காணொளி: இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் இத்தகைய தாக்குதல் நடந்ததாக செய்திகள் வந்தன. இந்த சம்பவங்கள் இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் கவனம் பெற்றுள்ளன.
இந்த விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
அரப் டைம்ஸ் குவைத் ஊடகம், டெல்லியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளது. அதில் சில ஆண்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடிய பெண்களை தொப்பிகளைக் கழற்றிவிட்டு வீட்டிற்குச் செல்லுமாறு கூறுவது தெரிகிறது. எனினும், இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அந்த செய்தியில் நாட்டின் பல பகுதிகளில் மத அனுசரிப்புகளை குறிவைத்து தொடர்ச்சியான தொந்தரவு சம்பவங்கள் நடந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்களுக்கு ‘வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சி’யே காரணம் என வல்லுநர்கள் குற்றம் சாட்டுவதாக அந்த செய்தி கூறுகிறது.
அந்த செய்தியில் ஒடிசாவில் சாலையோரத்தில் சாண்டா கிளாஸ் தொப்பிகளை விற்றவர்களை சிலர் மிரட்டியதாக வெளியான வீடியோ குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பங்கள் குறித்து ‘The Independent என்ற பிரிட்டிஷ் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் குறித்து கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த செய்தியில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையை மேற்கோள் காட்டி இத்தகைய தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன என்றும், கிறிஸ்தவ சமூகத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு