படக்குறிப்பு, இந்தியா முழுவதும் ஆண்டு முழுவதும் ஏராளமான சூரிய ஒளி கிடைப்பதால், சூரிய சக்தி மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.கட்டுரை தகவல்
இந்தியாவின் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு மிகவும் வெற்றிகரமானது என பரவலாக பாராட்டப்படுகிறது. ஆனால் அதனால் உருவாகும் கழிவுகளை நிர்வகிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லாமல் இந்த மாற்றம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்?
வெறும் பத்தாண்டுகளிலேயே உலகிலேயே சூரிய ஆற்றலை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதன் காலநிலை கொள்கையின் மையமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளது. சூரிய மின்சக்தி பூங்காக்கள் முதல் வீட்டு மாடியில் அமைக்கும் நீல நிறத்திலான சோலார் பேனல்கள் வரை நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்கள் என எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன.
பெரிய சூரிய மின்சக்தி பூங்காக்களுடன் தற்போது பல லட்சக்கணக்கான வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்படும் சோலார் பேனல்களும் மின்கட்டமைப்புகளுக்கு மின்சாரத்தை வழங்குகின்றன.
சூரிய மின்சக்தி துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி இந்தியா நிலக்கரியை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது. இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல் மற்றும் பிற புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலங்கள் இன்னும் பாதிக்கும் மேல் பங்களிக்கின்றன. சூரிய மின்சக்தி 20 சதவிகிதத்திற்கும் மேல் பங்களிக்கிறது. எனினும், இந்த சாதனையில் சவாலும் சேர்ந்தே இருக்கிறது: சூரிய மின்சக்தி பயன்பாடு தூய்மையானதாக இருந்தாலும், சோலார் பேனல்களை சரிவர கையாளாவிட்டால் சூழலியல் ஆபத்துகள் வரக்கூடும்.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
படக்குறிப்பு, இந்தியாவின் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களே தொடர்ந்து அதிக பங்களிப்பை அளிக்கின்றன.
சோலார் பேனல்கள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படக் கூடியவையாகவே உள்ளன. கண்ணாடி, அலுமினியம், சில்வர் மற்றும் பாலிமர் ஆகியவற்றாலேயே இவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ஈயம் மற்றும் காட்மியம் போன்ற மிகச்சிறிய அளவிலான நச்சு உலோகங்கள் தவறாக கையாளப்பட்டால் நிலம் மற்றும் நீரை மாசுபடுத்தலாம்.
சோலார் பேனல்கள் பொதுவாக சுமார் 25 ஆண்டுகள் வரை இயங்கும். அதன்பின் அவை பிரித்தெடுக்கப்பட்டு அழிக்கப்படும். இந்தியாவில் சோலார் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கென தனியே பட்ஜெட் ஏதும் தற்போது இல்லை. பழைய பேனல்களை கையாள்வதற்காக ஒருசில சிறு கட்டமைப்புகளே உள்ளன.
சோலார் பேனல் கழிவுகள் அதிகரிப்பு
இந்தியாவில் சோலார் கழிவுகள் குறித்த அதிகாரபூர்வ தரவுகள் ஏதும் இல்லை, ஆனால் 2023-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் டன் கழிவுகள் இருந்ததாகவும் அது 2030-ஆம் ஆண்டுக்குள் 6 லட்சம் டன்னாக உயரக்கூடும் என்றும் ஒரு ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த அளவு சிறிதாக இருந்தாலும் மிக அதிகளவிலான கழிவுகள் இனிதான் வரவுள்ளன என எச்சரிக்கும் நிபுணர்கள், மறுசுழற்சியில் விரைவான முதலீடு இல்லாவிட்டால், இந்தியா மிகப்பெரும் சோலார் கழிவு நெருக்கடியை சந்திக்கலாம் என்று கூறுகின்றனர்.
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கழகம் (CEEW) மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 11 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சோலார் கழிவுகள் உருவாகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை நிர்வகிக்க அடுத்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 300 பிரத்யேக மறுசுழற்சி வசதிகள் மற்றும் 478 மில்லியன் டாலர்கள் தேவை என அதில் கூறப்பட்டிருந்தது.
“இந்தியாவின் பெரிய சோலார் பூங்காக்கள் பலவும் 2010-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டவை. பெருமளவிலான சோலார் கழிவுகள் இன்னும் 10 – 15 ஆண்டுகளில் தான் வரவுள்ளன,” என தார்க்ரே (Targray) எனும் எரிசக்தி நிறுவனத்தை சேர்ந்த ரோஹித் பஹ்வா கூறுகிறார்.
இந்தியாவின் சோலார் கழிவுகள் குறித்த மதிப்பீடுகள் உலகளாவிய போக்கை பிரதிபலிப்பதாக உள்ளன. 2010-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வேகமான சூரிய மின்சக்தி விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா 2030-ஆம் ஆண்டுக்குள் 1,70,000 முதல் ஒரு மில்லியன் டன் வரையும் சீனா கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டன் சோலார் கழிவுகளையும் உருவாக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் உள்ளன.
அமெரிக்காவில் இது பெரும்பாலும் சந்தை சார்ந்ததாக உள்ளது. மாகாண விதிகளின் அடிப்படையிலானதாக இருக்கிறது. சீனா இந்த விஷயத்தில் இந்தியாவை போன்று இன்னும் வளர்ந்துவரும் ஒன்றாகவே உள்ளது. பிரத்யேக ஒழுங்குமுறை கட்டமைப்புக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
செயல்படுத்தப்பட முடியாத விதிமுறைகள்
2022-ஆம் ஆண்டில் இந்தியா சோலார் பேனல்களை மின் கழிவுகள் விதிமுறைகளின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் சோலார் பேனல்கள் காலாவதியான பிறகு அதன் கழிவுகளை சேகரித்தல், தேக்கி வைத்தல், பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றுக்கு உற்பத்தியாளர்களே பொறுப்பாவார்கள்.
வீடுகள் மற்றும் சிறியளவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களில் இந்த விதிமுறை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அளவில் சிறிதாக இருந்த போதிலும் இதனால் உருவாகும் கழிவுகளை கண்காணித்தல், சேகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வது கடினம் என்பதால் அவை குறிப்பிடத்தக்க அளவிலான கழிவுகளை உருவாக்கும்.
சேதமான அல்லது நிராகரிக்கப்பட்ட பேனல்கள் அடிக்கடி குப்பைக் கிடங்குகள் அல்லது அங்கீகாரமற்ற மறுசுழற்சி அமைப்புகளிடம் சென்று சேர்கின்றன. இங்கு கையாளப்படும் பாதுகாப்பற்ற முறைகளால் அவற்றிலிருந்து நச்சுப்பொருட்கள் வெளியாகக்கூடும். இதுதொடர்பான கருத்தை அறிய மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தை பிபிசி தொடர்புகொண்டது.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, சேதமடைந்த மற்றும் பழைய மேற்கூரை பேனல்கள் அரிதாகவே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
“சோலார் எரிசக்தி கடந்த 20 ஆண்டுகளாக தூய்மையான ஆற்றல் எனும் மாயையை உருவாக்கியுள்ளது, ஆனால், சோலார் பேனல்களை மறுசுழற்சி செய்வதற்கான தீவிரமான திட்டம் இல்லையெனில், அவை பேனல்கள் நிறைந்த மயானங்களை மட்டுமே விட்டுசெல்லுமே தவிர, ஒரு பெரும் பாரம்பரியத்தை அல்ல,” சுற்றுச்சூழல் நிபுணர் சாய் பாஸ்கர் ரெட்டி நக்கா.
என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
சவால்கள் உள்ள போதிலும் புதிய வாய்ப்புகள் இல்லாமல் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“கழிவுகள் அதிகரிக்கும் போது அதை எப்படி மறுசுழற்சி செய்வது என அறிந்த நிறுவனங்களுக்கான தேவை அதிகமாகும்,” என பஹ்வா கூறுகிறார்.
திறம்பட மறுசுழற்சி செய்யும்போது 2047-ஆம் ஆண்டுக்குள் பழைய பேனல்களில் இருந்து 38% மூலப்பொருட்களை மீட்டு புதிய பேனல்களுக்கு பயன்படுத்த முடியும் என்றும், சுரங்கங்களிலிருந்து வெளியாகும் 37 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை தடுக்க முடியும் என்றும் CEEW கூறுகிறது.
இந்தியாவில் ஏற்கெனவே கண்ணாடி மற்றும் அலுமினியத்திற்கும் சோலார் மின்கலங்களில் காணப்படும் சிலிகான், சில்வர் மற்றும் காப்பருக்கான சந்தைகள் உள்ளன. எனவே அவற்றை பிரித்தெடுத்து புதிய பேனல்கள் அல்லது மற்ற தொழில்களில் பயன்படுத்த முடியும் என, ஆய்வின் இணையாசிரியர் அகன்ஷா தியாகி கூறுகிறார்.
தற்போது, பெரும்பாலான சோலார் கழிவுகள் அடிப்படையான முறைகளில் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன, இதனால் குறைவான மதிப்புடைய கண்ணாடி மற்றும் அலுமினியம் மட்டுமே பிரித்தெடுக்கப்படுகின்றன. மதிப்புமிக்க பொருட்கள் இழக்கப்படுகின்றன, சேதமடைகின்றன அல்லது குறைவான அளவிலேயே பிரித்தெடுக்கப்படுகின்றன.
அடுத்த தசாப்தம் இந்தியாவின் சூரிய எரிசக்தி இலக்குகளுக்கு முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட தன்னிறைவு பெற்ற மறுசுழற்சி கட்டமைப்பு, வீடுகள் அளவிலான விழிப்புணர்வு மற்றும் கழிவுகள் சேகரிப்பு – சோலார் தொழில் மாதிரிகளை ஒருங்கிணைத்தல் என இந்தியா வேகமாக செயல்பட வேண்டியுள்ளது.
“சோலார் மின்சக்தி மூலம் லாபமடையும் நிறுவனங்கள், சோலார் பேனல்கள் காலாவதியானவுடன் என்னவாகின்றன என்பதற்கும் பொறுப்பாக வேண்டும்,” என சுற்றுச்சூழல் நிபுணர் சாய் பாஸ்கர் ரெட்டி நக்கா கூறுகிறார்.
“முறையான மறுசுழற்சி திட்டம் இல்லாவிட்டால், தூய்மையான எரிசக்தி என்பது அதிகளவிலான கழிவுகளாகவே இருக்கும்,” என அவர் எச்சரிக்கிறார்.