பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம், உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக சிக்கலானது என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த ஆலோசகர் பிபிசி தமிழிடம் பேசும்போது, பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கு தேவையான திறமையான தொழிலாளர் படை அமெரிக்காவில் இல்லை, குறிப்பாக ரோபோட்டிக்ஸ் மற்றும் கிளீன்ரூம் பொறியியல் துறையில். இதனால் இடமாற்றம் செய்வது நடைமுறையில் சாத்தியமற்றதும் நிதி ரீதியாக அர்த்தமற்றதும் ஆகும் என்றார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியின் தற்போதைய போக்கு இந்தியாவை நோக்கி இருப்பது வெறும் போக்கல்ல, இது நீண்டகால தவிர்க்க முடியாத நிலை என நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை விரிவுபடுத்துவது பற்றி தனது அதிருப்தியை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்
தோஹாவில் நடைபெற்ற ஒரு வணிகக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “டிம் குக்குடன் எனக்கு ஒரு சிறிய பிரச்னை இருந்தது. அவர் இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளை கட்டி வருகிறார். நீங்கள் இந்தியாவில் கட்டுவதை நான் விரும்பவில்லை என்றேன்” எனக் கூறினார்.
மேலும், “நண்பரே, நான் உங்களை மிகவும் நன்றாக நடத்துகிறேன். நீங்கள் 500 பில்லியன் டாலர் முதலீட்டோடு வருகிறீர்கள், ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்படுகிறேன். அதனை நான் விரும்பவில்லை என்று கூறினேன்” என்றார்.
இந்த உரையாடலுக்கு பின், அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியை கூடுதலாக்க டிம் குக் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் கூறினார். மேலும் அதிக உற்பத்தி சார்ந்த வேலைகளை அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன்கள் உற்பத்தியை முதன்மையாக சீனாவிலும், இந்தியாவிலுமே மேற்கொள்கிறது.
ஆப்பிளின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக சீனா இருந்து வருகிறது.
உலக அளவில் விற்கப்படும் ஐபோன்களில் 80 சதவீதம் சீனாவில் உற்பத்தியாகிறது.
இந்தியாவும் அதன் முக்கியமான உற்பத்தித் தளமாக வளந்துள்ளது. உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் சுமார் 15-20% பங்களிப்பை கொண்டுள்ளது.
‘சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் வேலை வாய்ப்புகள்’
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில், 2025 மார்ச் மாதம் முடிவடைந்த கடந்த 12 மாதங்களில் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டினை விடவும் இது 60 சதவீதம் அதிகரிப்பாகும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தி, தமிழ்நாட்டில் செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையிலும், டாட்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் நிறுவனத்திலும் நடக்கிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் சூழல் ஏற்படும் என்று கருதவில்லை என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய இந்திய டெலிகாம் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், என்.கே.கோயல்.
“ஆப்பிள் இந்தியாவில் மூன்று தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. மேலும் இரண்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தொழில் செய்ய ஏதுவான கொள்கைகள் காரணமாக இந்தியாவில் தொழில் செய்வது இன்று விருப்பமான தேர்வு அல்ல, கட்டாயமாகும். ஆப்பிள் நிறுவனம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார விளைவுகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்கும்.
இந்தியாவில் உற்பத்தி என்பது சீனாவிலிருந்து வேலை வாய்ப்புகள் இந்தியாவுக்கு வருகின்றன என்றுதான் அர்த்தம், அமெரிக்காவிலிருந்து வருகின்றன என இல்லை. இதை அமெரிக்கா உணரும். அப்போது இந்தியாவை தேர்ந்தெடுப்பார்களா? அல்லது சீனாவிடம் செல்வார்களா?” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டும் இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்திச் செயல்பாடுகளை இரட்டிப்பாக்கி, 25-30 மில்லியன் யூனிட் என்ற எண்ணிக்கைக்கு உயர்த்திட திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் சீனாவே உற்பத்தி எண்ணிக்கையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுமார் 80 சதவீத ஐபோன்கள் இன்னும் அங்கேதான் தயாரிக்கப்படுகின்றன.
புவிசார் அரசியல் பதற்றங்களும், வரி விதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக தனது விநியோகச் சங்கிலியை பன்முகப்படுத்திட ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை நோக்கி மாறுவதை துரிதமாக்கி வருகிறது.
இந்திய டெலிகாம் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், என்.கே.கோயல், “உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை பரந்துபட்டதாக ஆக்க வேண்டும் என்று நினைத்தே ‘சீனா பிளஸ்’ என்ற உத்தியை கடைப்பிடிக்கின்றன. சீனாவில் உற்பத்தி செய்வதுடன் வேறு ஒரு நாட்டிலும் உற்பத்தி செய்ய நினைக்கின்றன. இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு. இங்குள்ள தொழில் கொள்கைகள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. உற்பத்திக்கு ஏற்ப சலுகைகள் (Production linked incentive) வழங்கப்படுவது இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய உந்துதலாகும்” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஆப்பிள் நிறுவனத்தால் அமெரிக்காவில் லாபகரமான உற்பத்தியை மேற்கொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் மாநில தொழில்துறை கிளஸ்டர்களின் செயல்பாடுகளுடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு மூத்த ஆலோசகர் பிபிசி தமிழிடம், அதிக அளவிலான மின்னணு உற்பத்திக்கு தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை என்றார்.
“மேம்பட்ட உற்பத்திக்கு ரோபாட்டிக்ஸ், துல்லியமான பொறியியல் திறன்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. சுமார் 20-25% அமெரிக்கர்கள் மட்டுமே தொழிற்சாலை வேலையைக் கருத்தில் கொள்கின்றனர் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இது தொழில் உற்பத்தி விருப்பத்துக்கும், ஆட்பற்றாகுறைக்கும் இடையிலான இடைவெளியை சுட்டிக்காட்டுகிறது. கூடுதலாக, தொழிலாளர் செலவுகள் கணிசமாக அமெரிக்காவில் அதிகரிக்கும்” என்கிறார்.
”இந்திய அசெம்பிளி தொழிலாளர்கள் மாதத்திற்கு சுமார் $290 (இந்திய மதிப்பில் 24,816 ரூபாய்) சம்பாதிக்கிறார்கள். அதேசமயம் அமெரிக்க குறைந்தபட்ச ஊதிய சட்டங்கள் இதை மாதத்திற்கு கிட்டத்தட்ட $2,900 ஆக உயர்த்தக்கூடும், இது ஐபோன் அசெம்பிளி செலவுகளை ஒரு செல்போனுக்கு சுமார் $30 லிருந்து $300-க்கு மேல் உயர்த்தக்கூடும். தொழிலாளர் படை இல்லாமல், அதிக ஊதியம் கொடுக்க வேண்டிய நிலையில், பெரிய அளவிலான அமெரிக்க உற்பத்தி சாத்தியமற்றதாகத் தெரிகிறது” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஆலையில் பணி செய்யும் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த 23 வயது நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு நாளுக்கு 9 ஆயிரம் செல்போன்களை சரிபார்க்கிறார்.
புதிய தொலைபேசிகளின் பக்கவாட்டில் உள்ள பட்டன்களை சரிபார்ப்பதுதான் அவருடைய வேலை.
“நாள் முழுவதும் உற்பத்தி வரிசையில் முன்னும் பின்னும் நடந்து, ஒவ்வொரு ஷிப்ட் நேரத்திலும் சுமார் 9,000 தொலைபேசிகளைச் சரிபார்க்கிறேன்,” என்றார்.
‘60,000 வேலைகளை இழக்கும் அபாயம்’
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒன்று, தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகும்.
இது சென்னையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.
இந்த ஆலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளது, இவர்களில் பெரும்பாலோர் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்த இளம் பெண்களாவர். இந்த வேலை தங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற பெரிய நம்பிக்கையை அவர்கள் கொண்டுள்ளனர்.
12ஆம் வகுப்பை முடித்த பிறகு, செவிலியர் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்த நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு சிறிய கிராம மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.
“அங்கே நான் மாதத்திற்கு சுமார் ரூ.6,000 சம்பாதித்தேன்,” என்கிறார் அவர். இப்போது அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.17,000 சம்பாதிக்கிறார்.
“என்னிடம் பலரும் ஐபோன் பயன்படுத்த விருப்பமா என்று கேட்கிறார்கள். எனக்கு வேண்டாம். அந்த அளவு பணத்தைக் கொண்டு, நான் என் சொந்த ஊரில் வீடு கட்டுவது போல பல கடமைகளை செய்து முடிக்க முடியும். அதுவே எனது விருப்பம்” என்றார்.
ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளதால், மாநிலம் இந்தியாவின் ஐபோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவிற்கு முழுமையாக மாறுவது இந்தியாவின் ஆப்பிள் விநியோகச் சங்கிலியில் சுமார் 60,000 வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது தமிழ்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை விகிதாசாரமாக பாதிக்கும் என்று தமிழ்நாடு தொழில் துறையுடன் தொடர்புடைய ஓர் உயர் அதிகாரி தெரிவித்தார்.
“ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் ஐபோன்களை தயாரிப்பதில் மாநிலத்தின் பங்கு இருப்பதால், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு 3- 4 பில்லியன் டாலரைத் தாண்டக்கூடும். ஆப்பிளைப் பொருத்தவரை, உற்பத்தியை இடமாற்றம் செய்வது அதிக தொழிலாளர் செலவுகள் காரணமாக ஒரு செல்போனுக்கான லாபத்தை சுமார் 450 டாலரில் இருந்து கிட்டத்தட்ட 60 டாலருக்கு குறைக்கும், இது விலை உயர்வை கட்டாயப்படுத்தும், அல்லது லாபத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார சமச்சீரற்ற தன்மை முழுவதுமாக அமெரிக்காவுக்கு உற்பத்தியை மாற்றுவது வணிக ரீதியாக ஆப்பிளுக்கு சவாலானதாகவும், தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கு கூட பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் ஆக்குகிறது” என்று அவர் கூறினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு