பட மூலாதாரம், Zoya Mateen/BBC
டெல்லிக்கு அருகிலுள்ள உயர்தர புறநகர்ப் பகுதியான குருகிராமில், பளபளக்கும் எஸ்.யு.விகளும், நவீன வடிவமைப்பு கொண்ட வானளாவிய கட்டிடங்களும்,நேர்த்தியான குடியிருப்புகளும், அருகிலுள்ள குப்பைக் குவியல்கள் மற்றும் தார்பாய் குடிசைகளுக்கு முற்றிலும் மாறாக நிற்கின்றன.
சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட வளாகங்களில் இந்தியாவின் பணக்காரர்கள் வசிக்கின்றனர், அதேநேரம் அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் இந்த செழிப்பைத் தொடரச் செய்ய ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் – பெரும்பாலும் வீட்டு வேலைக்காரர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
கடந்த மாதம், சட்டவிரோத வங்கதேச குடியேறிகளை இலக்காகக் கொண்டு “சரிபார்ப்பு” நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளூர் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான இத்தொழிலாளர்களை கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் என கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் “தடுப்பு மையங்களில்” வைக்கப்பட்டு, தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் இந்த நடைமுறையின் போது காவல்துறையால் அடிக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.
“என்னிடம் வாக்காளர் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இருந்தன, ஆனால் அவை போலியானவை என்று அவர்கள் கூறினர். இறுதியாக நான் விடுவிக்கப்படும் முன், ஆறு நாட்கள் என் விதி என்னவென்று தெரியாமல் இருந்தேன்,” என்று 15 ஆண்டுகளாக இந்நகரில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளி ஆதர் அலி ஷேக் கூறினார்.
பன்முக கலாசாரத்தை பெருமையாகக் கொண்ட இந்நகரின் சமூக அமைப்பில் இந்த நடவடிக்கை அழியாத கறைகளை விட்டுச் சென்றுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகள், வீடுகள், மற்றும் சில சமயங்களில் தப்பிக்கும் அவசரத்தில் குடும்பங்களையும் கைவிட்டு ஒரே இரவில் தப்பியோடிவிட்டனர்.
“திடீரென என்னை ஏன் குறிவைத்தார்கள் என்று இன்னும் புரியவில்லை,” என்று ஷேக் கூறினார். அவருக்கு பின்னால், அவரது மனைவி தங்கள் உடமைகளை – கிழிந்த ஆடைகள், பழைய பாத்திரங்கள், மற்றும் பள்ளி புத்தகங்களை – மெல்லிய பெட்டிகளில் அவசரமாக அடைத்துக்கொண்டிருந்தார்.
“எனது மொழியாலா, மதத்தாலா, அல்லது நான் ஏழை என்பதாலா?” என்று ஷேக் தொடர்ந்தார், அவரது முகம் கோபத்தால் கடினமானது. “ஏன் பணக்கார வங்காளவாசிகள் கைது செய்யப்படவில்லை?”
பட மூலாதாரம், Zoya Mateen/BBC
எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என குருகிராம் காவல்துறை மறுக்கிறது. “மதத்திற்கோ, வர்க்கத்திற்கோ இந்த நடவடிக்கையுடன் எந்த தொடர்பும் இல்லை,” என்று மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 250 பேரில், 10 பேர் மட்டுமே சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் மட்டுமே உண்மையில் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
“மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மையங்களில் யாரும் தவறாக நடத்தப்படவில்லை. நாங்கள் முழுமையாக நேர்மையாகவும், பக்கச்சார்பின்றியும் இருந்தோம்.”
இதற்கிடையில், நகரின் மறுபுறத்திலும் கலக்கம் உணரப்படுகிறது. குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிந்து, தெருக்களில் குவிந்து, குடியிருப்புவாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
“எங்கள் வீட்டு உதவியாளரும், ஓட்டுநராக பணிபுரிந்த அவரது கணவரும் வெளியேறிவிட்டனர், இப்போது எங்களுக்கு உதவியாளர்கள் இல்லை,” என்று ஒரு வளாகத்தில் வசிக்கும் தபசும் பானோ கூறினார்.
முஸ்லிம் பெரும்பான்மையுள்ள வங்கதேசத்திலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கைகள் இந்தியாவில் புதிது அல்ல. இரு நாடுகளையும் 4,096 கி.மீ (2,545 மைல்) நீளமுள்ள எளிதில் ஊடுருவக் கூடிய எல்லை பிரிக்கிறது.
கடந்த சில மாதங்களில், இந்திய ராணுவத்தின் முன்னாள் முஸ்லிம் அதிகாரி உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
பட மூலாதாரம், Zoya Mateen/BBC
வடகிழக்கு மாநிலமான அசாமில், இந்த பிரச்னை பல தசாப்தங்களாக ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது, அங்கு “சட்டவிரோத வங்கதேசிகள்” என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கான வங்காள முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு “திருப்பி அனுப்பப்பட்டு” உள்ளனர்.
டெல்லியில் நாடு கடத்தல்கள் நடைபெற்று வருகின்றன, கடந்த ஆறு மாதங்களில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டு எல்லை மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
இது விளிம்புநிலை சமூகத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில், அவர்களின் புழுதி படிந்த குடியிருப்புகளில் அதிர்ச்சி நிலவியது.
“பல ஆண்டுகளாக, நாங்கள் அவர்களின் குப்பைகளை சுத்தம் செய்து சேகரித்து வந்தோம். இப்போது நாங்களே குப்பையாக நடத்தப்படுகிறோம்,” என்று ரவுனா பீபி கூறினார்.
ஒரு வீட்டு உதவியாளரான ரவுனாவின் கணவர், கைது நடவடிக்கைகள் தொடங்கிய அதே நாளில் மேற்கு வங்கத்திலிருந்து திரும்பினார். இதைக் கேள்விப்பட்டவுடன், அவர் மிகவும் பயந்து மீண்டும் வெளியேறினார் – இந்த முறை, தனது மனைவியிடம் தகவல் தெரிவிக்காமலே சென்றார்.
“மூன்று நாட்களாக, அவர் கைது செய்யப்பட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்று ரவுனா கூறினார். “இறுதியாக பேசியபோது, அவர் எந்த பிரச்னையையும் விரும்பவில்லை என்பதால் அழைக்கவில்லை என்றார்.”
ஆனால், ரவுனாவை பாதித்தது அவரது கணவரின் நடத்தை அல்ல, அல்லது அவர் இப்போது வேலையற்றவர் என்பதும் அல்ல. அவரது கெளரவத்தையும் ஓர் இடத்தை சேர்ந்தவர் என்ற உணர்வையும் பறித்துக்கொண்டதுதான் அவரை மிகவும் வேதனைப்படுத்தி, அவரை முற்றிலும் சிறுமையானவராக உணரவைத்தது.
“ஏழ்மையைப் போலல்லாமல், இதை என் கடின உழைப்பால் எதிர்க்க முடியாது,” என்று அவர் கூறினார். “அவர்கள் எங்களை கைது செய்தால், எப்படி பிழைப்பது என்று எனக்குத் தெரியாது. இந்த குடிசைப் பகுதி, நாங்கள் செய்யும் வேலை, மற்றும் நாங்கள் சுத்தம் செய்யும் வீடுகள் – இதுதான் எங்கள் முழு வாழ்க்கை.”
பட மூலாதாரம், Zoya Mateen/BBC
இந்த சமீபத்திய நடவடிக்கை மே மாதத்தில் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது என்று குமார் கூறுகிறார், இது சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதற்கு புதிய வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளது.
இந்த உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களும் வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து குடியேறிய சட்டவிரோத குடியேறிகளை “கண்டறிய, அடையாளம் காண, மற்றும் நாடு கடத்த/திருப்பி அனுப்ப” சிறப்பு பணிக்குழு மற்றும் தடுப்பு மையங்களை அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு நபருக்கும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க 30 நாட்கள் வழங்கப்படும், இதற்கிடையில் அவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பிற்காக அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.
விவரங்களை உறுதிப்படுத்த முடியாவிட்டால், சந்தேக நபர்கள் “முறையான பாதுகாப்புடன், முடிந்தவரை குழுக்களாக” அழைத்துச் செல்லப்பட்டு, நாடு கடத்துவதற்காக எல்லைப்படைகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
எனினும், ஒரு நபர் சந்தேக நபராக ஆக்கப்படுவதற்கான அடிப்படையை இந்த உத்தரவு குறிப்பிடவில்லை என்று கூறி விமர்சகர்கள் இந்த உத்தரவு குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
பட மூலாதாரம், Zoya Mateen/BBC
“அடிப்படையில் நீங்கள் வங்காள மொழி பேசுவது, முஸ்லிம் பெயர் வைத்திருப்பது, மற்றும் குடிசைப் பகுதியில் வாழ்வது ஆகியவை தவிர வேறு எதுவும் இல்லை,” என்று தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடும் அகில இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய கவுன்சிலின் ஆகாஷ் பட்டாச்சார்யா கூறினார்.
அதைவிட மோசமானது என்னவென்றால், எந்தவொரு சந்தேக நபருக்கும் அவர்களின் குடியுரிமை ஏற்கனவே சரிபார்க்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
“இதனால், அவர்கள் மீண்டும் அதே செயல்முறைக்கு உட்படுத்தப்படலாம், இது அவர்களை எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக்குகிறது.”
பட மூலாதாரம், Zoya Mateen/BBC
குருகிராமில் நடந்த கைதுகள் வலுவான ஆரம்பக்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்று குமார் கூறுகிறார்.
“அவர்களின் தொலைபேசிகளை சோதித்து, வங்கதேசத்திலிருந்து சந்தேகத்திற்குரிய தொடர்புகளைக் கண்டோம். சிலர் விசாரணையின் போது தங்கள் மூதாதையர் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறினர்,” என்று அவர் கூறினார்.
மனித உரிமை ஆர்வலர் சுஹாஸ் சக்மா, இந்தக் கொள்கை மத ரீதியானது இல்லை என்று கூறுகிறார்.
“முஸ்லிம்களின் கைது அதிகமாகத் தோன்றுவதற்கு காரணம் வங்கதேச மக்கள் தொகையில் 95% பேர்முஸ்லிம்கள் என்பதால்தான்,” என்று அவர் விளக்கினார்.
ஆனால், பல தசாப்தங்களாக அகதிகளின் வரவை கண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு, இந்த பல சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பரந்த அகதிகள் சட்டம் தேவை என்று அவர் கூறினார்.
தற்போது, வங்காள முஸ்லிம்கள் ஆழ்ந்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.
அவர்களில் பலர் துரதிர்ஷ்டம் நேரிட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க ஆவணங்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குகின்றனர்.
பட மூலாதாரம், Zoya Mateen/BBC
“நாங்கள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போது இதையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது,” என்று டெல்லியின் மிகவும் சொகுசான மூலைகளில் ஒன்றில் அமைந்துள்ள குடிசைப் பகுதியான ஜெய் ஹிந்த் முகாமில் வசிக்கும் ரபி-உல்-ஹசன் கூறினார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, அதிகாரிகள் அந்தப் பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர், உடனடியாக சுமார் 400 பேரை இருளில் ஆழ்த்தினர்.
இந்தப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாகக் கூறும் குடிசைப் பகுதிவாசிகள் தனியார் நிலத்தில் அத்துமீறி வசிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“நகரின் நகர்ப்புற திட்டமிடல் அமைப்பால் இந்தப் பகுதி சட்டபூர்வமான குடிசைப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தும் இதைச் செய்தனர்,” என்று இந்த உத்தரவை எதிர்க்கும் வழக்கறிஞர் அபிக் சிம்னி கூறினார்.
அதன்பிறகு, குடியிருப்பவர்கள் ஒருவித மயக்கத்தில், கோபமாகவும், சோர்ந்தும் உள்ளனர். “வெப்பம் தாங்க முடியாதது. உணவு அழுகிக் கொண்டிருக்கிறது, குழந்தைகள் அழுவதை நிறுத்துவதில்லை. இரவில், வெளியில் தூங்க முயற்சிக்கிறோம், ஆனால் பின்னர் கொசுக்கள் கடிக்கின்றன,” என்று பைஜான் பீபி கூறினார்.
“நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்,” என்று அவர் தொடர்ந்தார், “சில சமயங்களில் தடுப்பு மையத்தில் வாழ்வது மேலாக இருக்குமா என்று யோசிக்கிறேன். அங்கு குறைந்தபட்சம் ஒரு மின்விசிறி இருக்கும், இல்லையா?”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு