பட மூலாதாரம், Prashanti Aswan
இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள மக்கள் மத வழிபாட்டுக்காகவும் ஆன்மீக வழிகாட்டுதலுக்காகவும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி நகர்கின்றனர். இயந்திரங்கள் நம்முடைய புதிய ஆன்மிக வழிகாட்டிகளாக மாறினால் என்ன நிகழும்?
இந்தியாவின் ராஜஸ்தானில் வாழும் 25 வயது மாணவரான விஜய் மீல் நவீன வாழ்க்கையின் கேள்விகளையும் சவால்களையும் எதிர்நோக்க கடவுளை நாடுகிறார். முன்பு ஆன்மிக தலைவர்களிடம் ஆலோசனை பெற்றிருந்த அவர், சமீபத்தில், அவர் ‘கீதா-ஜிபிடி’ (GitaGPT) செயற்கை நுண்ணறிவியின் உதவியை நாடியிருக்கிறார்.
கீதா-ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படும் ஒரு சேட்பாட் (Chatbot). இந்து கடவுள் கிருஷ்ணர் வரும் புனித நூலான பகவத் கீதையின் 700 பாடல்களும் இதற்கு நன்கு தெரியும். இந்த செயலியுடன் உரையாடுவது நீங்கள் நண்பர்களோடு செய்யும் டெக்ஸ்ட் (Text) உரையாடலைப் போலத்தான். என்ன, நீங்கள் கடவுளுடன் உரையாடுவதாக இந்த செயற்கை நுண்ணறிவு உங்களிடம் சொல்லும்.
“என்னால் வங்கி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதபோது நான் மிகவும் சோர்ந்திருந்தேன்” என்று சொல்லும் மீல், கீதா-ஜிபிடி பற்றி தெரிந்த பிறகு, தன் மனதுக்குள் இருக்கும் சிக்கல்களையும் அதில் டைப் செய்திருக்கிறார்.
‘கடைமையச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்பதுபோன்ற நம்பிக்கை வார்த்தைகளை கீதா-ஜிபிடி சொல்ல, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார் மீல்.
பட மூலாதாரம், Getty Images
சோதனைக் கூடமாகத் திகழும் இந்து மதம்
“அதுவொன்றும் எனக்குத் தெரியாத பழமொழி இல்லை. ஆனால், அந்தத் தருணத்தில் அதை என்னிடம் யாரேனும் சொல்லவேண்டிய தேவை இருந்தது. இது என் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யவும், மீண்டும் புதிதாகத் தயாராகத் தொடங்கவும் உதவியது” என்கிறார் மீல்.
அப்போது முதல் வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை உரையாடும் ஒரு நண்பனைப் போல் அவருக்கு ஆகிவிட்டது கீதா-ஜிபிடி.
நாம் எப்படி பணியாற்றுகிறோம், கற்றுக்கொள்கிறோம், நேசிக்கிறோம் என்பதையெல்லாம் செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், எப்படிப் பிரார்த்திக்கிறோம் என்பதையும் அது மெல்ல மெல்ல மாற்றி வருகிறது.
உலகின் முக்கிய மதங்களைச் சேர்ந்த பக்தர்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு ‘சாட்பாட்கள்’ மூலம் ஆன்மிக அனுபவங்களைச் சோதித்துப் பார்க்கிறார்கள்.
ஆனால் தெய்வங்களின் உருவங்களையும் சிலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையான மரபைக் கொண்ட இந்து மதம், நம்பிக்கையும் தொழில்நுட்பமும் ஒன்றிணையும் இந்தப் புதிய கலவைக்கு உயிர்ப்பளிக்கும் ஒரு சோதனைக் கூடமாகத் திகழ்கிறது.
மனித அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியையும் செயற்கை நுண்ணறிவு (AI) தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த இயந்திரங்கள் வழியாக தெய்வத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய ஒரு முன்னோட்டத்தை இந்தியா வழங்கக்கூடும்.
“மனிதர்கள் சமூகத்துடனிருந்து, பெரியவர்களிடமிருந்து, கோவில்களிலிருந்து விலகியிருக்கிறார்கள். இப்போது கடவுளைப் பற்றி செயற்கை நுண்ணறிவிடம் பேசுவது ஓர் ஆன்மீக தேடல் மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கான தேடலும் கூட” என்று சொல்கிறார் அமெரிக்காவின் வெல்லெஸ்லி கல்லூரியின் பேராசிரியராகப் பணிபுரியும் மானுடவியலாளர் ஹோலி வால்டெர்ஸ்.
புனித பொருள்கள், யாத்திரை மற்றும் சடங்குச் செயல்பாடுகள் குறித்து தெற்கு ஆசியாவில் ஆராய்சி செய்பவர் இவர். மதங்களுக்குள் செயற்கை நுண்ணறிவு நுழைவைத் தவிர்க்க முடியாது என்று கூறும் வால்டர்ஸ், “நான் ஏன் தவிர்க்க முடியாது என்று கூறுகிறேன் என்றால், இது ஏற்கெனவே நடக்கத் தொடங்கிவிட்டது” என்கிறார்.
பட மூலாதாரம், Prashanti Aswan
ஒரு பெரும் பொதுக் கடவுள்: செயற்கை நுண்ணறிவு?
கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல மத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில், டெக்ஸ் வித் ஜீசஸ் (Text With Jesus) எனும் ஒரு AI செயலி, இயேசு உள்ளிட்ட பைபிள் கதாபாத்திரங்களின் AI உருவங்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு அளிக்க, அது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
அதே ஆண்டில், குர்ஆன் அடிப்படையில் கேள்விகளுக்கு பதிலளித்து வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்ட ‘குர்ஆன்-ஜிபிடி’ (QuranGPT) செயலி பல பயன்பாட்டாளர்களை ஈர்க்க, வெளியான ஒரே நாளில் அந்தத் தளம் செயலிழந்திருக்கிறது.
நீங்கள் காங்ஃபியூசியஸ், ஜெர்மன் தேவியியலாளர் மார்டின் லூதர் உள்பட எண்ணற்ற ஆன்மீக பாத்திரங்களின் AI உருவங்களோடு உரையாடலாம். AI ஒரு சில மதங்களுக்கு ஆதாரமாகவும் அமையலாம்.
உதாரணமாக ‘வே ஆஃப் தி ஃப்யூச்சர்’ (Way of the Future) என்ற சபையை சொல்லலாம். முன்னாள் கூகுள் பொறியாளர் ஆண்டனி லெவண்டோவ்ஸ்கியால் தொடக்கப்பட்ட இந்த குழு, செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் கடவுளை உணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்து வழிபாட்டின் சில அம்சங்கள் இதை சுவாரஸ்யமான ஆய்வாக்குகின்றன.
உருவம் கொண்ட விஷயங்களுக்கே புனிதத்தன்மை கொடுக்கப்படும் ஒரு மரபில், அன்றாட வாழ்வில் கடவுள் இடம்பெறுவதற்கான இன்னொரு வெளியாக இந்த செயற்கை நுண்ணறிவு அமையலாம் என்று வால்டர்ஸும் மற்ற ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்.
உதாரணமாக, சிலைகளும் உருவங்களுமே தெய்வ சக்தியை உள்ளடக்கிவைத்திருப்பதாகவும், கடவுள்கள் அதில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவையே வழிபாடுகளின் மையமாக இருக்கின்றன. அதற்கு பூஜை செய்யப்பட்டு, மந்திரங்கள் சொல்லி, உணவு, மலர்கள், தீபம், ஆராதனை என அனைத்தும் காட்டுப்படுகின்றன.
கடவுளைப் பார்ப்பதற்கும், கடவுளால் பார்க்கப்படுவதற்கும் இவையே முக்கிய வழியாகக் கருதப்படுகின்றன.
“ரோபோ கிருஷ்ணா, சேட்பாட்கள் என்று இப்போது செய்திகளில் வரும் விஷயங்களெல்லாம் ஒரு அழகான புதுமையான விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், இப்போதைக்கு இவையெல்லாம் புதுமை என்பதைக் கடந்துவிட்டன” என்று சொல்கிறார் வால்டர்ஸ்.
படிப்பை விட்ட இளைஞர்
சாட்-ஜிபிடி (ChatGPT) மற்றும் ஜெனரேடிவ் ஏஐ (generative AI) பிரபலமானபோது, தொழில்முனைபவர்கள், பக்தர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் பலருக்கும் சாட்பாட்கள் உருவாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டது. வெவ்வேறு இந்து கடவுள்களின் போதனைகளை நேரடியாகக் கற்பிக்கக்கூடிய கீதா-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வணிக மாணவர் விகாஸ் சாகு, தனது கீதா-ஜிபிடி-ஐ கூடுதல் வேலையாக நேரம் கிடைத்தபோதெல்லாம் செலவிட்டு உருவாக்கினார்.
வரவேற்பு குறைவாகவே இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் சில நாட்களிலேயே ஒரு லட்சம் பயணாளற்களை அதன் சேவையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அன்று முதல் மற்ற இந்து கடவுள்களை அடிப்படையாக வைத்து சாட்பாட்கள் உருவாக்குவதென்று தன் வேலையை அவர் விரிவு செய்துகொண்டார். “இதை இந்து கடவுள்களின் போதனைகளைப் பரைசாற்றும் ஒரு இடமாக மாற்றவேண்டும்” என்று அவர் விரும்புகிறார். இந்த திட்டத்துக்குப் போதுமான நிதியைத் திரட்ட தன் எம்பிஏ படிப்பை பாதியில் விட்டிருக்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
ஐடி துறையில் பணியாற்றிவரும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான தன்மே ஷ்ரெஸ்த், பகவத் கீதையை மையமாகக் கொண்டு ஒரு சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறார். அது பயணாளிகளுக்கும் கிருஷ்ணருக்கும் நேரடி தொடர்பை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில் நிலையான ஒன்றை இந்த செயற்கை நுண்ணறிவு செயலி கொடுக்கும் என்ற்கிறார் தன்மே. “ஏஐ முன்கூட்டியே முடிவுகளுக்கு வராது, எளிதாக அணுகக்கூடியது, சிந்திக்கக்கூடிய உரையாடல்களை ஏற்படுத்தக்கூடியது” என்றும் சொல்லியிருக்கிறார் அவர்.
இந்த செயற்கை நுண்ணறிவுகள் கிருஷ்ணரையும் சிவனையும் மட்டும் பயன்படுத்தவில்லை. கேரக்டர்.ஏஐ (Chatacter.AI) என்ற சாட்பாட், 20ம் நூற்றாண்டின் பிரசித்திபெற்ற இந்திய முனிவரான பகவான் ஶ்ரீ ரமன மஹரிஷியின் போதனைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 35,000 உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன.
பல பெரிய ஆன்மிக அமைப்புகள் இந்த மாற்றத்தை அரவணைத்துக்கொள்கின்றன. 2025 தொடக்கத்தில், பிரபலமான இந்திய குருவும் ஈஷா ஃபவுண்டேஷனின் நிறுவனருமான சத்குரு, பல ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ (Miracle of Mind) என்ற தியான செயலியை அறிமுகப்படுத்தினார்.
“பழமையான ஞானத்தை சமகால முறையில் வழங்க ஏஐ-யை நாங்கள் பயன்படுத்துகிறோம். செயலியை புத்திசாலித்தனமாக மட்டுமே கட்டமைக்கவேண்டும் என்று நினைக்காமல், பயன்படுத்துபவர்களின் அனுபவம் தனிப்பட்டதாகவும் உண்மையானதாகவும் மாற்றவேண்டும் என்பதுதான் இலக்காக இருந்தது” என்று கூறினார் ஈஷா ஃபவுண்டேஷனில் செய்திப்பிரிவுத் தலைவராகவும், முழுநேர தன்னார்வலராகவும் இருக்கும் துறவி ஸ்வாமி ஹர்ஷா.
“இந்த செயலியில் இருக்கும் கருத்துகள் யாருவே கடந்த 35 ஆண்டுகளாக சத்குரு கற்றுக்கொடுத்தவை. அவற்றை ஒருவருக்கு அந்த நேரத்தில் என்ன தேவையோ அதற்கு ஏற்றதுபோல் அவருக்குச் சொல்லும் விதத்தில் வடிவமைத்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
புழக்கத்துக்கு வந்த 15 மணி நேரத்தில் சுமார் 10 லட்சம் பேர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
கும்பமேளாவில் ஏ.ஐ
2025ம் ஆண்டு இந்தியாவில் நடந்த கும்ப மேளா, உலகின் மிகப் பெரிய மதக்கூட்டமாகக் கருதப்படுகிறது. இதில் பல விஷயங்களாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல மொழிகளில் பயன்படுத்தக்கூடிய கும்ப் சா’ஏஐ’யாக் (Kumbh Sah’AI’yak) எனப்படும் ஒரு சாட்பாட் மக்கள் பயணம், இருப்பிடம் போன்ற விஷயங்கள் பற்றிய உதவிகளுக்காக பயன்பட்டது.
ஒரு ‘டிஜிட்டல் மஹாகும்ப் அனுபவ மையம்’ கூட அப்போது அமைக்கப்பட்டது, இது விர்ச்சுவல் (virtual) மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (augmented reality) கருவிகளைப் பயன்படுத்தியது. புராணக் கதைகளை உயிர்ப்பிக்கக்கூடிய ஆன்மீக பயணங்களுக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதாக இது இருந்தது.
பக்தர்கள் மஹா கும்ப மேளா யாத்திரையின் டிஜிட்டல் தரிசன அனுபவத்தில் குடும்பத்தினரை இணைக்க வீடியோ கால் செய்தனர். சிலர் கூட, இணையத்தின் மூலமாக திரிவேணி சங்கம நீரில் மூழ்கினர்.
ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு, பக்தர்கள் ‘டிஜிட்டல் குளியல் சேவையில் கலந்து கொள்ள முடிந்தது. இதில் நீங்கள் வீடியோ காலில் இருக்க, ஒருவர் உங்கள் புகைப்படத்தை நீரில் மூழ்க வைத்து எடுப்பார்
ஆன்மீகம் மற்றும் கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. 2022ல் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சில் ஒரு மிகப்பெரிய மொழி மாதிரியை வைத்து பகவத் கீதை மற்றும் உபநிடதங்களின் எழுத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இது இரண்டு உரைகளில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இடையேயான சராசரி 73% ஒற்றுமை வெளிப்பட்டது. .
செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற ஆயுவுகள் மனிதர்கள் தாமாகப் படிக்கும்போது தவறவிடும் கருப்பொருட்களை உணர்ந்துகொள்ளவும், ஆழமான அர்த்தங்களைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கெனவே இந்துத்துவமும் தொழில்நுட்பமும் ஒன்றிணைந்தே இருந்தன, செயற்கை நுண்ணறிவு அதன் ஒரு நீட்சிதான் என்கிறார் வால்டர்.
பட மூலாதாரம், Getty Images
ஒரு உதாரணம், கடவுளின் சிலைக்கு முன்பு சீராக வட்ட வடிவத்தில் கைகளையாட்டி எடுக்கும் ஆரத்தி. 2017ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது, அதன் அமைப்பாளர்கள் ஆரத்தி எடுக்கும் ஒரு ரோபோ கையைப் பயன்படுத்தினார்கள். உங்கள் வீட்டில் பூஜைகள் செய்யக்கூட நீங்கள் மலிவான ரோபோ சிலைகளையும் பூஜை உபகரணங்களையும் வாங்கலாம்.
உதாரணமாக, கேரளாவில் இருக்கும் இரிஞ்சடப்பள்ளி ஶ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இரிஞ்சடப்பள்ளி ராமன் எனும் ரோபோ யானை இருக்கிறது.
“சடங்குகள் செய்வது, பூஜைகள் செய்வது, ஆசிர்வாதம் கொடுப்பது என கோவிலில் இருக்கும் என்னெல்லாம் செய்யுமோ அதை இதுவும் செய்யும்” என்று கூறினார் வால்டர். மேலும், கிருஷ்ண சிந்தனைக்கான சர்வதேச அமைப்பான இஸ்கான் அமைப்பின் அங்கமாக இருக்கும் டெல்லியின் குளோரி ஆஃப் இந்தியா கோவிலில் முழுமையான அனிமேட்ரானிக் (Animatronic) சிலைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டிருக்கிறது.
“இந்த ரோபோ கடவுள்கள் பேசும், நகரும். எனக்கு இதுவொரு விசித்திரமான விஷயம் தான். ஆனால், பலருக்கும் இது கடவுள். பூஜைகள் செய்து தரிசனம் பெறுகிறார்கள்” என்றார் வால்டர்.
தெய்வீகமற்ற நடத்தை
நூற்றாண்டுகளாக மத சமூகங்கள் பாதிரியார்கள், பண்டிதர்கள் மற்றும் பிற ஆன்மிகத் தலைவர்களையே மையமாகக் கொண்டு இயங்கி வந்துள்ளன என்று தெய்விய நெறிமுறைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராயும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர் ரெவரெண்ட் லிண்டன் டிரேக் கூறுகிறார்.
ஆனால் “ஏஐ சாட்பாட்கள் உண்மையிலேயே மதத் தலைவர்களின் நிலையை சவாலுக்கு உட்படுத்தக்கூடும்” என்று டிரேக் கூறுகிறார்.
காரணம், அவை புனித நூல்களுடன் தொடர்பு கொள்ள புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதுடன், மக்கள் பெரிதாக உணராமலேயே அவர்களின் நம்பிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
மதம் சார்ந்த சாட்பாட்கள் புனித நூல்களின் அடிப்படையில் பயிற்சியளிக்கப்பட்டு, அதிலுள்ள வசனங்களை முறையாக மேற்கோளிடக்கூடும்; ஆனால் அவை மற்ற செயற்கை நுண்ணறிவுகள் போலவே விசித்திரமான பிழைகளும் குறைபாடுகளும் கொண்டிருக்கவே செய்கின்றன.
ஒரு சந்தர்ப்பத்தில் கீதா-ஜிபிடி, கிருஷ்ணரின் குரலில், “தர்மத்தை காக்க கொலை செய்வது நியாயமானது” என்று கூறியது என சாகு விளக்குகிறார். பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிற ஏஐ-களும் இதேபோன்ற கருத்துகளை வெளிப்படுத்தியதால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சன அலை எழுந்ததாகவும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“அது எவ்வளவு தீவிரமானது என்பதை நான் உணர்ந்தேன், அதனால் ஏஐ-யை மேலும் மேம்படுத்தி, இத்தகைய பதில்களைத் தடுக்க பாதுகாப்பு வரம்புகளை அமைத்தேன்,” என்று அவர் கூறுகிறார்.
“இப்போது சாட்பாட் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது, மேலும் சரியான வழிகாட்டலை வழங்கும் அதன் திறன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்றும் சொல்கிறார்.
2024 ஆம் ஆண்டில், ‘கத்தோலிக்க பதில்கள்’ என்ற ஒரு பிரசங்க குழு, “பாதிரியார் ஜஸ்டின்” என்ற தங்களின் சாட்பாட்டை ஆஃப்லைனுக்கு கொண்டுசென்றனர்.
ஏனெனில், ஒரு சில பயனாளர்களிடம் அது உண்மையான பாதிரியார் என்றும், அதனால் சடங்குகள் செய்ய முடியும் என்றும், குளிர்பானங்கள் வைத்துக்கூட ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறது. அதனால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விரைவாகவே அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த அந்தக் குழு, அந்த சாட்பாட்டின் பெயரிலிருந்து பாதிரியார் என்ற பெயரையும், அதன் படத்துக்கு அணிவித்திருந்த பாதிரியார் உடையையும் நீக்கியிருக்கிறது.
“கணிக்கக்கூடிய, பழைய நெறிமுறைகளில் வடிவமைக்கப்பட்ட ஏஐ-க்களில் இருக்கும் மிகவும் பிரதானமான பிரச்னை பயனற்ற மதம் சார்ந்த பதில்கள் கொடுப்பது” என்கிறார் டிரேக்.
மதம் சார்ந்த சாட்பாட்களை டிரேக் வரவேற்றாலும், அவை நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவிக்கிறார். டிஜிட்டல் கருவிகள் பெரும்பாலும் நடுநிலை தோற்றத்தை அளிக்கின்றன, இதனால் பயனர்கள் தாங்கள் தெளிவான, சார்பில்லாத தகவல்களைப் பெறுகிறோம் என்று தவறாக நம்பலாம். இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
“புனித நூல்கள் பற்றிய விளக்கங்கள் பெரும்பாலும் விவாதத்துக்குரியவையாக இருந்துள்ளன. ஆனால் ஏஐ சாட்பாட்கள் அவற்றை உருவாக்கியவர்களின் பார்வைகளையே பிரதிபலிக்கின்றன” என்று கூறுகிறார் டிரேக்.
செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி தரவின் சார்புகளை (biases) பிரதிபலிப்பது பொதுவாக அறியப்பட்ட விஷயம் என அவர் கூறுகிறார். எனவே, இத்தகைய சாட்பாட்கள் வழங்கும் மத நூல் விளக்கங்கள் சார்புள்ளதாகவோ, உண்மையிலிருந்து சற்று விலகியதாகவோ கூட இருக்கலாம் என்கிறார் அவர்.
இந்தியா போன்ற நாடுகளில், மதம் சார்ந்த செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் நாட்டின் பரந்த டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக அதிகரிக்கக்கூடும். தொழில்நுட்பப் புலமை குறைவான பயனர்களுக்காக, ஒரு சாட்பாட் புனித நூலிலிருந்து மேற்கோள்களை வழங்கினாலும், அது ஏற்கெனவே எழுதப்பட்டது என்றில்லாமல், உண்மையாகவே கடவுளின் குரலாகக் கருதப்படலாம் என்று வால்டர்ஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“ஆபத்து என்னவென்றால், மக்கள் இந்தச் சாட்பாட்கள் கூறுவதை உண்மையென நம்புவார்கள் என்பது மட்டும்ல்ல, அதை எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்றுகூட அவர்கள் உணராமல் போகலாம். இத்தகைய கருவிகள் தெய்வ குரலாகக் கருதப்படும்போது, அவற்றின் வார்த்தைகள் எதிர்பார்ப்பதைவிட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுடிய ஆபத்து இருக்கிறது” என்றும் கூறினார் அவர்.
பல விளைவுகளும் இருந்தாலும், சில பயனர்கள் ஏற்கனவே நன்மைகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை மறுக்க முடியாது.
“ஒருவர் கோவிலுக்கு அடிக்கடி போனாலும், பூசாரியுடன் ஆழமான உரையாடலை நடத்துவது அரிது. இதுபோன்ற சாட்பாட்கள், புனித நூலால் ஆதரிக்கப்பட்ட வழிகாட்டலை தொட்டுவிடும் தூரத்தில் வழங்குவதன் மூலம் அந்த இடைவெளியை நிரப்புகின்றன” என்கிறார் மீல்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு