோர்ட் ஏஐ இன்டெக்ஸ் 2025-இன் படி, ஏஐ முதலீடுகளைப் பெறும் புதிய நிறுவனங்கள் என்ற அளவுகோலில் இந்தியா உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த ஆண்டு, இந்தியாவில் 74 புதிய ஏஐ ஸ்டார்ட்அப்கள் நிதியுதவி பெற்றன. அமெரிக்காவில் நிதியுதவி பெற்ற 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் ஒப்பிடும்போது இதுவொரு சிறிய பகுதி மட்டுமே.
அமெரிக்காவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், சீனாவில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலருக்கு அதிகமாகவும் இருந்த நிலையில், இந்திய ஏஐ ஸ்டார்ட்அப்கள் தனிப்பட்ட முறையில் 1.16 பில்லியன் டாலர் மட்டுமே நிதி திரட்டின.
ஆனால் ஏஐ தொடர்பான அறிவியல் ஈடுபாடு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு வகிக்கிறது.
ஸ்டான்ஃபோர்ட் ஏஐ இண்டெக்ஸின்படி, உலகளாவிய ஏஐ கட்டுரைகளில் 9.2% இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்டவை. இது அமெரிக்காவைவிட சிறிது அதிகம். ஆனால் ஐரோப்பா மற்றும் சீனாவைவிட குறைவு.
பட மூலாதாரம், Getty Images
செலவு மிகுந்த மொழி மாதிரிகளை உருவாக்குவதில் அல்லாமல், அவற்றைப் பயன்படுத்தி தொழில்முனைவோரைத் தூண்டுவதில்தான் இந்தியா தனித்துவமான முன்னிலையைப் பெறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“குறுகிய காலத்தில் அமெரிக்காவில் ஏஐ முதலீடுகள் மிகுந்த அளவில் திரண்டுள்ளதாக நான் கருதுகிறேன். ஆனால் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், புதிய நிறுவனங்களை உருவாக்குவதில் ஏஐ ஒரு பெரிய ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தும். சிறு நிறுவனங்களை வைத்திருப்போர் மற்றும் தொழில் முனைவோர் அதிக அளவில் உருவாவார்கள். அதன் தொடர்ச்சியான விளைவுகள் இந்தியா மற்றும் ஆசிய–பசிபிக் போன்ற பகுதிகளுக்கு அற்புதமான முன்னேற்றத்தைத் தரும்,” என்று ஏஐ ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷைலேந்திர சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தியாவில் ஏஐ சார்ந்த நுகர்வோர் பயன்பாடுகள் வேகமாக வளர்கின்றன. ஏஐ ஸ்டார்ட்அப் முதலீடுகள் கடந்த ஆண்டைவிட இரட்டிப்பாகியுள்ளன.
மேலும், பல இந்திய ஸ்டார்ட்அப்கள் இணைய வசதியில் இருந்து இன்னும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைச் சவால்களை ஏஐ மூலம் தீர்க்க முயல்கின்றன.
மகாராஷ்டிரா அரசின் மஹாவிஸ்டார் (MahaVISTAAR) என்ற ஏஐ செயலி, உள்ளூர் மராத்தி மொழியில் முக்கிய வேளாண் தகவல்களை வழங்குகிறது. இது 1.5 கோடி விவசாயிகளுக்குச் சென்றடைந்துள்ளது.
“செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவதற்கு மிகவும் கடினமான இடங்களே அது மிகவும் அவசியமாகத் தேவைப்படும் இடங்கள். இந்தியாவின் வகுப்பறைகள், மருத்துவமனைகள், பண்ணைகள் ஆகியவற்றில் ஏஐ செயல்பட முடிந்தால், அதனால் உலகிற்கும் சேவை செய்ய முடியும்” என்று இந்தியாவின் பயோமெட்ரிக் திட்டத்தின் சிற்பியான நந்தன் நிலேகனி கடந்த மாதம் தி எகனாமிஸ்ட் இதழில் எழுதினார்.
மஹாவிஸ்டார் (MahaVISTAAR) போன்ற செயலிகள் இது உண்மையாகத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன.
செயற்கை நுண்ணறிவு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், அது கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இயக்கிப் பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஐடி துறைக்கே பெரிய சவாலாக மாறும்.
ஏஐ பல வணிக செயல்பாடுகளை மாற்றியமைக்கும் நிலையில், இந்தியாவின் பில்லியன்-டாலர் ஐடி நிறுவனங்கள் ‘மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக’ மாறலாம் என்று ஜெஃப்பெரிஸ் கூறுகிறார்.
அதன் அறிகுறிகள் ஏற்கெனவே தென்படத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பின்தள (IT back offices) வளர்ச்சி மந்தமாகி வருகிறது. பங்குகள் குறைவாகச் செயல்படுகின்றன, வேலைவாய்ப்பு சுருங்கியுள்ளது, ஊதியங்கள் நின்றுவிட்டன. ஏனெனில், ஒரு புதிய சவால் பெரிதாக உருவெடுத்துள்ளது.