பட மூலாதாரம், Bureau of Aircraft Accidents Archives
1978-ஆம் ஆண்டு, டிசம்பர் 20-ஆம் தேதி அந்த குளிரான மாலைப் பொழுதில், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 410-ன் 15-வது வரிசையில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து காக்பிட் (விமானி அறை) நோக்கிச் சென்றனர்.
பயணிகள் யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை. விமான ஊழியர்களும் எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை.
ஒரு இளைஞன் மிகவும் ‘மரியாதையுடன்’ காக்பிட்டிற்குள் (விமானி அறை) உள்ளே செல்ல அனுமதி கேட்ட போது, அவர்களால் எப்படி தவறாக நினைக்க முடியும் ?
கொல்கத்தாவில் இருந்து (அப்போது கல்கத்தா) லக்னோ வழியாக 126 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த விமானம், டெல்லியின் பாலம் விமான நிலையத்தில் 15 நிமிடங்களில் தரையிறங்கவிருந்தது.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் காட்சியே மாறியது.
‘இந்தியா டுடே’ செய்தியின்படி, ஒரு இளைஞனின் “மரியாதையான” கோரிக்கையைத் தொடர்ந்து, ஊழியர் ஜி.வி. டே அந்தச் செய்தியை விமானியிடம் தெரிவிக்க காக்பிட்டிற்குள் நுழைய முயன்றார். அப்போது ஓர் இளைஞன் இந்திரா தாக்கரே என்ற விமானப் பணிப்பெண்ணின் முழங்கையைப் பிடித்து இழுத்தார். மற்றொருவர் காக்பிட்டிற்குள் நுழைய முயன்றார்.
“காக்பிட்டில் காந்தக் கதவின் தானியங்கிப் பூட்டு மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தியபோது கதவு திறந்தது, அவர்கள் உள்ளே நுழைந்தனர்”என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அதற்குள் ஏதோ விபரீதம் நடப்பதை பயணிகளும் ஊழியர்களும் உணர்ந்து கொண்டனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, “நமது விமானம் கடத்தப்பட்டுள்ளது, இப்போது விமானம் பாட்னா நோக்கிச் செல்கிறது” என்று விமானியின் குரல் ஒலித்தது.
இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களில், “நாம் வாரணாசி நோக்கிச் செல்கிறோம்”என்ற மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புகளுக்கு முன்னதாக, கடத்தல்காரர்களுக்கும் விமானிகளுக்கும் இடையே காக்பிட்டிற்குள் பெரும் வாக்குவாதம் நடந்ததாக விமானி கூறியதாக இந்தியா டுடே மேற்கோள் காட்டியுள்ளது.
“விமானத்தின் பயண தூரத்திற்கு ஒரு எல்லை இருக்கிறது என்பதை அந்த முட்டாள்களுக்கு (கடத்தல்காரர்களுக்கு) விளக்குவது கடினமாக இருந்தது. முதலில் அவர்கள் நேபாளத்திற்குச் செல்லுமாறு மிரட்டினர். அவர்களில் மிகவும் வெறித்தனமாக இருந்தவர் என் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது, எரிபொருள் போதுமானதாக இல்லை என்று சொன்னேன். உடனே அவர்கள் வங்கதேசத்திற்குச் செல்லச் சொன்னார்கள். பள்ளியில் கற்ற புவியியல் பாடங்களை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்”என்று அந்த விமானி கூறியிருந்தார்.
ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் பின்னர் காக்பிட்டிலிருந்து வெளியே வந்து, 1977 மார்ச் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா கட்சி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கைது செய்ததற்காகவும், அவர்களது “பழிவாங்கும் உணர்வை”யும் கடுமையாகக் கண்டித்தனர் என்று அந்தப் பத்திரிகை வெளியிட்ட செய்தி கூறுகிறது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்புதான் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்திரா காந்தி கைது
பட மூலாதாரம், Getty Images
ஏழு நாட்கள் நடந்த காரசாரமான விவாதத்திற்குப் பிறகு, மக்களவை பெரும்பான்மை வாக்குகளுடன் இந்திரா காந்தியை அவையிலிருந்து நீக்கி, சிறைக்கு அனுப்பியதாக, வில்லியம் பார்டர்ஸ் என்பவர், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) என்ற அமெரிக்க நாளிதழில் எழுதிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“1975-ஆம் ஆண்டில், தனது மகன் சஞ்சய் காந்தியின் கட்டுப்பாட்டில் இருந்த மாருதி லிமிடெட் நிறுவனத்தை விசாரித்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளை, அந்த வழக்கிலிருந்து விலகும்படி கட்டாயப்படுத்தி, அவர்களைத் துன்புறுத்தியதாக இந்திரா காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்த நடவடிக்கையை “பழிவாங்கல் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்தார்.”
“நாடாளுமன்ற விவாதத்தின் போது, இந்திரா காந்தி அரசின் சிறைவாசம், தணிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அவர் தனது உரையில், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார்.”
“கண்களில் கண்ணீர் வேண்டாம், புன்னகை இருக்கட்டும்”
பட மூலாதாரம், Screengrab/Indian Express
வில்லியம் பார்டர்ஸ் தனது கட்டுரையில், இந்திரா காந்தி தனது இல்லத்திலோ அல்லது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு ‘நள்ளிரவிலோ’ கைது செய்யப்படுவதை விட, நாடாளுமன்றத்திலேயே கைது செய்யப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“மூன்று மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, காவல்துறையினர் கைது வாரண்ட்டுடன் வந்தனர். புன்னகையுடன், மரத்தால் செய்யப்பட்ட ஒரு கனமான மேஜையின் மீது ஏறிய இந்திரா காந்தி, தனது கைகளை கன்னத்தில் வைத்து விட்டுப் பிறகு கீழே இறங்கினார். கிளம்புவதற்கு முன்னதாக, ஒரு பழைய ஆங்கிலப் பாடலின் வரிகளை அவர் எழுதி வைத்தார். அதை அவரது ஆதரவாளர் ஒருவர் பின்னர் அங்கிருந்த கூட்டத்தினரிடையே வாசித்துக் காட்டினார்.”
“விடை பெறும் போது எனக்கு நல்வாழ்த்துகளைக் கூறுங்கள்.
கண்களில் கண்ணீர் வேண்டாம், புன்னகை இருக்கட்டும்.
நான் இல்லாத காலமெல்லாம் என்னுடன் நிலைத்திருக்கும்படியான ஒரு புன்னகையை எனக்குத் தாருங்கள்”.
“நான் கழிப்பறைக்கு போகிறேன், வேண்டுமானால் என்னைச் சுடுங்கள்”
இந்திரா காந்தி கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
அவர் சிறையில் இருக்கும் வரை போராட்டங்களும் உள்ளிருப்பு போராட்டங்களும் தொடரும் என்று காங்கிரஸ் மிரட்டல் விடுத்தது.
ஆனால், தங்களை இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட கடத்தல்காரர்கள், இந்திரா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக முழு விமானத்தையும் கடத்தினர்.
பின்னர் , இந்த கடத்தல்காரர்கள் 27 வயது போலாநாத் பாண்டே மற்றும் 28 வயது தேவேந்திர பாண்டே என அடையாளம் காணப்பட்டனர்.
தாங்கள் “காந்தியவாதிகள்” என்றும் “அகிம்சையில்” நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் அந்த விமானக் கடத்தல்காரர்கள் விமானத்தில் இருந்தவர்களிடம் கூறினர்.
பயணிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்கள் இருவரையும் மிக எளிதாக வீழ்த்தியிருக்கக் கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் பயணிகளோ அல்லது விமான ஊழியர்களோ அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று ‘இந்தியா டுடே’ எழுதியுள்ளது.
ஒரு கட்டத்தில், கடத்தல்காரர்கள் பயணிகளை கழிப்பறையைப் பயன்படுத்த விடாமல் தடுத்தனர். அப்போது விமானத்தில் இருந்த முன்னாள் சட்ட அமைச்சர் ஏ.கே. சென், இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில், “வேண்டுமானால் என்னைச் சுட்டுக் கொள்ளுங்கள், நான் கழிப்பறைக்குத் தான் போகிறேன்” என்று கத்தினார்.
இதற்கிடையில், விமானம் வாரணாசியில் தரையிறங்கி ஓடுதளத்தின் ஒரு மூலையில் நின்றது.
உத்தரபிரதேச முதல்வர் ராம் நரேஷ் யாதவுடன் பேச வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கோரினர். அவர் முதலில் பேச மறுத்துவிட்டார், ஆனால் பிரதமர் தேசாய் அறிவுறுத்தலின் பேரில் அவர் வாரணாசிக்கு புறப்பட்டார்.
தங்களுக்கு நான்கு கோரிக்கைகள் இருப்பதாகவும், அதில் மிக முக்கியமானது இந்திரா காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் என்று கடத்தல்காரர்கள் விமானத்தின் வயர்லெஸ் மூலம் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
முதல்வர் ராம் நரேஷ் யாதவ் நேரில் விமானத்திற்குள் வந்து பேச வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கோரினர். இதற்குப் பதிலாக, விமானத்தில் இருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் பெண் பயணிகளை முதலில் விடுதலை செய்ய வேண்டும் என்ற ராம் நரேஷ் நிபந்தனை விதித்தார்.
இதற்கிடையில், எஸ்.கே. மோதி என்ற பயணி, விமானத்தின் பின்பக்கக் கதவைத் திறந்து கீழே குதித்தார். அவர் குதித்ததை உள்ளே இருந்த யாரும் கவனிக்கக் கூட இல்லை.
அன்றைய சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் புருஷோத்தம் கௌஷிக், டிசம்பர் 21 அன்று நடந்த மக்களவைக் கூட்டத்தில் இந்தச் சம்பவம் குறித்து விளக்கினார்.
“எஸ்.கே. மோதி ஒரு விமானப் பணிப்பெண்ணின் உதவியுடன் விமானத்திலிருந்து தப்பினார். தப்பிய பிறகு, விமானத்தில் இரண்டு கடத்தல்காரர்கள் இருப்பதாகவும், ஒருவன் வெள்ளை பைஜாமா-குர்தாவையும், மற்றொருவர் வெள்ளை வேட்டி-குர்தாவையும் அணிந்திருப்பதாக அதிகாரிகளிடம் மோதி தெரிவித்தார்.
‘தேசியத் தலைவரை’ விடுதலை செய்யக் கோரியும், தங்களது செயலுக்குப் பரவலான விளம்பரம் கோரியும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை அவர்கள் வைத்திருந்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் கூறினார்” என அவர் விவரித்தார்.
“முதல்வருடனான உரையாடலில், இந்திரா காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், ஜனதா கட்சி அரசு பதவி விலக வேண்டும், இறுதியாக விமானம் லக்னோவிற்குத் திரும்ப வேண்டும் மற்றும் அவர் (இந்திரா காந்தி) செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.”
“அனைத்துப் பயணிகளையும் விடுவித்தால், கடத்தல்காரர்களை அரசு விமானத்தில் லக்னோவிற்கு அழைத்துச் செல்வதாக முதலமைச்சர் உறுதி அளித்தார். கடத்தல்காரர்கள் முதலில் இந்த சலுகையை நிராகரித்துவிட்டு, விமானத்தில் எரிபொருள் நிரப்பக் கோரினர். ஆனால், மத்தியக் குழு வாரணாசியில் இருந்த பேச்சுவார்த்தையாளர்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தையைத் தொடருமாறும் அறிவுறுத்தியது.”
பேச்சுவார்த்தைகள் இரவு முழுவதும் தொடர்ந்ததாகவும், பிரதமர் தேசாய் அறிவுறுத்தலின் பேரில், முதலமைச்சர் ராம் நரேஷ் யாதவ் கடத்தல்காரர்களின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கத் தொடர்ந்து மறுத்துவிட்டதாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
“காலை சுமார் 6 மணியளவில், விமானத்திற்குள் மூச்சுத்திணறல் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாகப் பயணிகள் புகார் கூறினர், இதைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் பின் கதவுகளைத் திறந்தனர்.”
“மறுபுறம், விமானி அவசரகால வெளியேற்ற ஸ்லைடு (emergency slide) லீவரை இழுத்தார். கதவுகளிலிருந்து ஸ்லைடுகள் கீழே விழுந்ததும், சில பயணிகள் ஓடிச் சென்று ஓடுதளத்தில் குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில், விமானத்தில் இருந்த பயணிகளில் சுமார் பாதி பேர் அவர்களைப் பின்தொடர்ந்தனர், இதனால் சுமார் 60 பயணிகள் கீழே இறங்கினர்.”
“அதே நேரத்தில், கடத்தல்காரர்களில் ஒருவரின் தந்தை வாரணாசி விமான நிலையத்திற்கு வந்து தனது மகனுடன் வயர்லெஸ் மூலம் பேசினார். தந்தையின் குரலைக் கேட்டதும், அந்த இரண்டு இளைஞர்களும் இந்திரா காந்திக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி விமானத்திலிருந்து வெளியே வந்து அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.”
இந்த கடத்தல் நாடகம் 13 மணி நேரம் நீடித்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது .
கடத்தல்காரர்கள் “இரண்டு பொம்மைத் துப்பாக்கிகளையும், கறுப்புத் துணியால் சுற்றப்பட்ட ஒரு கிரிக்கெட் பந்தையும் (கைக்குண்டு போலத் தோற்றமளித்தது) அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.”
“அவர்கள் நிதானமாகக் கீழே இறங்கி ‘இந்திரா காந்தி ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டனர், அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.”
“விசாரணையின் போது, இந்தச் செயலுக்காகத் தாங்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் பெற்றதாக இருவரும் தெரிவித்தனர். மாநில காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு நிர்வாகிகள் தங்களுக்கு முறையே 400 மற்றும் 200 ரூபாய் கொடுத்ததாக அவர்கள் பெயர் குறிப்பிட்டனர். இந்தத் தொகையிலிருந்து 350 ரூபாயைச் செலவழித்து லக்னோவிலிருந்து டெல்லிக்கு விமான டிக்கெட் வாங்கியுள்ளனர்.”
இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்குப் பிறகு இந்திரா காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், விமானக் கடத்தல் வழக்கில் அந்த இளைஞர்கள் இருவரும் லக்னோ சிறையில் ஒன்பது மாதங்கள் 28 நாட்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, இந்திரா காந்தி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தார், அப்போது கடத்தல்காரர்களான போலாநாத் மற்றும் தேவேந்திர பாண்டே மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
காங்கிரஸ் கட்சி போலாநாத்திற்கு பாலியா மாவட்டத்தின் துவாபா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதாக மௌல்ஸ்ரீ சேத் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதினார்.
1980-ல், தனது 27-வது வயதில், போலாநாத் முதல்முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989-ல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு அவர் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், காங்கிரஸ் அவருக்குப் பல கட்சிப் பதவிகளை வழங்கியது.
தேவேந்திர பாண்டே, ஜெய்சிங்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
காங்கிரஸ் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?
பட மூலாதாரம், ScreenGrab/Indian Express
கிருஷ்ணா ஆர். வாத்வானி தனது ‘இந்திய விமான நிலையங்கள் (அதிர்ச்சியூட்டும் கள யதார்த்தங்கள்)’ (‘Indian Airports- Shocking Ground Realities) என்ற புத்தகத்தில் தேவேந்திர நாத் பாண்டேவை மேற்கோள் காட்டி, “அது ஒரு பைத்தியக்காரத்தனம், காந்தி குடும்பத்தின் மீதான பைத்தியக்காரத்தனமான பக்தி”என்று கூறியுள்ளார்.
மக்களவை விவாதங்களை மேற்கோள் காட்டி ஏ. சூர்யபிரகாஷ் எழுதியுள்ள ஓர் ஆய்வுக் கட்டுரையில், டிசம்பர் 23 அன்று இந்தச் சம்பவம் குறித்து மக்களவையில் காரசாரமான விவாதம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தனர். இருப்பினும், ஆர். வெங்கட்ராமன் (பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவரானவர்) மற்றும் வசந்த் சாத்தே உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் தொண்டர்களின் நடத்தையை நியாயப்படுத்த முயன்றனர். இந்த கடத்தல் சம்பவம் ‘வேடிக்கையானது’ என்று கூறி அதை நிராகரித்தனர்”
“இந்தச் செய்தி வெளியான போது நாடு முழுவதும் கோபம் நிலவியது. ஆனால் பின்னர் அது வெறும் பொம்மைத் துப்பாக்கி மற்றும் கிரிக்கெட் பந்து என்று தெரிந்தபோது, அது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாக மாறிப்போனது”என்று வெங்கடராமன் கூறுகிறார்.

சூர்யபிரகாஷின் கூற்றுப்படி, வசந்த் சாத்தே பேசுகையில், தான் கடத்தல்காரர்களின் செயலை ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் இதை விமானக் கடத்தல் என்பதா அல்லது “நகைச்சுவை” என்பதா என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.
அவர்கள் கிரிக்கெட் பந்து மற்றும் பொம்மைத் துப்பாக்கியைப் பயன்படுத்தியதால், இது தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களின் குறும்பான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
விமானக் கடத்தலை ஒரு சிறிய சம்பவமாகக் கருதிய காங்கிரஸ் உறுப்பினர்களைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கடுமையாகக் கண்டித்தார் என்று அவர் எழுதியுள்ளார்.
விமானிகள் ஒருவேளை பீதியடைந்திருந்தால், பெரிய விபத்து நேர்ந்திருக்கக் கூடும். அது பொம்மைத் துப்பாக்கியாகவோ அல்லது கிரிக்கெட் பந்தாகவோ இருந்தாலும், விமானிகளால் ஆபத்தை எதிர்கொள்ள முடியாது என்று தேசாய் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு