பட மூலாதாரம், Elke Scholiers/Getty
-
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
விமானப் போக்குவரத்துத் துறையில் விமானிகள் பற்றாக்குறை, விமான நிலையங்களில் நீண்ட வரிசைகள், ரத்து செய்யப்பட்ட விமானங்கள், அவதிப்படும் பயணிகள், ஏகபோகம் (monopoly) குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் நிறுவனத்தின் விளக்கங்கள் என சமீபத்தில் நடந்தவற்றை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இன்று நாம் அதைப் பற்றி விவாதிக்கப் போவதில்லை, வேலையைப் பற்றிப் பேசுவோம். இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சக்தியாக உள்ளது.
2024-ஆம் ஆண்டில் மட்டும், விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) 1,300-க்கும் மேற்பட்ட வணிக ரீதியிலான பைலட் உரிமங்களை வழங்கியுள்ளது. அதாவது இந்த ஆண்டில் இத்தனை புதிய பைலட்கள் இணைந்துள்ளனர்.
கரியர் கனெக்ட் தொடரின் இந்தப் பகுதியில், தரையில் இருந்து கொண்டு காணும் கனவு வேலை. வேலை முழுவதும் வானத்திலேயே நடக்கும். அந்த வேலையைப் பற்றி நாம் பேசப் போகிறோம். அதாவது விமானி ஆவது பற்றி.
விமானி பயிற்சியில் சேர்வது எப்படி?
முதலில் ஒரு விமானி ஆவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலை ஒரு முன்னணி விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானி நமக்கு வழங்கினார்.
இந்தியாவில் விமானி ஆவதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒன்று பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது, மற்றொன்று விமான நிறுவனங்களின் ‘கேடட் பைலட்’ திட்டத்துடன் தொடர்புடையது.
இரண்டு வழிகளிலும் வயது 18 ஆக இருக்க வேண்டும். அத்துடன் 12-ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
யாராவது வணிகவியல் அல்லது கலைப் பின்னணியில் இருந்து வந்தால், அவர்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அல்லது ஏதேனும் ஒரு மாநில வாரியத்தின் திறந்தநிலை தேர்வு மூலம் 12-ஆம் வகுப்பு இயற்பியல் மற்றும் கணிதத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பாக இருப்பது விமான போக்குவரது இயக்குநரகம்தான். பைலட் பயிற்சிக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் பல மருத்துவர்களுக்கு விமானபோக்குவரத்து இயக்குநரகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பைலட் பயிற்சிக்கு முன் மாணவரிடம் கிளாஸ் 2 மருத்துவச் சான்றிதழ் இருக்க வேண்டும். இதை விமான போக்குவரத்து ஆணையரகம் அங்கீகரித்த மருத்துவர்கள் வழங்குகிறார்கள். ஒருவர் பைலட்டாக பயிற்சி பெற மருத்துவ ரீதியாக தகுதியுள்ளவரா இல்லையா என்பதை அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்குப் பிறகு கிளாஸ் 1 மருத்துவப் பரிசோதனை நடைபெறும், இதை விமான போக்குவரத்து இயக்குநரகமே நடத்துகிறது. இந்திய விமானப் படை அங்கீகரித்த மருத்துவர்களே இதைச் செய்கிறார்கள்.
வணிக ரீதியிலான விமானி உரிமத்தைப் பெறுவதற்கு இந்தத் தேர்வுச் சான்றிதழ் அவசியமாகும். இதில் கண்கள், ஈசிஜி, இரத்தப் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை பரிசோதனை ஆகியவை அடங்கும்.
இரண்டு பரிசோதனைகளுக்கும் சேர்த்து சுமார் பத்தாயிரம் ரூபாய் செலவாகும்.
ஒருவருக்கு நிறக்குருடு இருந்தால், அவர் பைலட் ஆக முடியாது. அத்துடன் ஆரம்பத்தில் ரத்தம், சிறுநீர் போன்ற அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ஒன்றில் தோல்வியடைந்தாலும், அவர் பைலட் ஆக முடியாது.
இதற்குப் பிறகு என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Udit Kulshrestha/Bloomberg via Getty
தகுதி தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த பிறகு, DGCA-வின் CPL தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வு பொதுவாக ஆண்டில் நான்கு முறை நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான பயிற்சி இரண்டு வகைகளாக இருக்கும். ஒன்று தரைவழிப் பயிற்சி, மற்றொன்று பறக்கும் பயிற்சி.
தரைவழிப் பயிற்சி என்பது பைலட் பயிற்சியின் கல்விசார் கட்டமாகும். இதில் வானிலை ஆய்வு (Meteorology), விமான ஒழுங்குமுறை, நேவிகேஷன் (Navigation), ரேடியோ டெலிபோனி, தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும்.
இவற்றின் எழுத்துத் தேர்வுகளில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும்.
இதற்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் விமான போக்குவரத்து ஆணையரகம் அங்கீகரித்த பல்வேறு விமானப் பயிற்சி அமைப்புகளில் சேர்ந்து, அங்கு 200 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
இது தவிர மற்றொரு வழி கேடட் பைலட் புரோகிராம், இதை விமான நிறுவனங்களே நடத்துகின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி, விமான நிறுவனத்தின் கேடட் பைலட் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் இருக்கும், அதில் கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகிய இருவகை பயிற்சிகளும் இருக்கும்.
இதில் விமானப் போக்குவரத்து குறித்த ஆழமான வழிகாட்டுதல்கள் தரப்படுகின்றன. அத்துடன் கூட்டு சேர்ந்துள்ள விமானப் பயிற்சி அமைப்புகளில் விமானத்தில் பறப்பது குறித்த செய்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இந்த ஒருங்கிணைந்த பயிற்சி, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப விமானிகள் திறன்களைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஏர் இந்தியாவின் கேடட் பைலட் திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரருக்கு ஏர் இந்தியா விமானப் பயிற்சி அகாடமி மற்றும் விமான நிறுவனத்தின் இரண்டு உலகளாவிய கூட்டாளர் பள்ளிகளில் வணிக ரீதியிலான பைலட் உரிமப் பயிற்சி மற்றும் டைப் ரேட்டிங் வழங்கப்படுகிறது.
விமானப் பயிற்சியின் போது விண்ணப்பதாரருக்கு சிறிய விமானங்களை ஓட்டக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
பயணிகள் விமானத்தை ஓட்ட வேண்டியிருக்கும் போது, அவர்களுக்கு மற்றொரு உரிமம் தேவைப்படுகிறது. இது டைப் ரேட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
ஏர் இந்தியாவின் பயிற்சி அகாடமி மகாராஷ்டிராவின் அமராவதியில் உள்ளது. அத்துடன், இரண்டு உலகளாவிய கூட்டாளர் பள்ளிகள் அமெரிக்காவில் உள்ளன.
கேடட் திட்டத்தின் மூலம் விமான நிறுவனங்களே 12-ஆம் வகுப்புக்குப் பிறகு சில தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தங்களது கேடட்களாகத் தேர்ந்தெடுக்கின்றன.
பின்னர் அவர்களுக்கு விமானப் பயிற்சி அளிக்கப்படுகிறது மற்றும் விமான நிறுவனங்களுக்குத் திரும்பிய பிறகு அவர்களுக்கு டைப் ரேட்டிங் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கான கட்டணம் அதிகமாக இருக்கும்.
விமானத்தில் செய்முறை பயிற்சிக்கு செலவு எவ்வளவு?
பட மூலாதாரம், Elke Scholiers/Getty
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும், அதன் பிறகு விமானத்தில் செய்முறை பயிற்சி தொடங்குகிறது.
இதில் விண்ணப்பதாரர்கள் எந்த நாட்டில் இந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலும் இந்தப் பயிற்சியைப் பெறலாம்.
கேப்டன் மோகித், விமானத்தில் கவித்துவமான முறையில் அறிவிப்புகளைச் செய்ததன் மூலம் வைரலானவர், இப்போது அவர் ஒரு விமான நிறுவனத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றுவதோடு, ‘பொயட்டிக் பைலட்’ என்ற பெயரில் பயிற்சி அகாடமியையும் நடத்தி வருகிறார்.
அவர் கூறுகையில், “பெரும்பாலானவர்கள் இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்காவைத் தேர்ந்தெடுக்கிறார்கள், என்னைப் போன்ற சிலர் கனடாவுக்கும் செல்கிறார்கள். நீங்கள் எங்கு விமானப் பயிற்சி பெற்றீர்கள் என்பது முக்கியமல்ல, ஏனென்றால் நீங்கள் விமான போக்குவரத்து ஆணையரகத்தின் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். விமான நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெற்ற பயிற்சிக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. உங்களிடம் இந்திய பைலட் உரிமம் உள்ளதா இல்லையா என்பதுதான் முக்கியம்.” என்றார்.
இந்தியாவில் ஒரு நல்ல பள்ளியில் இந்தப் பயிற்சி 14 முதல் 15 மாதங்கள் நடைபெறும், இதற்கு 50-55 லட்சம் ரூபாய் செலவாகும்.
அமெரிக்காவில் இந்தப் பயிற்சி 10 மாதங்கள் நடைபெறும், செலவு 50-52 லட்சம் ரூபாய் ஆகும்.
தென்னாப்பிரிக்காவில் இது 12-14 மாத கால படிப்பாகும், இதற்கு 35-40 லட்சம் ரூபாய் செலவாகும்.
கேப்டன் மோகித் பேசுகையில், “இது ஒவ்வொரு மாணவரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிக்கும் பட்டப்படிப்பைப் போன்றது அல்ல. மாறாக இங்கு விண்ணப்பதாரருக்கு 200 மணிநேர விமானப் பயிற்சி அனுபவம் இருக்க வேண்டும். சிலர் இதை பத்து மாதங்களில் செய்கிறார்கள், சிலருக்கு அதிக நேரம் எடுக்கலாம்.”
பயிற்சிக்குப் பிறகு எந்த விமான நிறுவனத்தில் விமானிகளுக்கான வேலைவாய்ப்பு வருகிறதோ, அங்கு பணியாற்ற விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
கேப்டன் மோகித்தின் கூற்றுப்படி, ஒரு விமானி விமான நிறுவனத்தில் சேரும்போது, அவர்களின் முதல் பதவி ஃபர்ஸ்ட் ஆபீசர் ஆகும். இவர்கள் விமானத்தில் கேப்டனுடன் துணை விமானியாக இருப்பார்கள்.
கேப்டன் ஆவதற்கு ஏடிபிஎல் எனப்படும் ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் உரிமம் என்ற தனி உரிமம் தேவை.
அந்த உரிமத்திற்கு விண்ணப்பதாரர் விமான போக்குவரத்து ஆணையரகத்தின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவற்றில் நேவிகேஷன், ரேடியோ நேவிகேஷன், வானிலை ஆய்வு போன்ற பாடங்களே இருக்கும். குறைந்தது 1500 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு வந்தவுடன், அதற்கு விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ஒரு எழுத்துத் தேர்வை நடத்தும். இந்தத் தேர்வுகள் விமான போக்குவரத்து ஆணையரகத்தின் தேர்வுகளில் இருந்து சற்றே வேறுபட்டவை.
கேப்டன் மோகித் கூறுகையில், “இதை இப்படிப் புரிந்து கொள்ளுங்கள், விமான நிறுவனத்திற்கு 300 பைலட்கள் தேவைப்பட்டு, 1000 பேர் தேர்வு எழுதியிருந்தால், நிறுவனம் அதிக மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே அடுத்த சுற்றுக்கு அழைக்கும், அதேசமயம் DGCA-வின் தேர்வில் 70 மதிப்பெண்கள் எடுப்பது அவசியம், ஆனால் 80 அல்லது 90 எடுப்பவர்களுக்கு என்று தனிச் சலுகை எதுவும் இல்லை.”
சம்பளம் மற்றும் வளர்ச்சி என்ன?
பட மூலாதாரம், Imtiyaz Khan/Anadolu Agency/Getty
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் விமானிகள் சம்பளம் கணிசமாக இருப்பதாக ஒரு பைலட் எங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன் விமான போக்குவரத்து ஆணையரகம் இப்போது அவர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையைப் பராமரிக்கும் வகையில் விதிகளை உருவாக்கியுள்ளது.
கேப்டன் மோகித் கூற்றுப்படி, “ஒரு பைலட்டுக்கு 12 மணிநேர ஓய்வு கட்டாயமாகும். இதில் விமான நிலையத்திற்குச் சென்று வரும் நேரத்தைச் சேர்த்தால் இது சுமார் 15 மணிநேர இடைவெளியாக இருக்கும். அத்துடன் வாரத்தில் ஒரு முறை பைலட்டுக்குத் தொடர்ந்து 48 மணிநேரம், அதாவது இரண்டு நாட்கள் இடைவெளி கிடைப்பது அவசியமாகும். இது முன்பு 36 மணிநேரமாக இருந்தது.”
அதேசமயம், சம்பளத்தைப் பற்றிப் பேசினால், ஃபர்ஸ்ட் ஆபீசருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 1.25 லட்சம் ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
அதே நேரத்தில் யாராவது கேப்டன் பதவியில் இருந்தால், இந்தத் தொகை மாதம் நான்கு முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை இருக்கும். சர்வதேச விமான நிறுவனத்தில் சம்பளம் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் விமானிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் இருப்பதாக கேப்டன் மோகித் கூறுகிறார்.
அங்கு ஒவ்வொரு மாதமும் ஒரு ஃபர்ஸ்ட் ஆபீசருக்கு 8-9 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது மற்றும் வரியும் குறைவாக இருக்கும். ஆனால் இதற்காக நீங்கள் வேறொரு நாட்டில் வசிக்க வேண்டும். அதாவது செலவும் அதிகமாக இருக்கும்.

கேப்டன் மோகித் கூற்றுப்படி, விமானிகள் விமானம் ஓட்டுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. மாறாக அவர்கள் ஒரு விமான நிறுவனத்தின் அகாடமியில் பயிற்சியாளராக ஆகலாம். சார்ட்டர்ட் விமானங்களின் விமானிகளாகவும் ஆகலாம்.
விமானி ஆவதில் எவ்வளவு பலன்கள் உள்ளதோ, அதே அளவுக்கு அதற்கான கல்வி மற்றும் பயிற்சியும் செலவு மிக்கது. சாதாரண வணிக ரீதியிலான விமானி உரிமத்திற்கான பயிற்சி படிப்புக்கு ஆகும் செலவு சுமார் 55 முதல் 85 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
அதேநேரத்தில் சில விமான நிறுவனங்கள் கேடட் பைலட் பயிற்சிக்கு ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலிக்கலாம்.
சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் ஒரு மாணவர் இவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்ட முடியும் என்று கேப்டன் மோகித்திடம் கேட்டோம். அவர் தனது உதாரணத்தைக் கூறி விளக்கினார், “கல்விக் கடன் இதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனென்றால் உங்களுக்கு வேறு பொறுப்புகள் இல்லை என்றால், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு