படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு இரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை டொனால்ட் டிரம்ப் விலக்கிக் கொண்டார்.கட்டுரை தகவல்
எழுதியவர், சுரபி குப்தா
பதவி, பிபிசி நிருபர்
கடந்த பல நாட்களாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்து வரும் வார்த்தை போருக்கு மத்தியில், இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தையை ஓமனில் தொடங்கியுள்ளன.
நியாயமான ஒப்பந்தம் எங்களுக்கு தேவை என இரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.
ஒபாமா ஆட்சி காலத்தின் போது இரான் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் 2018-ஆம் ஆண்டு, டொனால்ட் டிரம்ப் தன்னுடைய முதல் ஆட்சி காலத்தில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
அதை விட சிறப்பான ஒரு ஒப்பந்தத்தை தன்னால் உருவாக்க இயலும் என்று வெகு காலமாக கூறி வந்தார். ஆனால் தற்போது வரை இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிராகரித்து வந்தது இரான்.
இரு தரப்பினரும் ஒரே அறையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பதில் தெளிவு இல்லை. ஆனால் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த இயலுமா என்பதை தெரிந்து கொள்வதற்கான முதல் முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பானது பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க அதிகாரிகளை வழிநடத்தும் டிரம்பின் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப், நேருக்கு நேர் நடைபெறும் சந்திப்பு குறித்து பேசினார்.
ஆனால் இரு தரப்பும் எத்தகைய ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளும் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன?
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு இரானின் அணுசக்தி திட்டம்தான் காரணமாக உள்ளது.
பல ஆண்டுகளாக தனது அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தி வரும் இரான், தனது அணுசக்தி திட்டத்தால் உலகளவில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகிறது.
2015-ஆம் ஆண்டில், இரானுக்கும் அமெரிக்கா உட்பட ஆறு உலக வல்லரசு நாடுகளுக்கும் இடையே விரிவான செயல் திட்டம் (JCPOA) என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டது.
2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், இரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தவும், அதனை சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தவும் ஒப்புக்கொண்டது. அதற்கு ஈடாக, இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டது.
ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், 2018 ஆம் ஆண்டு இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டு, மீண்டும் இரான் மீது தடைகளை விதித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது.
இந்தியாவிற்கு உணர்த்துவது என்ன?
இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை இந்தியாவுக்கு முக்கியமானது. இந்த இரு நாடுகளுடனும் இந்தியா ராஜ்ஜீய உறவுகளைக் கொண்டுள்ளது தான் இதற்கு காரணம்.
இத்தகைய சூழலில், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த பேச்சுவார்த்தை இந்தியாவிற்கு உணர்த்தப்போவது என்ன?
அமெரிக்காவும் இரானும் இந்தியாவிற்கு முக்கியமான நாடுகள். எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவையும் பாதிக்கலாம்.
“இந்தியா, அமெரிக்கா மற்றும் இரானுடன் ராஜ்ஜீய உறவுகளைக் கொண்டிருப்பதால், இந்த பேச்சுவார்த்தை இந்தியாவிற்கு முக்கியமானது” என்று மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் ப்ளாட்பார்ம் அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபாதா செளத்ரி கூறுகிறார்.
“இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முடிவுகளைத் தந்தால் நல்லது, இல்லையெனில் இந்தியா ராஜ்ஜீய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று இந்திய உலக விவகார கவுன்சில் எனும் சிந்தனை குழுவின் ஆய்வாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணருமான ஃபஸ்ஸூர் ரஹ்மான் கூறுகிறார்.
“தற்போதைய சூழலில், அமெரிக்காவுடனும் இரானுடனும் பேசுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா நடுநிலையாக இருக்க விரும்புகிறது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிரம்பிடம் தெளிவாகக் கூறியது போல், இரான் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அந்த தாக்குதலில், ரஷ்யா இரானுக்கு உதவி செய்யும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஒரு தரப்பை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம்” என்கிறார் சுபாதா செளத்ரி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி
இந்தியாவிற்கும் முக்கியம்
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான விஷயங்கள் சரியாக நடந்தால், அது இந்தியாவிற்கும் நன்மை பயக்கும்.
ஏனெனில் ஒரு காலத்தில் இரானின் எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடாக இந்தியா இருந்தது.
“இந்தியா கச்சா எண்ணெய்க்காக இரானையே பெரிதும் நம்பியிருந்தது. 2019க்கு முன்பு, இரானில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 11 சதவீதமாக இருந்தது. ஆனால் டிரம்பின் முதல் நிர்வாக காலத்தில், இரான் மீது மீண்டும் தடைகள் விதிக்கப்பட்டபோது, இரண்டாம் கட்ட தடைகள் விதிக்கப்படுவதை (தடைகள் விதிக்கப்பட்ட நாடுடன் வணிகம் செய்யும் நாட்டிற்கு தடைகள்) தடுக்க இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டியிருந்தது” என்கிறார் சுபாதா செளத்ரி
இந்தியாவால், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இராக் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் தற்போது விலை உயர்ந்து வருவதாகவும் சுபாதா கூறுகிறார்.
இதுபோன்ற சூழலில், இரான் மீதான தடைகள் தொடர்ந்தால் இந்த நிலையே நீடிக்கும்.
ஆனால், அமெரிக்கா-இரான் பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முடிவுகளுக்கு வழி வகுத்தால், இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வழி இந்தியாவுக்கு மீண்டும் திறக்கப்படலாம் என்று ஃபஸ்ஸூர் ரஹ்மான் கூறுகிறார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய முனைவர் சுபாதா செளத்ரி, “இந்தியா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கினால், அது மலிவானதாக இருக்கும். இது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை சிறிது சரி செய்யலாம். உள்நாட்டு எரிபொருள் விலைகளையும் சரி செய்ய முடியும்” என்கிறார்.
இரான் மீதான தற்போதைய தடைகளின் காரணமாக, இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சபாஹர் துறைமுகத்தின் பணிகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சுபாதா கூறுகிறார்.
பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்தியாவை மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இணைக்கும் முக்கிய மையமாக சபாஹர் துறைமுகம் உள்ளது.
“இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு, இரானுக்கு பொருளாதாரத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டால், அது சபாஹரில் இந்தியாவின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க உதவும்” என்று சுபாதா செளத்ரி தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நல்ல விதமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால், இந்தியா பயனடையும் என்று இரு நிபுணர்களும் நம்புகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றம் தணிந்தால் அதனால் இந்தியாவுக்கு நன்மை விளையும் .