• Thu. Jan 29th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் நிப்பா கிருமித்தொற்று கட்டுப்பாட்டில்: இரண்டு பேருக்கு மாத்திரமே உறுதி

Byadmin

Jan 29, 2026


இந்தியாவில் நிப்பா கிருமித்தொற்று தொடர்பாக இருவருக்கு மட்டும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பு ஐந்து பேர் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பின்னர் திருத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் யாருக்கும் நிப்பா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கிருமித்தொற்றை உரிய நேரத்தில் கண்டறிந்து, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் நிப்பா பதிவானதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எல்லைப் பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிப்பா கிருமி முதன்முறையாக 1998ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள பன்றிப் பண்ணைகளில் கண்டறியப்பட்டது. நோய் கண்டறியப்பட்ட இடத்தின் பெயரிலிருந்தே இதற்கு ‘நிப்பா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்த கிருமி பொதுவாக வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். தீவிரமான நிலையில் இருப்பவர்கள் நினைவிழந்த நிலைக்குச் செல்லும் அபாயமும் உள்ளது. நிப்பா கிருமித்தொற்றைத் தடுக்கும் வகையில் இதுவரை தடுப்பூசி எதுவும் இல்லை.

By admin