படக்குறிப்பு, இந்தியாவின் காற்று தர குறியீடு (AQI) தனியார் மானிட்டர்களில் 500-ஐ விட மிகவும் அதிகமாக இருக்கலாம்
வட இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு, நவம்பர் மாத காற்று சாம்பல் வாசம் கொண்டதாக இருக்கும், வானம் புகைமூட்டமாகவே தெரியும், வெளியே செல்வதே ஒரு பெரும் சவாலாக இருக்கும்.
காற்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பரிசோதிப்பதில் இருந்தே பலரின் நாளும் தொடங்குகிறது. ஆனால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்தும் மானிட்டரை பொறுத்தே அமைகிறது.
சஃபார் (SAFAR) மற்றும் சமீர் (SAMEER) போன்ற அரசு ஆதரவு செயலிகள், இந்தியாவின் ஏக்யூஐ (AQI) அளவுகோலில் உள்ள 500 என்ற உச்ச வரம்பில் முடிந்துவிடுகின்றன. இந்த அளவுகோல் பிஎம்2.5, பிஎம்10, நைட்ரஜன் டையாக்சைடு, கந்தக டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் ஓசோன் போன்ற பல்வேறு மாசுகள் பற்றிய சிக்கலான தரவுகளை ஒரே எண்ணாக மாற்றுகிறது.
ஆனால் ஐக்யூஏர் (IQAir) போன்ற தனியார் மற்றும் சர்வதேச டிராக்கர்கள், ஏக்யூஐ போன்ற ‘ஓப்பன்-சோர்ஸ்’ கண்காணிப்பு தளங்கள், அதை விடவும் மிக அதிக எண்ணிக்கையை காட்டுகின்றன. அவை பல சமயங்களில் 600-ஐத் தாண்டியும், ஒருசில நாள்களில் 1,000-க்கும் மேலும் கூட காட்டுகின்றன.
இந்த முரண்கள் ஒவ்வோர் ஆண்டும் அதே கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் எழுப்புகின்றன. எந்த எண்களை நம்புவது? காற்றின் தரக் குறியீடு 500-ஐத் தாண்டும் போது அதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது ஏன்?
படக்குறிப்பு, இந்தியாவின் ஏக்யூஐ அளவை உலக சுகாதார மையம் அல்லது அமெரிக்காவின் தரத்தோடு ஒப்பிடுவது தவறாக வழிநடத்துவதாக அமையும் என்கிறார்கள் வல்லுநர்கள்
இந்தியாவின் அதிகாரப்பூர்வ காற்றுத் தர அளவுகோலின்படி, 200-க்கு மேல் இருக்கும் போது அதை நீண்ட நேரம் எதிர்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு அது சுவாச சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அதே அளவு 400 முதல் 500 வரை இருக்கும் போது அது தீவிரமானதாகக் கருதப்படும். ஆரோக்கியமான மக்களையும் கூட பாதிக்கக்கூடும். ஏற்கெனவே நோய்கள் இருப்பவர்களை அது தீவிரமாக பாதிக்கும்.
அந்த அதிகபட்ச அளவு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
“ஏற்கனவே மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதால், அதற்கு மேல் எவ்வளவு உயர்ந்தாலும் அதன் பாதிப்பு ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதப்பட்டது” என்று சஃபார் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான குஃப்ரான் பேக் கூறுகிறார்.
500 என்ற உச்ச வரம்பை நிர்ணயித்தது ஆரம்பத்தில் மக்கள் பதற்றமடைவதைத் தவிர்ப்பதற்காகவே என அவர் ஒப்புக்கொள்கிறார். ஏனெனில் அந்த அளவை மீறுவது உடனடியாக தீர்வுக்கான நடவடிக்கைகள் தேவை என்ற அச்சுறுத்தலான ஒரு நிலையைக் குறிப்பதாகவும் அவர் சொல்கிறார்.
ஆனால் இந்த அணுகுமுறை, தரவை சுருக்கிவிடுகிறது. உண்மையான மாசு அளவு மிகவும் அதிகமாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ மானிட்டர்களில் 500-ஐத் தாண்டும் அனைத்தும் ஒரே மாதிரியாகவே காட்டப்படுகிறன.
“சர்வதேச நிறுவனங்களும் தளங்களும் இந்த உச்ச வரம்பை விதிப்பதில்லை. அதனால்தான் அவற்றில் மிகவும் அதிகமான காற்று மாசு அளவைப் பார்க்க முடிகிறது,” என்றும் பேக் கூறினார்.
இதுபற்றி கருத்து கேட்க, இந்தியாவின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை பிபிசி அணுகியது.
செயற்கையாக நிர்ணயிக்கப்படும் இந்த உச்ச வரம்பைத் தாண்டி, ஆபத்தான காற்றை வரையறுப்பதில் கூட வேறுபாடு உள்ளது.
உதாரணமாக, பிஎம்2.5 (2.5 மைக்ரோமீட்டருக்கு குறைவான துகள்மாசு – particular matter) 24 மணி நேர கால அளவில் ஒரு கன மீட்டருக்கு 15 மைக்ரோகிராம் இருந்தாலே அது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் சொல்கின்றன. அதுவே இந்தியாவில் ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் அளவில் இருந்தால் தான் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
உலகளவில் பொதுவான ஒரு ஏக்யூஐ தர நிர்ணயம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தங்களுக்கென தனித்தனி மாசு அளவுக்கோல்களைப் பயன்படுத்துகின்றன.
“உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை வழங்க, ஒவ்வொரு நாடும் தங்கள் தகவமைக்கும் இயல்பு, காலநிலை மற்றும் உள்ளூர் சூழலை அடிப்படையாகக் கொண்டு அளவுகோல்களை உருவாக்கியுள்ளன” என்கிறார் பேக். ஆகவே, இந்தியாவின் ஏக்யூஐ-யை உலக சுகாதார மையம் அல்லது அமெரிக்க தரத்துடன் ஒப்பிடுவது தவறான புரிதலை உருவாக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் பயன்படுத்தும் கருவிகளிலும் வித்தியாசம் இருக்கிறது.
இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ‘பீட்டா அட்டெனுவேஷன் மானிட்டர்கள்’ (BAMs) எனப்படும் கருவிகளை பயன்படுத்துகிறது. இவை காற்றில் உள்ள துகள்களின் நிறையை (mass) நேரடியாக அளக்கின்றன. ஒவ்வொரு அளவீட்டுக்கும் கடுமையான, ஒரே மாதிரியான அளவுகோல்களுக்கு ஏற்ப அளவிட்டு பொருத்தப்படுகின்றன.
மாறாக, ஐக்யூஏர் போன்ற தளங்கள் சென்சார் அடிப்படையிலான மானிட்டர்களை நம்புகின்றன என்று, இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் முன்பு பணிபுரிந்த விஞ்ஞானி அபிஜீத் பதக் கூறுகிறார்.
பட மூலாதாரம், EPA/Shutterstock
படக்குறிப்பு, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
சென்சார் அடிப்படையிலான மானிட்டர்கள் காற்றில் இடைநிறுத்தப்பட்ட துகள்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு லேசர் சிதறல் மற்றும் மின்வேதியியல் முறைகளைப் பயன்படுத்துகின்றன.
“சென்சார் முற்றிலும் வேறு கருவி. ஒவ்வொரு அளவீட்டிற்கும் அதை துல்லியமாக அளந்துப் பொருத்துவது சாத்தியமில்லை” என்று கூறும் பதக், “சென்சார் அடிப்படையிலான காற்று தர கண்காணிப்பு இன்னும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை” என்றும் விளக்குகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தியாவின் காற்று தர அமைப்பு 2009 முதல் முழுமையாக திருத்தப்படவில்லை. சமீபத்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அளவுகோலை அளவிட்டு பொருத்தவேண்டும் என்று பிற சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.
“சென்சார் சார்ந்த தரவுகளை சேர்க்கவேண்டும் என்றால், தேசிய காற்று தர குறியீடு திருத்தம் செய்யப்படவேண்டும்” என்று கூறினார் பதக்.
உச்ச வரம்பை நீக்குவதும் முக்கியமான விஷயம் என்று சொல்லும் பேக், “இப்போது கிடைக்கும் பெரும்பாலான ஆய்வுகள், மாசு அளவு அதிகரிக்கும் போது உடல்நல அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்திருக்கும் என்பதை காட்டுகின்றன” என்றும் கூறினார்.
இந்தியாவில் காற்று தரக் குறியீடு 500 என்கிற அளவில் இருப்பதால் அந்த குறியீடு அத்துடன் நின்றுவிடுவதில்லை. உச்சவரம்பு 500 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அது அதோடு நின்றுவிடுகிறது.