• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? இந்தியாவின் தேவையை ரஷ்யா ஈடுகட்டுமா?

Byadmin

Mar 6, 2026


இரான் போர்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரஷ்யா மூலம் தேவையை ஈடுகட்ட முடியுமா?

பட மூலாதாரம், Elke Scholiers/Getty

படக்குறிப்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன (கோப்புப் புகைப்படம்).

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடைபெற்று வரும் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் பட்சத்தில், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா தனது 40 சதவீத எண்ணெய் விநியோகத்தைப் பெறுகிறது.

ஒரு கட்டத்தில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. ஆனால் ஜனவரியில் இறக்குமதி குறைந்து நாளொன்றுக்கு 11.6 லட்சம் பேரலாக இருந்தது. இது நவம்பரில் 18 லட்சம் பேரலாக இருந்தது.

இந்தியா தனது ஏற்றுமதி மீதான 25 சதவீத அமெரிக்க வரி மீண்டும் விதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், அமெரிக்காவிடம் ‘ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதியை’ நிறைவேற்றவும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவில்லை என்றால், வரி 18 சதவீதத்திலிருந்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். யுக்ரேனுக்கு எதிராகப் போர் புரிந்து வரும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்பதே அவரது நோக்கமாகும்.

இருப்பினும், நாட்டின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி தேவைகள் மற்றும் பாதுகாப்பு தனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று இந்தியா கூறியிருந்தது.

By admin