பட மூலாதாரம், Sakhi Trust
“பாலியல் தொழில் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது. மனதளவிலும் நான் முற்றிலும் உடைந்துவிட்டேன்,” என்கிறார் சந்திரிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பாலியல் தொழிலாளியாக சந்திரிகாவின் வாழ்க்கை ஒரு மதச் சடங்குடன் தொடங்கியது. 15 வயதில், ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, ஒரு தெய்வத்துடன் சடங்கு முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
“அப்போது அந்தச் சடங்குக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
இப்போது சந்திரிகாவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, அவர் பொருள் ஈட்டுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அன்று தெய்வத்தின் மணமகள், இன்று பாலியல் தொழிலாளி

தென்னிந்திய மாநிலமான கர்நாடகா, சடங்குகளின் படி தேவதாசி ஆன பிறகு பாலியல் தொழிலாளியாக மாறிய பெண்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
தேவதாசி மரபு, அதாவது “கடவுளின் அடிமைகள்” என்ற பாரம்பரியம் தென்னிந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அப்போது, தேவதாசிகள் கோவில்களில் கலைஞர்களாக இருந்தனர். அவர்கள் பாடல், நடனம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினர். ஆனால் காலப்போக்கில், இந்த முறை அனுமதிக்கப்பட்ட பாலியல் தொழிலாக மாறியது.
இந்தியாவின் பல பகுதிகளில், காலனித்துவ காலத்தில் தேவதாசி மரபுக்கு தடை விதிக்கப்பட்டன. ஆனால் கர்நாடகா, 1982-இல் தான் இந்த நடைமுறையை சட்டவிரோதமானதாக அறிவித்தது. ஆனால், இன்றும் சில இடங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது.
கிராமங்களில் வாழும் தேவதாசிகள், ஒருவருடன் நெருக்கமாக வாழலாம். அதே நேரத்தில், மற்ற வாடிக்கையாளர்களையும் சந்திக்கலாம். பலர், மும்பை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்து, பாலியல் விடுதிகளில் வேலை செய்கிறார்கள்.
பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண்
பெல்காம் நகரில் கோவிலுக்கு அர்ப்பணிக்கும் சடங்கு நடந்த பிறகு வீட்டுக்குத் திரும்பிய சந்திரிகா, அடுத்த நான்கு ஆண்டுகள் சாதாரணமாகத் தான் வாழ்ந்து வந்தார்.
பின்னர், அவரது உறவினரான ஒரு பெண், வீட்டு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி, தொழில்துறை நகரமான சாங்லிக்கு அவரை அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சென்ற பின் சந்திரிகாவை ஒரு பாலியல் விடுதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
“முதல் சில மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தது. உடல்நிலை சரியில்லை. சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. ஓடிப்போக நினைத்தேன். ஆனால் படிப்படியாக அந்த நிலையை ஏற்றுக்கொண்டேன்” என்று சந்திரிகா நினைவுகூறுகிறார்.
அப்போது சந்திரிகாவுக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. அவர் பெரிதாக படிக்கவில்லை. சாங்லியில் பேசப்படும் இந்தி, மராத்தி மொழிகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“சில வாடிக்கையாளர்கள் என்னை தாக்கினார்கள். சிலர் மோசமாகப் பேசினார்கள். அதைச் சமாளிக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்” என்று அவர் கூறுகிறார்.
அந்த பாலியல் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களில் கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர்கள், வழக்கறிஞர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பலரும் இருந்தனர்.
சந்திரிகா தனது துணைவரான லாரி ஓட்டுநரை சாங்லியில் பாலியல் தொழிலின்போது சந்தித்தார்.
அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்தனர். சந்திரிகா தொடர்ந்து பாலியல் விடுதியில் வேலை செய்து வந்தார். அவரது துணைவர் குழந்தைகளை கவனித்துக் கொண்டார்.
அங்கு, ஒரு நாளைக்கு 10 முதல் 15 வாடிக்கையாளர்களை சந்திரிகா சந்திக்க வேண்டியிருந்தது.
இரண்டாவது குழந்தை பிறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது துணைவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதற்குப் பிறகு சந்திரிகா மீண்டும் பெல்காமுக்கு திரும்பி விட்டார்.
அங்கிருந்து, ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பிபிசியிடம் பேசினார்.
‘ஆண்கள் எங்களை திருமணம் செய்ய முன் வருவதில்லை’
பட மூலாதாரம், Sakhi Trust
எல்லா தேவதாசிகளும் பாலியல் விடுதிகளில் வேலை செய்வதில்லை, சிலர் பாலியல் தொழிலாளர்களே அல்ல.
23 வயதுடைய அங்கிதாவும் ஷில்பாவும் உறவினர்கள். அவர்கள் இருவரும் வடக்கு கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். சந்திரிகாவைப் போலவே, அவர்களும் இந்தியாவில் பெரும் பாகுபாட்டை அனுபவிக்கும் பட்டியல் பிரிவு சாதியைச் சேர்ந்தவர்கள்.
ஷில்பா, ஒரு வருடம் பள்ளியில் படித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டார். அவர் 2022-இல் அவர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்.
அங்கிதா 15 வயது வரை படித்தார். 2023-இல், அவரது பெற்றோர் அவரை கோவிலுக்கு அர்ப்பணிக்க ஏற்பாடு செய்தனர். அவரது சகோதரர் இறந்த பிறகு, தேவதாசியாக மாற அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
“என்னை தெய்வங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பெற்றோர் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். ஒரு வாரத்துக்குப் பிறகு, அவர்கள் எனக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள்,” என்கிறார் அங்கிதா.
“நான் மனதளவில் மிகவும் மோசமாக உணர்ந்தேன். ஆனால் என் குடும்பத்திற்காக அதை ஏற்றுக்கொண்டேன். ஒரு மணப்பெண் போல உடையணிந்து, தெய்வத்தை மணந்தேன்”
அந்த திருமண பந்தத்தை குறிக்கும் வெள்ளை முத்து மற்றும் சிவப்பு மணிகளால் ஆன நெக்லஸை அங்கிதா வைத்திருக்கிறார்.
அவருடைய அம்மாவோ பாட்டியோ தேவதாசிகள் அல்ல. அவர்களது குடும்பத்திற்கு சொந்தமாக சிறிய விவசாய நிலம் உள்ளது. ஆனால் அதில் இருந்து போதுமான வருமானம் வரவில்லை.
“யாரும் அர்ப்பணிக்கப்படவில்லை என்றால், தெய்வம் நம்மை சபித்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது,”
தேவதாசிகள் திருமணம் செய்ய முடியாது. ஆனால், வேறொரு பெண்ணை திருமணம் செய்திருக்கும் ஆண்களுடன் வாழலாம்.
தன்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் ஆண்களுக்கு இடங்கொடுக்காத அங்கிதா, இன்றும் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் ஒரு நாளைக்கு சுமார் 350 ரூபாய் (4 டாலர்) சம்பாதிக்கிறார்.
பட மூலாதாரம், Sakhi Trust
ஷில்பாவின் வாழ்க்கை வேறு ஒரு பாதையில் சென்றது.
அவர் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியுடன் அவருக்கு உறவு மலர்ந்தது.
“நான் தேவதாசி என்பதை அறிந்ததால் அவர் என்னிடம் வந்தார்,” என்று ஷில்பா கூறுகிறார்.
பல தேவதாசி பெண்களைப் போலவே, ஷில்பாவும் தனது துணையுடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.
“என்னுடன் சில மாதங்கள் மட்டுமே இருந்த அவர், என்னை கர்ப்பமாக்கிவிட்டார். அப்போது 3,000 ரூபாய் (35 டாலர்) கொடுத்தார். என் கர்ப்பம் குறித்து எந்த உணர்ச்சியையும் அவர் வெளிக்காட்டவில்லை. ஒரு நாள், எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்”என்கிறார் ஷில்பா.
அப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த ஷில்பா மிகவும் குழப்பமடைந்திருந்தார்.
“நான் அவரை அழைக்க முயற்சித்தேன். ஆனால் அவரது தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கிருந்து வந்தவர் என்பது கூட எனக்குத் தெரியாது”என்றும் அவர் கூறுகிறார்.
ஷில்பா, அவரைத் தேடுவதற்காக புகார் கொடுக்க காவல் நிலையத்துக்கும் செல்லவில்லை.
“எங்களுடைய அமைப்பில், ஆண்கள் எங்களை திருமணம் செய்ய முன்வருவதில்லை,” என்கிறார் ஷில்பா.
வறுமை மற்றும் சுரண்டல்
பட மூலாதாரம், Sakhi Trust
முனைவர் எம். பாக்யலக்ஷ்மி என்பவர் உள்ளூர் அரசு சாரா நிறுவனமான சகி டிரஸ்டின் இயக்குநராக உள்ளார், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தேவதாசி பெண்களுடன் பணியாற்றி வருகிறார். தடை இருந்தாலும் தற்போதும் பெண்கள் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படும் நடைமுறை உள்ளது என்கிறார் பாக்யலக்ஷ்மி.
“ஒவ்வொரு வருடமும், மூன்று அல்லது நான்கு பெண்கள் தேவதாசிகளாக அர்ப்பணிக்கப்படும் சடங்கை நாங்கள் நிறுத்துகிறோம். ஆனால் பெரும்பாலான சடங்குகள் ரகசியமாக நடைபெறுகின்றன. ஒரு இளம் பெண் கர்ப்பமாகும் போது அல்லது குழந்தை பிறக்கும்போது தான் அதைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்கிறோம்”என்கிறார் பாக்யலக்ஷ்மி.
பல தேவதாசி பெண்களுக்கு, அடிப்படை வசதிகள் இல்லை, சரியான உணவோ கல்வியோ கிடைப்பதில்லை. அவர்கள் உதவி கேட்க பயப்படுகிறார்கள் என்றும் பாக்யலக்ஷ்மி விளக்குகிறார்.
“விஜயநகர மாவட்டத்தில், 10,000 தேவதாசிகளை நாங்கள் கணக்கெடுத்துள்ளோம். பல மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள் அல்லது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் இந்த அமைப்பிற்குள் தள்ளப்படுவதை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட 70% பேருக்கு வீடு கூட இல்லை,” என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆண்கள், ஆணுறைகளைப் பயன்படுத்த மறுப்பதால் தேவையற்ற கர்ப்பம் அல்லது எச்.ஐ.வி போன்ற நோய்ப் பரவல் ஏற்படுகிறது.
தேவதாசிகளில் சுமார் 95% பேர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பாக்யலக்ஷ்மி கூறுகிறார்.
கடந்த காலத்தில் கோவில்கள் தேவதாசிகளுக்கு ஆதரவும் வருமானமும் வழங்கின. ஆனால் இப்போது, நவீன தேவதாசிகள் அந்த ஆதரவை பெறுவதில்லை.
“தேவதாசி முறை என்பது வெறும் சுரண்டல்தான்,” என்று பாக்யலக்ஷ்மி அழுத்தமாகக் கூறுகிறார்.
“சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்”

தற்போதைய மற்றும் முன்னாள் தேவதாசிகள்,பெல்காமில் உள்ள சவுந்தட்டி யெல்லம்மா கோவிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்காக ஒன்றுகூடுகிறார்கள்.
ஆனால், அங்கு பெண்களை கோவிலுக்கு அர்ப்பணிக்கும் சடங்கு நடைபெறுவதில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
“இது இப்போது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். திருவிழா காலங்களில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களை எச்சரிப்பதற்காக நாங்கள் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வைத்திருக்கிறோம்” என்று விஸ்வாஸ் வசந்த் வைத்யா கூறுகிறார்.
வைத்யா, கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும், யெல்லம்மா கோயில் வாரிய உறுப்பினராகவும் உள்ளார். தேவதாசிகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இப்போது என் தொகுதியில் 50 முதல் 60 தேவதாசிகள் இருக்கலாம். பெண்களை கோவிலில் தேவதாசியாக்கும் சடங்குகளை யாரும் ஊக்குவிப்பதில்லை” என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் எடுத்த வலுவான நடவடிக்கைகளால், தேவதாசி முறையை நிறுத்திவிட்டோம்,” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
2008-இல், கர்நாடக அரசு நடத்திய கணக்கெடுப்பில், மாநிலத்தில் 46,000-க்கும் மேற்பட்ட தேவதாசிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அடுத்த தலைமுறை
பட மூலாதாரம், Sakhi Trust
பாலியல் தொழிலில் இருந்து வந்த பணம், சந்திரிகாவுக்கு வறுமையிலிருந்து தப்பிக்க உதவியது. தனது குழந்தைகளின் நலனுக்காக, அவர் அவர்களை உறைவிடப் பள்ளிகளில் சேர்த்தார்.
“என் மகளைப் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டுள்ளேன்”,
“என் மகளுக்கு 16 வயதான போது, என்னைப் போல தேவதாசியாக மாற வேண்டாம் என்பதற்காக, நான் எனது மகளை ஒரு உறவினருக்கு திருமணம் செய்து வைத்தேன். இப்போது அவர் தன் கணவருடன் வாழ்கிறார்”என்கிறார் சந்திரிகா.
சந்திரிகா தற்போது ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தொடர்ந்து எச்.ஐ.வி பரிசோதனைகளுக்குச் செல்கிறார்.
“எனக்கு வயதாகி வருகிறது. இன்னும் சில வருடங்களில் பாலியல் தொழில் செய்ய முடியாது,” என்று அவர் கூறுகிறார். அதனால், பழங்கள் மற்றும் காய்கறி விற்க ஒரு கடையைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
ஷில்பா, தனது மகளை நன்றாகப் படிக்க வைக்க விரும்புகிறார். தேவதாசி முறை குறித்து, அவருக்கு மிகுந்த மனக்கசப்பு உள்ளது.
“இந்த முறை நிறுத்தப்பட வேண்டும். என் மகளை தேவதாசியாக மாற்ற மாட்டேன். இந்த முறையைத் தொடர நான் விரும்பவில்லை,” என்று ஷில்பா கூறுகிறார்.
அங்கிதா திருமணம் செய்து கொண்டு, அந்த முத்து நெக்லஸை கழற்ற விரும்புவதாகக் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு