பட மூலாதாரம், Getty Images
தேவேந்திரா என்பவர் ஒரு இந்திய விவசாயி.
மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பு தன் காலில் பற்களைப் பதித்த அந்தத் தருணத்தை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.
“பாம்பு கடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, வலி தாங்க முடியாததாக மாறியபோது தான் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். தாமதமாகச் சென்றதால் எனது காலை இழக்க நேரிட்டது,” என்று உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு (Global Snakebite Taskforce – GST) வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தில் அவர் கூறுகிறார்.
ஆனால் உயிர் பிழைத்த சில அதிர்ஷ்டசாலிகளில் தேவேந்திராவும் ஒருவர். மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும்.
சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
2000 முதல் 2019 வரை, இந்தியாவில் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிர் இழந்திருக்கலாம், அதாவது ஆண்டுக்கு சராசரியாக 58,000 இறப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று 2020 ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது, உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 99% சுகாதாரப் பணியாளர்கள் விஷமுறிவு மருந்தை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது விஷத்தின் நச்சுத்தன்மையை நீக்கும் உயிர் காக்கும் ஆன்டிபாடிகள் ஆகும்.
பாம்புக்கடியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 904 மருத்துவ நிபுணர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மோசமான உள்கட்டமைப்பு, மருந்து கிடைப்பதில் சிக்கல் மற்றும் போதிய பயிற்சி இல்லாமை போன்ற தடைகள் இருப்பதை அவர்கைள் கண்டறிந்தனர்.
சிகிச்சையில் ஏற்படும் தாமதத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுதல் , அறுவை சிகிச்சைகள் அல்லது வாழ்நாள் முழுவதுமான உடல்நலப் பாதிப்புகள் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதாகப் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்புக்கடியால் ஏற்படும் அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக, 2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) இதை “மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்” என்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது.
உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள தகவல்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள்; 1,00,000-க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழக்கின்றனர்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற மக்களே பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பட மூலாதாரம், Strike Out Snakebite
மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பாம்புக்கடியால் அதிகப்படியான உயிர் இழப்புகளும் காயங்களும் பதிவாகின்றன என்று மத்திய சத்தீஸ்கர் மாநில ஜிஎஸ்டி உறுப்பினரும் பயிற்சியாளருமான மருத்துவர் யோகேஷ் ஜெயின் கூறுகிறார்.
குறிப்பாகப் பண்ணைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏழை பழங்குடி மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
2030-ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடி இறப்புகளைப் பாதியாகக் குறைக்கும் நோக்கத்தில், 2024-ஆம் ஆண்டில் இந்தியா பாம்புக்கடி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது.
இது கண்காணிப்பு, விஷமுறிவு மருந்து கையிருப்பு, ஆராய்ச்சி, மேம்பட்ட மருத்துவத் திறன் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நிபுணர்கள் இது ஒரு சரியான முயற்சி என்று ஒப்புக்கொண்டாலும், அது சரியாக செயல்படுத்தப்படுவது இல்லை.
“இந்தியாவில் பாம்புக்கடி என்பது ஏழைகளின் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த முற்றிலும் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு எதிராகப் போதிய எதிர்ப்போ அல்லது நடவடிக்கையோ இல்லை. பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நொடியும் முக்கியமானது”என்கிறார் ஜெயின்.
பாம்பு விஷம் சில நிமிடங்களில் ரத்த ஓட்டத்தில் கலந்து, பாம்பு வகையை பொறுத்து நரம்புகள், செல்கள் அல்லது சுற்றோட்ட மண்டலத்தைத் தாக்குகிறது. மருந்து செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் சுவாசக் கோளாறு, பக்கவாதம், திசு பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம் என்று அவர் விளக்குகிறார்.
கிராமப்புற இந்தியாவில் மோசமான சாலைகள், மருத்துவமனைகள் செல்வதற்கான தூரம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமை போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது.
கடந்த செப்டம்பரில், குஜராத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒரு கர்ப்பிணி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கிராமத்துக்குப் போதுமான வாகன வசதி இல்லாததால் குடும்பத்தினர் அவரை 5 கி.மீ (3 மைல்) தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
சில மாநிலங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பு வைத்து நிலைமையை மேம்படுத்த முயற்சிப்பதாக ஜெயின் கூறுகிறார். இருப்பினும், அதை சரியாக நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.
பல சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை மற்றும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் மருந்து எதிர்வினைகளை உண்டாக்குமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.
“விஷமுறிவு மருந்து சலைன் திரவத்துடன் கலந்து ஒரு மணி நேரம் நரம்பு வழியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் பல மையங்களில் பக்கவிளைவுகளைக் கையாளும் வசதிகள் இல்லை” என்று ஜெயின் கூறுகிறார்.
மற்றொரு பிரச்னை என்னவென்றால், கிராமப்புறங்களில் உள்ள பலர் இன்னும் நாட்டு வைத்தியம் அல்லது உள்ளூர் மருத்துவ முறைகளை நம்பியிருக்கிறார்கள். நிலைமை மோசமான பிறகு மட்டுமே அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதால் , அது ஆபத்தில் முடிகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், The Liana Trust
கர்நாடகாவில் மனித-பாம்பு மோதல்களைக் குறைக்கப் பணியாற்றும் ‘தி லியானா டிரஸ்ட்’அமைப்பின் இணை நிறுவனர் ஜெர்ரி மார்ட்டின், உயர்தர விஷமுறிவு மருந்து கிடைப்பதில் உள்ள சிக்கலே மற்றொரு பெரிய தடையாக இருப்பதாகக் கூறுகிறார்.
தற்போது இந்தியாவில் உள்ள விஷமுறிவு மருந்து, இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான “பிக் ஃபோர்” என்று அழைக்கப்படும் நான்கு நச்சுப் பாம்புகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. அவை, நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகும்.
இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடிகளுக்கு இவை காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தப் பாம்புகளின் விஷத்தை குதிரைகளுக்கு செலுத்தி, அவற்றின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக இந்த விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறை பற்றி மார்ட்டின் விளக்குகிறார்.
“ஆனால், இந்தியாவில் இன்னும் பல்வேறு வகையான விஷப் பாம்புகள் உள்ளன, அவற்றுக்கான பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் நம்மிடம் இல்லை.”
இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் க்ரீன் பிட் வைப்பர் (Green pit viper), தென்னிந்தியாவில் உள்ள மலபார் பிட் வைப்பர் (Malabar pit viper), ஹம்ப் நோஸ்ட் பிட் வைப்பர் (hump-nosed pit viper) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனங்கள் இதில் அடங்கும்.
கடந்த ஆண்டு ஜோத்பூர் எய்ம்ஸ் (AIIMS) நடத்திய ஆய்வு இந்த சிக்கலை உறுதிப்படுத்தியது.
சுருட்டை விரியன் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் விஷ முறிவு மருந்து 105 பாம்புக்கடி நோயாளிகளுக்கு (கடித்த பாம்புகளின் இனங்கள் தெரியவில்லை) வழங்கப்பட்ட போது, மூன்றில் இரண்டு பங்கு பேருக்குச் சிகிச்சைக்கு எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று கண்டறியப்பட்டது.

“மேற்கு இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுவதாக” அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, ‘தி லியானா டிரஸ்ட்’ இந்த நான்கு நச்சுப் பாம்புகள் தவிர பிற பாம்புகளின் விஷம் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்கான மாற்று மருந்துகளை உருவாக்கி வருகிறது. ஆனால், இது அதிக உழைப்பும் காலமும் தேவைப்படும் செயல் என்பதால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது என மார்ட்டின் கூறுகிறார்.
கர்நாடக அரசால் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த உத்தரவில் பாம்புக்கடியை “தெரியப்படுத்தப்பட வேண்டிய நோய்” என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாம்புக்கடி சம்பவங்களை மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் பாம்புக்கடி சம்பவங்கள் குறைவாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“அரசியல் விருப்பம் எங்கு முடிகிறதோ, அங்குதான் பாம்புக்கடி மரணங்கள் தொடங்குகின்றன” என்று மருத்துவர் ஜெயின் கூறுகிறார்.
“ஏழை மக்கள் மோசமான சுகாதார கட்டமைப்பைப் பெறக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள் சிறந்ததைப் பெற தகுதியானவர்கள்” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு