பட மூலாதாரம், AFP via Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இரான் மீதான போர் தொடங்கியபோது, அது நீண்ட நாட்களுக்கு நீடித்தால் உலகெங்கிலும் பொருட்களின் விலைகள் உயரும் என்றும், பணவீக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்றும் பல நிபுணர்கள் கருதினர்.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதில் இருந்தே, இந்தியாவிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதி திடீரென நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுத்தார். அவர் அதில் விடுத்த கோரிக்கைகள் இவை தான்:
- பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைக்க வேண்டும்.
- பொதுப் போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
- தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
- ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்க வேண்டும்.
பிரதமரின் இந்த கோரிக்கை, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஏதோவொரு பெரிய நெருக்கடியைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இரான் மீதான தாக்குதல் தொடங்கிய சமயத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 91 என்ற நிலையில் இருந்த இந்திய ரூபாய், தற்போது 95 ரூபாய்க்கும் கீழே சென்றுள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக், “மிகவும் கடினமான சூழ்நிலைகளை” எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
பட மூலாதாரம், IAN FORSYTH/GETTY IMAGES
இந்தியா மட்டுமே மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லை. போர் தொடங்கிய பிறகு, பல நாடுகள் தங்கள் நுகர்வோர் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
சீனா, தங்களது நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எரிபொருள் ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டது. இருந்தபோதிலும், அங்கு பெட்ரோல் விலைகள் உயர்ந்தன. சில சீன விமான நிறுவனங்கள் விமான எரிபொருள் விலை உயர்வால் விமானச் சேவைகளைக் குறைத்தன.
ஆஸ்திரேலியாவின் சில மாகாணங்கள், மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை ஓட்டுவதைக் குறைப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கின அல்லது கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தன.
மார்ச் மாதத்தில் தேசிய அவசரநிலையை பிலிப்பின்ஸ் அறிவித்தது என்றால், இலங்கையும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியது.
‘அந்நியச் செலாவணி இருப்பை பாதுகாப்பது அவசியம்’
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் குறித்து தி லென்ஸ் நிகழ்ச்சியில், கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்தின் பத்திரிகைத்துறை இயக்குநர் முகேஷ் சர்மா, முன்னாள் நிதிச்செயலாளர் அசோக் ஜா, மூத்த பொருளாதார விவகார செய்தியாளர் மற்றும் ‘தி என் ஷோ’ ஆசிரியர் நீரஜ் பாஜ்பாய், மற்றும் பொருளாதார நிபுணர் தீபா சின்ஹா ஆகியோருடன் கலந்துரையாடினார்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போதைய சூழ்நிலை எந்த அளவுக்கு கவலையளிக்கிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முன்னாள் நிதிச் செயலாளர் அசோக் ஜா, தற்போது சூழ்நிலை மிகவும் மோசமானதாக இல்லை என்று கூறுகிறார்.
“அந்நியச் செலாவணி நிலைமை மிகவும் மோசமடையக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால், அது நமது அந்நியச் செலாவணி கையிருப்பைத் தொடர்ந்து பாதிக்கும் வாய்ப்புகளை மறுக்கமுடியாது. விரைவில் நிலைமை நிச்சயமாக தீவிரமடையக்கூடும்” என அவர் தெரிவித்தார்.
“எனவே, பிரதமரின் செய்தியின் முக்கியத்துவம் என்னவென்றால், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க வேண்டும், அதை வீணடிக்காதீர்கள் என்பதுதான். அதனால்தான் அவர் தங்கம் வாங்க வேண்டாம் என்றும், எரிபொருள் செலவைக் குறைப்பதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் கூறியுள்ளார்.”
“தங்கம் இந்தியர்களின் மனநிலையில் கலாசார ரீதியாகப் ஆழமாக வேரூன்றிய ஒரு பொருளாகும். எனவே, அதன் கொள்முதலைக் கட்டுப்படுத்த வெறும் வேண்டுகோள்கள் மட்டும் போதுமானதாக இருக்காது” எனச் சொல்கிறார் அசோக் ஜா.
“இதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6-இலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் திருமணம் மற்றும் இதர பண்டிகைகளுக்காக மக்கள் ஏதோ ஒரு வழியில் தங்கம் வாங்கத்தான் செய்வார்கள்.”
”இருப்பினும், இந்த நடவடிக்கை எதிர்பாராத விளைவாக தங்கக் கடத்தலை அதிகரிக்கக்கூடும். 1990-களில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி வெறும் 2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டபோது, தங்கக் கடத்தல் நடவடிக்கைகள் பெருமளவில் நின்றுவிட்டன என்பதை நினைவுகூரலாம்.”
“இப்போது அது 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டு, தற்போது 15 சதவீதமாக மாறியுள்ளது. இது ஒரு தேவையற்ற விளைவாகும்” என்று அசோக் ஜா கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“நமக்கு உண்மையில் தேவையானது நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பதுதான். அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நியப் பங்கு முதலீடு மூலம் இந்தக் கையிருப்பு நாட்டிற்குக் கிடைக்கின்றன. எனவே, முறையான கொள்கை முடிவுகள் மூலம் இந்த இரண்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அசோக் ஜா கூறுகிறார்.
“உதாரணமாக, கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு வரத்து தேக்கமடைந்துள்ளது அல்லது குறைந்துவருகிறது. இந்தப் போக்கிற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து, இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அப்போதுதான் நம்முடைய நிகர அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும்.”
“அதேபோல, கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் நாட்டிலிருந்து தங்கள் பணத்தை வெளியே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் எப்படித் தடுக்கலாம் என்றும் சிந்திக்க வேண்டும்.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
‘வளர்ச்சி விகிதத்தில் தாக்கம் ஏற்படும்’
மக்களைச் சிக்கனமாக இருக்குமாறு பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஓர் அறிவுரையாகப் பார்க்கப்பட்டாலும், தற்போதைய சூழ்நிலைகளைக் கவனித்தால் ஒரு நெருக்கடியாக மாறிவிடுமா?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் மூத்த பத்திரிகையாளர் நீரஜ் பாஜ்பாய், “பிரதமரின் சிக்கனத்திற்கான வேண்டுகோள் குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்குமா என எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் என்னவென்றால், நம்முடையது அதிக நுகர்வை மையமாகக் கொண்ட பொருளாதாரம் அல்ல. வரலாற்று ரீதியாகவே, நாம் நமது அடிப்படைத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ஒரு பொருளாதாரமாகவே இருந்து வருகிறோம்” என்றார்.
மேலும், “தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், நமது எரிபொருள் நுகர்வில் 30 சதவிகிதம் பெட்ரோலாகவும், 70 சதவிகிதம் டீசலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் டீசல் பயன்பாடு என்பது அத்தியாவசியத் தேவைகளின் அடிப்படையிலேயே அமைகிறது. டீசல் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வந்துவிட முடியாது. அதேபோல, பெட்ரோல் பயன்பாட்டைப் பெருமளவு குறைத்தாலும் கூட, அதனால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்பட்டுவிடாது” என்றார்.
“இரண்டாவதாக, இந்தியப் பொதுமக்கள் பொதுவாகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகாத வரை, இத்தகைய வேண்டுகோள்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. எனவே, இந்த நடவடிக்கைகள் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.”
மேலும், “பொதுப் போக்குவரத்துத் துறையின் நிலைமை ஏற்கனவே மோசமாகத்தான் உள்ளது, மக்கள் வேறு வழியில்லாமல் கட்டாயத்தின் பேரில் தான் அதைப் பயன்படுத்துகிறார்கள். மாற்று வழிகளுக்கான பற்றாக்குறை உள்ளது. இந்த வேண்டுகோளின் நோக்கம் மிகவும் நல்லதுதான். ஆனால், மக்கள் ஏற்கனவே தங்களின் மிகக் குறைந்தபட்சத் தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், இதில் மேலும் பெரிய அளவில் குறைப்பைக் கொண்டு வர முடியும் என்று தோன்றவில்லை” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
மக்கள் கவனமாக செலவு செய்யவேண்டும் என்ற பரிந்துரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அல்லது வேகமாக வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் மீது நீண்ட கால அடிப்படையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் நீரஜ் பாஜ்பாய், நீண்ட கால நோக்கில் இது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.
அவர் கூறுகையில், “சிக்கனம் அல்லது செலவுகளைக் குறைப்பது என்ற நடவடிக்கை கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், இதனால் ஜிஎஸ்டி வசூலும் குறையும். நான் நாளொன்றுக்கு மூன்று முறை பயன்படுத்திக் கொண்டிருந்த பொருளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துங்கள் என்று கூறினால் என்ன ஆகும்? அதன் விளைவாக, அரசின் மாதாந்திர ஜிஎஸ்டி வசூலும் பாதிக்கப்படும். எனவே, பொருளாதார வளர்ச்சியில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கம் தவிர்க்க முடியாதது.”என்கிறார்
“எரிசக்தி செலவுகள் மிக வேகமாக அதிகரித்து வருவதால், பொருளாதாரத்தின் மீதான தாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. நுகர்வை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் முன்பு ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது என்பதை நினைவுகூருங்கள். ஆனால், இப்போது நுகர்வையே குறைத்துக் கொள்ளச் சொன்னால் ஜிஎஸ்டி வருவாயும் குறையத்தானே செய்யும்” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், NOAH SEELAM
‘நடுத்தர வர்க்கத்தையும் விவசாயத்தையும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்’
பிரதமரின் இந்த வேண்டுகோள் சாமானிய மக்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு பொருளாதார நிபுணர் தீபா சின்ஹா, பெரிய அளவில் எந்தத் தாக்கமும் இருக்காது என்றே கருதுகிறார்.
“பிரதமரின் வேண்டுகோளில் கூறப்பட்டுள்ள சில அம்சங்களுக்கும் சாமானிய மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உதாரணத்திற்கு, வெளிநாட்டுப் பயணம் செய்ய வேண்டாம் என்ற பரிந்துரையை எடுத்துக்கொள்ளலாம். சராசரி இந்தியக் குடிமகன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்குப் பொருளாதார வசதி கொண்டவராக இல்லை. ‘வீட்டிலிருந்தே வேலை செய்வது’ என்ற பரிந்துரையை எடுத்துக்கொள்வோம். நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்களால் எங்கிருந்து வேலை செய்ய வேண்டும், எந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களால் முடிவு செய்யமுடியாது”
“இது தவிர சாமானிய மக்கள் ஏற்கனவே பொதுப் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். தங்கம் வாங்குவதைப் பொறுத்தவரை, தங்களிடம் போதுமான பணம் இருக்கும்போது மட்டுமே அவர்கள் அதை வாங்குகின்றனர். சமீப காலமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலான சாமானிய மக்களால் தற்போது தங்கத்தை வாங்க இயலாத நிலையே உள்ளது.” என்கிறார் அவர்.
“உண்மையில் பிரதமரின் இந்த வேண்டுகோள் வசதி படைத்தவர்களை நோக்கியே வைக்கப்பட்டிருக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது, தனி விமானங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடாது, தங்கள் குழந்தைகளை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தியிருக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் நமது நாட்டின் மக்கள் தொகையில் மேல்மட்டத்தில் உள்ள 10–20 சதவிகித மக்களிடம் மட்டுமே காணப்படுகின்றன. சாமானிய மனிதன் ஏற்கனவே சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாவிட்டாலும், பிரதமர் விடுத்த கோரிக்கையைத்தான் செய்து கொண்டிருக்கிறான்.”
“பொதுமக்களால் எந்தளவுக்கு எரிபொருளைப் பயன்படுத்த முடிகிறது அல்லது தங்கம் வாங்க முடிகிறது? அவர்கள் இப்போதும் கூட சிறப்பான பொருளாதார சூழ்நிலையில் இல்லை. இருப்பினும், இறுதியில் எண்ணெய் விலைகள் உயரும்போது, அதன் சுமை சாமானிய மனிதன் மீதுதான் விழும்.”
நடுத்தர வர்க்கத்தினர் பிரதமரின் கோரிக்கைக் குறித்துக் கவலைப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் தீபா சின்ஹா, “தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, நடுத்தர வர்க்கத்தினர் கவலைப்பட காரணம் இருப்பதாகவே தோன்றுகிறது.” என்கிறார்
“கடந்த பத்தாண்டுகளின் தரவுகளை நாம் ஆய்வு செய்து பார்த்தால், மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரின் உண்மையான ஊதியம் கடந்த காலத்தில் கிட்டத்தட்ட உயரவே இல்லை. இத்தகைய சூழ்நிலையில், எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி நடுத்தர வர்க்கத்தினர் மீது பாதகமான தாக்கத்தையே ஏற்படுத்தும்.”
“நமது நாட்டில் தங்கத்திற்கென தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. பெண்கள் தங்கள் சேமிப்பை பெரும்பாலும் தங்கத்திலேயே முதலீடு செய்கிறார்கள். ஏனென்றால் ஒரு வகையில் அதன் மீதான கட்டுப்பாடு அவர்களிடமே நீடிக்கிறது. திருமணங்களின்போது தங்க நகை கொடுப்பதும் வாங்குவதும் என்பது பாரம்பரிய வழக்கமாகவே உள்ளது. ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் தங்கம் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, தங்கத்தின் விலை உயர்ந்தால் அவர்கள் மீதான பொருளாதார அழுத்தம் மேலும் அதிகரிக்கும்” என்றார் தீபா சின்ஹா.
பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நீண்ட கால அடிப்படையில் இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் தீபா சின்ஹா, “பரந்த நோக்கில் பார்க்கும்போது, இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவது, வேலைவாய்ப்பு. ஒருபுறம், நமது பொருளாதாரம் தேவைக்கேற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது. இரண்டாவது, இப்போது உருவாகும் வேலைகளிலும் சம்பளம் குறைவாக உள்ளது, சமூகப் பாதுகாப்பு இல்லை.” என்கிறார்.
“மக்களுக்கு நிரந்தரமான வேலை கிடைப்பதையும், பணவீக்கத்திற்கு ஏற்ப அவர்களின் சம்பளம் உயர்வதையும் நம்மால் உறுதிசெய்ய முடிந்தால், பொருளாதாரத்தில் ஏற்படும் இத்தகைய அதிர்ச்சிகளைப் பெருவாரியான மக்களால் தாங்களாகவே சமாளித்து மீண்டு வர முடியும்.”
“இரண்டாவதாக, விவசாயத் துறையில் கொண்டு வரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மீது நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால், தற்போது நமது விவசாயம் ரசாயன உரங்களைத்தான் பெருமளவு நம்பியிருக்கிறது.” என்கிறார் தீபா சின்ஹா.
“ஒரு விவசாயி இயற்கையான முறையில் விவசாயம் செய்ய விரும்பினால், தற்போதைய சூழலில் அதில் நஷ்டமே ஏற்படுகிறது. உற்பத்திச் செலவை விடக் குறைவான விற்பனை விலையே அவர்களுக்குக் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, விவசாயத் துறையில் பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.”
“இதேபோல், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லும் அறிவுரையை எடுத்துக் கொண்டால், 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை, நாமே அதை உற்பத்தி செய்தோம். வெவ்வேறு மாநிலங்களில் நாம் பயன்படுத்தி வந்த கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணெய்களின் இடத்தை, இப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய பாமாயில், சோயாபீன் எண்ணெய் போன்றவை ஆக்கிரமித்துள்ளன. கச்சா எண்ணெய் தொடர்பான உள்நாட்டு வளங்கள் நம்மிடம் குறைவாக இருக்கலாம். ஆனால், சமையல் எண்ணெய்களை உற்பத்தி செய்வதற்கான ஆற்றல் நம்மிடம் நிச்சயமாக உள்ளது. எனவே, இதனைச் சாத்தியமாக்கும் வகையில் பிரத்யேகக் கொள்கை வடிவமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்று தீபா சின்ஹா கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு