பட மூலாதாரம், UAC – Yakovlev
இந்தியா அக்டோபர் 28ம் தேதி ரஷ்யாவுடன் விமான போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 103 பேர் பயணிக்கும் வகையிலான ரஷ்யாவின் SJ-100 பயணிகள் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது.
விமான போக்குவரத்து சந்தையில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியமானது, கடந்தாண்டு 35 கோடி மக்கள் விமானத்தில் பயணித்துள்ளனர்.
SJ-100 ஓர் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம், முன்பு இது சுகோய் சூப்பர்ஜெட் (SSJ) -100 என அறியப்பட்டது, மாஸ்கோவை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனம் இதை தயாரிக்கிறது.
இந்த விமானத்தில் அதிகபட்சமாக 103 இருக்கைகள் உள்ளன. அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வகை விமானம் ரஷ்யாவின் 9 விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
பெங்களூருவை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் அரசு பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கவனித்துக்கொள்ள உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அளவு மற்றும் செலவு ஆகியவை வரும் நாட்களில் தெளிவுபடுத்தப்படும் என, ஹெச்ஏஎல் அதிகாரி ஒருவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 163 விமான நிலையங்கள் உள்ளன. மேலும் சுமார் 50 விமான நிலையங்கள் வரவுள்ளன. SJ-100 போன்ற சிறிய விமானங்களை பயன்படுத்துவது நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கு பல பயன்களை அளிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆனால், இந்தியா தேடும் விமானமாக SJ-100 இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு, யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அந்நாடு மேற்கத்திய தொழில்நுட்பத்தை அணுகுவது துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த கேள்வி முக்கியமானதாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான பதிவுகள் குறித்தும் கவலை எழுந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா சொந்தமாக பயணிகள் விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கு என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த சில தசாப்தங்களாக ஹெச்ஏஎல் நிறுவனம் பல வெளிநாட்டு பயணிகள் விமானங்களை இந்தியாவில் உரிமம் பெற்று தயாரித்து வருகிறது அல்லது பாகங்களை பொருத்தி அசம்பிள் செய்துள்ளது.
இதில் அவ்ரோ (Avro) மற்றும் டோர்னியர் (Dornier) விமானங்களும் அடங்கும். உள்நாட்டிலேயே பயணிகள் விமானத்தை தயாரிப்பதற்கான முன்மாதிரி மற்றும் பிரத்யேக தொழில்நுட்பங்களை வடிவமைக்க பல ஆண்டுகளை இந்திய விஞ்ஞானிகள் செலவிட்டுள்ளனர்.
இத்தனை ஆண்டு கடின உழைப்புக்குப் பின்னும் இந்தியாவால் அதன் சொந்த விமானத்தை தயாரிக்க முடியாதது ஏன்? இந்தியா ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்திருக்கும் நிலையில், இத்தகைய முயற்சிகளின் எதிர்காலம் என்னவாகும்?
SJ-100 – பின்னணி
பட மூலாதாரம், BAE Systems
சோவியத் காலம் மற்றும் நவீன ரஷ்யாவில் UAC நிறுவனம் போர் விமானங்கள், நீண்ட தூரம் குண்டுகளை எடுத்துச் சென்று வீசுவதற்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பயணிகள் விமானம் உட்பட பலவித விமானங்களை தயாரித்துள்ளது.
SJ-100 மற்றும் SSJ-100 ஆகிய விமானங்கள் 2008ம் ஆண்டு முதன்முறையாக பறந்தன. அந்நிறுவனத்தின் கூற்றுப்படி 2020ம் ஆண்டு 200வது விமானம் தயாரிக்கப்பட்டது.
யுக்ரேன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் மேற்கத்திய நாடுகளிலிருந்து சில விமான உதிரிபாகங்களை பெறுவது தடுக்கப்பட்டது. மேலும் ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற நிறுவனங்களிடமிருந்து விமானங்களை வாங்குவதற்கும் ரஷ்யா அனுமதிக்கப்படவில்லை.
இது, UAC நிறுவனம் SJ-100 விமானத்திற்கு “40 சிஸ்டம்” (40 System) என்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது, இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. உள்நாட்டில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 2023ம் ஆண்டு வானில் பறந்தது.
இந்த சூழ்நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க முடியுமா?
பட மூலாதாரம், UAC – Yakovlev
UAC மற்றும் ஹெச்ஏஎல் நிறுவனங்களுக்கு இதுதொடர்பான கேள்விகளை அனுப்பினோம், ஆனால் இதுவரை அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை.
ஹெச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கோபால் சுதார் பிபிசி இந்தியிடம் பேசுகையில், இந்தியாவின் ‘வலுவான ஆதரவாளராக’ ரஷ்யா இருப்பதாக தெரிவித்தார்.
“ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் சில பிரச்னைகள் எழலாம், ஆனால் ஒப்பந்தத்துக்கு முன்பே இதுகுறித்து கருத்தில் கொள்ளப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.
கடந்த 2012ம் ஆண்டு ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமையால் (EASA) SJ-100 விமானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும், யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அந்த ஒப்புதல் இன்னும் செல்லுபடியாகுமா என்பது குறித்து தெளிவின்மை நிலவுகிறது.
EASA-வின் ஒப்புதல் இன்னும் நீடிக்கிறதா என UAC-யிடம் கேள்வியெழுப்பப்பட்டது, அதற்கு அந்நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2012, 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகள் உட்பட SJ-100 விமானம் பல விபத்துகளுடன் தொடர்புடையது என ரஷ்ய மற்றும் சர்வதேச அறிக்கைகள் கூறுகின்றன. இந்த விமான விபத்துகளில் பல பயணிகள் மற்றும் விமான குழுவினர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினராக கேப்டன் மோகன் ரங்கநாதன் உள்ளார்.
ரஷ்யாவின் விமான பாதுகாப்பு தொடர்பான பதிவுகள் குறிப்பாக, SJ-100 விமானத்தின் பதிவுகள் ‘மிக மோசமாக’ உள்ளது என பிபிசி இந்தியிடம் அவர் தெரிவித்தார்.
“இதுகுறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை. சமீபத்தில் போயிங் விமானமும் விபத்துகளை சந்திப்பதாக சிலர் கூறலாம், ஆனால் இரு விமானங்களையும் ஒப்பிட முடியாது,” என்றார் அவர்.
இந்தியாவின் நிலை
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானத்தின் விநியோகம் 1967ம் ஆண்டு தொடங்கியது.
இந்த அவ்ரோ விமானம், அப்போது அரசின் சொந்த விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. BAE சிஸ்டம்ஸ் அளிக்கும் தகவலின்படி, ஹெச்ஏஎல் இத்தகைய 89 விமானங்களை தயாரித்தது.
இதைத்தொடர்ந்து, 1980களில் 19 இருக்கைகளை கொண்ட, மேற்கத்திய வடிவமைப்புகளுடன் கூடிய டோர்னியர் விமானம், ஹெச்ஏஎல் நிறூவனத்தின் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது.

இந்த விமானங்கள் ராணுவ பயன்பாடு மற்றும் பயணிகள் சேவைக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இன்றும் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர, இந்தியாவில் நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரீஸ் (NAL) போன்று பொது நிறுவனங்களும் உள்ளன.
இந்நிறுவனம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயணிகள் விமானத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்நிறுவனம் 1959ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
NAL நிறுவனத்தின் இயக்குநராக அபய் பஷில்கர் உள்ளார். இந்தியாவால் அதன் சொந்த பயணிகள் விமானத்தை வடிவமைக்கவோ அல்லது தயாரிக்கவோ ஏன் முடியவில்லை என கேள்வியெழுப்பினோம்.
“பயணிகள் விமான வடிவமைப்பு மற்றும் அதை மேம்படுத்தும் பணிகளை NAL நிறுவனத்தின் கீழ் இந்தியா முதன்மையாக மேற்கொண்டு வருகிறது. இரு இருக்கைகள் கொண்ட விமானி பயிற்சி விமானமான ஹன்சா-3, மேம்படுத்தப்பட்ட எஞ்சின்கள் மற்றும் கண்ணாடியாலான விமானி அறையுடன் கூடிய ஐந்து இருக்கைகள் கொண்ட CNM-5 மற்றும் இரு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானமான ஹன்சா NG ஆகியவையும் இதில் அடங்கும்.” என்று அவர் கூறினார்.
ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் பெரிய விமானங்களை கோருகின்றன.
பட மூலாதாரம், Getty Images
அரசாங்க மதிப்பீடுகளின்படி, இந்திய விமான நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் 1,500 புதிய விமானங்களை சேர்க்கலாம். எனினும், இந்த தேவையை உள்நாட்டு தயாரிப்பு பூர்த்தி செய்ய முடியுமா என்பதில் தெளிவின்மை நிலவுகிறது.
இந்தியா முன்னதாக SJ-100 விமானத்தை ஒத்த 90 இருக்கைகள் கொண்ட பிராந்திய போக்குவரத்து விமானத்தை தயாரிப்பதற்கான திட்டங்களை அறிவித்தது.
இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை 2011ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதுதொடர்பாக எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“RTA திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தாலும் அதை தயாரிக்க ஏழு ஆண்டுகளாகும்.” என்கிறார் பஷில்கர்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் 19 இருக்கை கொண்ட இலகுரக விமான திட்டத்திற்கு ‘சரஸ்’ என பெயரிடப்பட்டது.
‘மக்கள் பயணிப்பதற்கு ஏற்ற விமானமாக’ இருக்கும் என இது விவரிக்கப்பட்டாலும், அதற்கு எப்போது சான்றளிக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த விமானத்தை வடிவமைப்பதில் வெவ்வேறு கட்டங்களில் ரஷ்ய நிபுணர்களின் உதவி நாடப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு சரஸ் மாதிரி விமானம் வெடித்ததில் விமானக் குழுவினர் இறந்தனர்.
இந்தியாவில் விமான தயாரிப்பு மெதுவாக நகர்வதற்கு மூன்று காரணங்களை கூறுகிறார் பஷில்கர்: அவை, உள்நாட்டில் தேவை பற்றாக்குறை, நவீன, பயிற்சியளிக்கப்பட்ட மனித வளங்கள் மற்றும் உள்நாட்டு தயாரிப்புக்கு மிகவும் குறைவான வாய்ப்பு ஆகியன.
முன்னோக்கி செல்வதற்கான பாதை
பட மூலாதாரம், Getty Images
SJ-100 விமானம் இந்தியா முன்னோக்கி செல்வதற்கான பாதையை காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம் “யதார்த்தமான நடவடிக்கை” என கூறும் பஷில்கர், “இந்தியாவின் விமான போக்குவரத்து திறனை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும். சரஸ் Mk-2 விமானம் இன்னும் பறக்காததால், இந்தியாவின் 70 இருக்கைகளுடன் கூடிய சொந்த நவீன பயணிகள் விமானம் உடனடியாக தயாராகாது.” என்றார்.
எனினும், NAL விஞ்ஞானிகள் உள்நாட்டு விமான தொழில்நுட்பத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொள்ளும் பஷில்கர், “உலகளாவிய விமான போக்குவரத்து மையமாக மாறுவதற்கான கனவை பூர்த்தி செய்ய இந்தியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு