பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், டிங்கிள் பாப்பி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனுடன் பொருளாதாரம், உடல்நலம் மற்றும் சமூக பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வயதாகும் போது அதற்கேற்ப தயாராவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொள்வதும் அவசியம்.
2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 மில்லியன் (35 கோடி) வயதான மக்கள் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். வயது சார்ந்து மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுவது, பல கொள்கை ரீதியிலான சவால்களை உருவாக்கும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகள் இவை.
சங்கலா அறக்கட்டளை கடந்த ஆக. 1ம் தேதி ‘ஏஜிங் இன் இந்தியா’ எனும் பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து இந்த அறிக்கை பேசுகிறது.
அதன்படி, இந்தியாவில் உள்ள வயதான மக்கள் பலரும் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான பல சவால்களை சந்திக்கின்றனர்.
பாரம்பரியமாக, இந்திய குடும்பங்கள் வயதானவர்களைப் பராமரித்து வந்தது, ஆனால் காலம் வேகமாக மாறிவருகிறது.
தனி குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு உள்ளது. எனினும், வயதான மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பங்களைச் சார்ந்தே உள்ளனர்.
அவர்களுக்கு வயதாக ஆக, பலவித உடல்நலப் பிரச்னைகள், சமூக பாகுபாடுகள் ஆகியவற்றை அவர்கள் எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள்
‘ஏஜிங் இன் இந்தியா’ அறிக்கையின்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 35.6% மக்கள் இதய நோய்களாலும், 32% மக்கள் உயர் ரத்த அழுத்தத்தாலும் 13.2% மக்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனநலத்தைப் பொருத்தவரை, இந்த வயதுடைய 30% பேர் மன அழுத்தத்தாலும் 8% பேர் தீவிர மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் அதே வயதுடைய 28% பேரும் சண்டிகரில் 21.5% பேரும் உடல் பருமன் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.
கோவா மற்றும் கேரளாவில் வயதானவர்கள் அதிகளவில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், முறையே 60 மற்றும் 57 சதவிகிதமாக இந்த எண்ணிக்கை உள்ளது. கேரளாவில் 35% வயதானவர்களும் புதுச்சேரியில் 28% பேரும் டெல்லியில் 26% பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் 37.1% வயதான மக்கள் குறைவான எடையுடன் உள்ளனர். தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தில் இப்பிரச்னை 40.1% என மிக அதிகளவில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்னைகள் மற்றொரு கவலையாக உள்ளது, 19% வயதான மக்கள் இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் அதிகபட்சமாக 33% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 22% பேர் ஆர்த்ரிட்டீஸ் எனப்படும் மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் உள்ள சுகாதார காப்பீடுகளின் தரவுப்படி பார்த்தால், இந்த பிரச்னைகள் இன்னும் தீவிரமானதாக உள்ளன. அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 18.6% வயதானவர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 17.3% மட்டுமே சுகாதார காப்பீடுகளை எடுத்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
மூத்த குடிமக்களுக்கு பார்வை கோளாறு அல்லது காது கேளாமை போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, அதற்கான சாதனங்களுக்கு (காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை) குறிப்பிடத்தக்க அளவில் பற்றாக்குறை இருப்பதை அவர்கள் உணருகின்றனர்.
இந்த அறிக்கையின்படி, 24% மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடுடையவர்களாகவும் 92% பேர் செவித்திறன் குறைபாடுள்ளவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார உதவி மற்றும் மற்ற பிரச்னைகள்
70 சதவிகித வயதான மக்கள் தங்களின் பொருளாதார தேவைகளுக்கு ஓய்வூதியத்தையோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ சார்ந்திருக்கின்றனர்.
78% மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகள் இல்லாததால், பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர்களையே சார்ந்திருக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இதனால்தான், கிராமப்புறங்களில் 40% பேரும் நகர்ப்புறங்களில் 26% பேரும் 60 வயதை கடந்த நிலையிலும் வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்கு கடன் வாங்குவதால், நகர்ப்புறங்களில் வயதான நான்கில் ஒருவர் கடனாளியாக உள்ளார்.
சமூக புறக்கணிப்பு அல்லது பாகுபாடு
சமூக பாகுபாடு அதிகரித்து வருகிறது. 18.7% வயதான பெண்கள் மற்றும் 5.1 சதவிகித வயதான ஆண்கள் தற்போது தனியாக வசித்து வருகின்றனர்.
கூட்டுக் குடும்ப அமைப்பு இல்லாமல் போனது, குறிப்பாக வயதான பெண்கள் மத்தியில் தனிமையை மேலும் அதிகரித்துள்ளது.
வயது சார்ந்த பாகுபாடு பரவலாகியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் 12.9% வயதானவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய பாகுபாடுகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது, அங்கு 16.5% மக்கள் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். அதையடுத்து, தமிழ்நாடு (13.6%), இமாச்சல பிரதேசம் (13.1%) மற்றும் பஞ்சாப் (12.6%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. பிகார் (7.7%), உத்தர பிரதேசம் (8.1%) மற்றும் அசாம் (8.2%) ஆகிய மாநிலங்களில் இப்பிரச்னை குறைவாக உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வயதானவர்கள் தனியாக வாழும் போக்கும் அதிகரித்து வருகிறது. கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருகின்றன, இதனால் 2.5% வயதான ஆண்களும் 8.6% வயதான பெண்களும் தனியாக வாழ்கின்றனர்.
பெரும்பாலான மூத்த குடிமக்கள் கல்வி கற்றவர்களாக இல்லை. 93.7% வயதான மக்களால் டிஜிட்டல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. எனவே, அவர்கள் ஏமாற்றப்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளது.
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாவது ஏன்?
உலகம் முழுவதும் பிறப்பு எண்ணிக்கை நிலையான அளவில் குறைந்துவருகிறது.
எனினும், கடந்த சில பத்தாண்டுகளில் மருத்துவ அறிவியலின் வளர்ச்சி காரணமாக மனிதர்கள் வாழும் காலம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, வயதானவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
அதனால்தான் உலகம் முழுவதும் வயதானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளான ஜப்பான், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகளவில் வயதானவர்கள் உள்ளனர், அதாவது 60 வயதைக் கடந்த 20% மக்கள் இந்த நாடுகளில் உள்ளனர்.
வளர்ந்து வரும் நாடுகளிலும் வயதானவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும் போக்கு நிலவுகிறது.
அதன் விளைவாக, 2050ம் ஆண்டுக்குள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையில் வயதான மக்கள் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் என்ன பரிந்துரைக்கின்றனர்?
வயதான காலகட்டம் என்பதை தவிர்க்க முடியாது, ஆனால் அதனுடன் வரும் பிரச்னைகளை உறுதியாக தவிர்க்க முடியும்.
சண்டிகரில் உள்ள மெஹ்ர் சந்த் மஹாராஜன் டிஏவி மகளிர் கல்லூரியின் சமூகவியல் துறையின் மூத்த உதவி பேராசிரியர் முனைவர் பிந்து டோக்ரா கூறுகையில், தனிக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காரணமாக, இத்தகைய பிரச்னைகள் தீவிரமாகியுள்ளன என்றார்
“கடந்த காலங்களில் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. வீட்டில் உள்ள வயதானவர்களிடம் பேசுவதற்கும் அவர்களை கவனிப்பதற்கும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால், இப்போது காலம் மாறி வருகிறது. ஆண்-பெண் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். எனவே, வயதானவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பதும் மன அழுத்தம் ஏற்படுவதும் முன்பை விட அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
1. பொருளாதார ரீதியாக தயாராக இருங்கள்
முனைவர் பிந்துவைப் பொருத்தவரை வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் தயாராக இருப்பதற்கு, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது என்கிறார்.
“மக்கள் தங்களின் வாழ்க்கை முழுவதும் குழந்தைகள், வீடு அல்லது கார் வாங்குவது எனப் பல்வேறு விஷயங்களில் பெரும் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால், சிறந்த ஒருங்கிணைந்த காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். அப்படி செய்யும் போது அவர்கள் வயதான காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்காது,” என்கிறார் அவர்.
அவர் கூறுகையில், “வயதான நபர் ஒருவர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தால், நல்ல சிகிச்சை அல்லது உணவுக்கு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லை.” என்கிறார் அவர்.
2. உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்
சிறந்த உணவு முறையை கடைபிடிக்கும் போது அது நம்மை நோயிலிருந்து காக்கிறது. மற்றவர்களை சார்ந்திருப்பதற்கான தேவையையும் குறைக்கிறது. சிறந்த உணவுமுறையை கடைபிடிக்கும் போது மன நலமும் மேம்படுகிறது.
3. உடற்பயிற்சியை புறக்கணிக்கக் கூடாது
முனைவர் பிந்து கூற்றின்படி, பலரும் வயதாகும்போது உடல் சார்ந்த வேலைகளை குறைத்துக்கொள்கின்றனர், இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாகிறது.
“இலகுவான உடற்பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சியை உங்கள் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள்.”
4. நண்பர்கள் மற்றும் சமூக தொடர்புகளை பேணுதல்
“வேலை மற்றும் குழந்தைகளுக்கான பொறுப்புகள், ஒருவரை அவர்களின் நண்பர்கள் மற்றும் சமூக உறவுகளிடமிருந்து விலக்கிவைக்கும்.”
“குழந்தைகள் தங்களின் வேலைகள் அல்லது கல்வியில் பரபரப்பாக இருப்பார்கள். எனவே, அவர்கள் உங்களுடன் நேரம் செலவிட முடியாது அல்லது அவர்கள் வீடுகளிலிருந்து தொலைவில் இருக்கலாம். அப்படியான சமயங்களில், உங்களுக்கென சமூக வட்டத்தை உருவாக்கிக் கொள்வது மிகவும் முக்கியம்.”
பட மூலாதாரம், Getty Images
5. உங்களை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள்
வயதான காலக்கட்டத்தில், சில சமயங்களில் ஒருவர் தங்களை குறித்து அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார்கள், பல சமயங்களில் அவர்களின் கருத்துகள் பரிசீலனைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படாது.
இந்த உணர்வு மிகுந்த ஏமாற்றத்தைத் தரலாம், எனவே உங்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பொழுதுபோக்கை மீண்டும் கையில் எடுங்கள்.
உங்களை பிஸியாக வைத்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒருவரை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும், இதனால் ஒட்டுமொத்தமாக ஒருவரின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு