சென்னை: இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வனக்காவலர்கள் மற்றும் வனவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி, 333 வனப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதல்முறையாக கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து, அறக்கட்டளையின் இலச்சினை மற்றும் சிறப்பு புத்தகத்தை வெளியிட்டார்.
இதையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் மணலி, எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் அமைப்பு மன்றத்தையும் தொடங்கி வைத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு 2024, 2025-ம் ஆண்டுகளுக்கான மஞ்சப்பை விருதுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்குதல்களை மிகச் சரியாக கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு கடல் பகுதியில் நீடித்த வள மேலாண்மைக்காக ஓர் அறக்கட்டளையை நாம் உருவாக்கியிருப்பது மிகவும் பெருமைக்குரியது. அதேபோல் தொழிற்சாலை பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ள மணலி, எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் அமைப்பு மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலப்பரப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாலைவனமாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பல்லுயிர் பெருக்கத்தில் இருக்கும் ஒவ்வோர் உயிரினங்கள், மரங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை நம் அரசு வனப் பணியாளர்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது” என்றார்.
முன்னதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “படித்து முடித்தவர்களுக்கு பல்வேறு துறைகளில் தரவரிசை அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதில் முதல்வர் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். தகுதியான நபர்கள் நேரடியாக தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம். இதன்மூலம் இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு தமிழகத்துக்கு நிறைய தொழில்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருவதால், இது மக்களுக்கான அரசாக திகழ்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, வனத்துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ராகுல்நாத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் எம்.ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.