• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவுக்கு நெருக்கடி முற்றுகிறதா? – ஐரோப்பிய நாடுகளையும் வரி போரில் இணைக்க முயற்சிக்கும் அமெரிக்கா

Byadmin

Sep 9, 2025


ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உருசுலா வான் டெர் லேயனுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உருசுலா வான் டெர் லேயனுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது ஐரோப்பிய ஒன்றியமும் கூடுதல் தடைகளை விதித்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிடும் என ஞாயிற்றுக்கிழமை பெசண்ட் தெரிவித்தார்.

அமெரிக்காவின் என்பிசிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் ரஷ்யா மீது கூடுதல் அழுத்தம் தரவேண்டியதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உருசுலா வான் டெர் லேயனுடன் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என தெரிவித்தார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்தியா மீது கூடுதலாக 25 விழுக்காடு வரி விதித்துள்ளது.

அதாவது இந்தியாவின் மீது அமெரிக்கா ஏற்கனவே மொத்தமாக 50 விழுக்காடு வரியை விதித்துள்ளது. பெசண்ட்டின் பேட்டியிலிருந்து இந்தியாவின் மீது கூடுதல் அழுத்தத்தை தர அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்கிறது என்பது தெரிகிறது.

ரஷ்யாவின் மீது கூடுதல் அழுத்தம் தர அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதில் ஒன்றிணைய வேண்டும் என பெசண்ட் தெரிவித்தார். யுக்ரேன் ராணுவத்தால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் மற்றும் ரஷ்ய பொருளாதாரம் எத்தனை காலம் தாக்குப்பிடிக்கமுடியும் என்பதற்கிடையில் போட்டி நடப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவித்தார்.

“அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்தால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக தடைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்பதுடன் கூடுதல் வரிகளையும் விதிக்கலாம். இது ரஷ்ய பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்து, ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு தள்ளிவிடும்.”

யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகிறது, ஆனால் ஐரோப்பிய ஒன்றையத்தின் உறுப்பு நாடுகளே ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை நிறுத்தவில்லை

இந்தியாவுக்கு சிக்கல்கள் அதிகரிக்குமா?

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ரஷ்யாவிற்கு எதிராக மேலும் கடுமையான தடைகள் விதிப்பது குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப இருப்பதாக கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளர்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேசி வருவதாக கோஸ்டா கூறினார்.

ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கும் எண்ணெய் அளவு குறித்து தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா மீது 50% வரி விதித்ததாகவும், இது ஒரு பெரிய வரி என்றும் வெள்ளிக்கிழமை டிரம்ப் கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் தனக்கு நல்ல உறவுகள் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தின் பல அதிகாரிகள் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகின்றனர். இதில் அமெரிக்க நிதியமைச்சர், வர்த்தக அமைச்சர் முதல் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் வரை அடங்குவர்.

அமெரிக்காவின் வரியை தேவையற்றது மற்றும் நியாயமற்றது என்று இந்தியா கூறியுள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தன் நலன்களுக்கு உகந்தது என்று இந்தியா தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வாங்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முதலிடத்தில் இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. இன்னொரு உண்மை என்னவென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனா ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது, ஆனால் டிரம்ப் சீனா மீது இந்தியாவுக்கு விதித்த அளவுக்கு வரி விதிக்கவில்லை.

அமெரிக்காவின் இரண்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஒரு நிதியமைச்சருக்கு ஆலோசகராக இருந்த ஈவான் ஏ. ஃபீஜென்பாம், ஸ்காட் பெசன்டின் இந்த வேண்டுகோளை போலித்தனம் என்று விமர்சித்துள்ளார்.

பெசன்டின் காணொளியை மறுபகிர்வு செய்து “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்க்க வேண்டும் என்று அமெரிக்க நிதிச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறுபுறம், உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு உறுப்பினர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இரண்டையும் வாங்குகிறார்கள், மேலும் அதை எதிர்காலத்தில் நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என எக்ஸ் தளத்தில் ஈவான் எழுதினார்,

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் இந்த கூட்டணி சீனா மீதும் தடைகளை விதிக்குமா? எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின்படி (Center for Research on Energy and Clean Air), யுக்ரேன் மீதான தாக்குதலின் மூன்றாவது ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்த புதைபடிவ எரிபொருளின் மதிப்பு, 2024-ல் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு அனுப்பிய நிதி உதவியை விட 18.7 பில்லியன் டாலர் அதிகம்.”

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி மற்றும் ரஷ்ய அதிபர் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி, ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்தார்

இந்தியா டிரம்பை நம்புமா?

அமெரிக்க அதிபர் பிரதமர் மோதியை நண்பர் என்று கூறினாலும், அவர் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகிறார். ஆகஸ்ட் 31 அன்று, பிரதமர் மோதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றார். அங்குதான் அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நடந்த சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரதமர் மோதி அதிபர் புதின் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு, “நாம் இந்தியா மற்றும் ரஷ்யாவை சந்தேகத்திற்குரிய சீனாவிடம் இழந்தது போல் தெரிகிறது. இவர்களது நட்பு இனிமையானதாகவும் நீண்ட காலத்திற்குமானதாகவும் இருக்கும் என நம்புகிறேன்” என்று டிரம்ப் எழுதினார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ரஷ்ய அரசின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய மூன்று முக்கிய சக்திகள் ஒன்றாகத் காட்சியளித்தன. மூன்று நாடுகளும் பெரிய நாகரிகங்களின் பிரதிநிதிகள். இந்த மூன்று நாடுகளும் தங்களது பொதுவான நலன்களைப் புரிந்துகொள்கின்றன.” என கூறினார்.

“இதன் பொருள், மூன்று நாடுகளும் எல்லா பிரச்னைகளிலும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்று அர்த்தமல்ல. ஆனால் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டாண்மை பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.

வெள்ளிக்கிழமை இந்தியாவைப் பற்றி டிரம்ப் மென்மையாகப் பேசினாலும், மோதி அரசாங்கம் அவர் மீது நம்பிக்கை வைப்பது எளிதானது அல்ல.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம், “ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து மன்னிப்பு கேட்கும். இந்தியா டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும். அதன் பிறகு, மோதியை எப்படி கையாள்வது என்பதை டிரம்ப் முடிவு செய்வார்” என்று கூறினார்.

அதே வெள்ளிக்கிழமை, அமெரிக்கா-இந்தியா உறவுகள் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு உறவுகள் உள்ளன என்று டிரம்ப் கூறினார். நரேந்திர மோதி ஒரு சிறந்த பிரதமர் என்றும் எப்போதும் தனது நண்பராக இருப்பார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாஸ்காவில் சந்தித்தனர்

‘பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பு குறைவு’

டிரம்பின் இந்த கருத்துக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, மோதி சமூக ஊடக தளத்தில் பதிலளித்தார், அதிபர் டிரம்பின் இந்த கருத்தை தான் பாராட்டுவதாகவும், அவருடன் முழுமையாக உடன்படுவதாகவும் எழுதினார்.

ஆனால் டிரம்ப் மற்றும் மோதியின் இந்த உடன்பாடு இரு நாடுகளின் உறவுகளில் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவுமா? ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் பெயர் வெளியிட விரும்பாத இந்திய அரசு அதிகாரி ஒருவர், “டிரம்பின் கருத்தை இந்தியா சாதகமாக எடுத்துக்கொள்கிறது, ஆனால் கடந்த காலத்தில் இருந்ததைப் போல நிலைமைகள் இருக்காது. மோதி எச்சரிக்கையுடன் டிரம்பிற்கு பதிலளித்தார். அவர் அவரை நண்பர் என்று குறிப்பிடவில்லை. டிரம்பின் கருத்துக்கள் உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதற்கான எந்த அறிகுறியையும் அளிக்கவில்லை,” என்று கூறினார்.

யுரேஷியா குழுமத்தின் இந்தியா பிரிவின் தலைவர் பர்மித் பால் சௌத்ரி, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம், “இரு நாடுகளின் உறவுகளில் பெரிய முன்னேற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை. டிரம்பின் ‘தி ஆர்ட் ஆஃப் தி டீல்’ என்ற புத்தகத்தில் இந்த தந்திரங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன. எந்த எதிரியும் அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொள்ளும் வகையில் அவர் ஒவ்வொரு உத்தியையும் பயன்படுத்துவார்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று கூறினார். இந்தியாவின் நலன்களுக்கு உகந்த எரிசக்தி ஒப்பந்தம் எதுவோ, அதுவே செய்யப்படும் என்று இந்திய நிதியமைச்சர் கூறினார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ஒரு இந்திய நிறுவனத்திற்கு எதிராக தடை விதித்துள்ளது.

ஜூலை மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் குஜராத்தில் உள்ள நாயரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான வாடினார் சுத்திகரிப்பு ஆலை மீது தடைகளை அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எரிசக்தித் துறையை குறிவைத்து அறிவித்த புதிய தடைகளில் இந்த குஜராத் சுத்திகரிப்பு ஆலையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் தனது செய்தியில், “ரஷ்ய எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெஃப்ட், இந்தியாவில் உள்ள நயரா எனர்ஜி லிமிடெட்டில் தனது பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்குப் பிறகு இந்த திட்டம் நின்றுபோகலாம்” என்று எழுதியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin