“நான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும், கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் என விரும்பினேன், அதனால்தான் என்னுடைய சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தேன்,” என கூறுகிறார் மியான்மரில் விவசாய தொழிலாளியாக உள்ள ஸேயா.
2021ல் மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போரால் விலைகள் கடுமையாக உயர்ந்தன. தன்னுடைய குடும்பத்துக்கு ஸேயாவால் சரிவர உணவளிக்க முடியவில்லை, மேலும் கடுமையான கடன் நெருக்கடியிலும் சிக்கியிருந்தார்.
அவர்கள் அனைவரும் ஸேயாவின் மாமியார் வீட்டில் வசித்துவருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான யங்கோனில் இருந்து சில மணிநேர பயணத்துக்குப் பின் மண் சாலையில், கூரை வேயப்பட்ட வீடுகள் வரிசைகட்டி நிற்கும் கிராமம் ஒன்றில் அவர்களுடைய வீடு உள்ளது.
தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஸேயாவின் உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது. தங்களுடைய ஒரு சிறுநீரகத்தை விற்ற உள்ளூர் மக்கள் குறித்து ஸேயாவுக்கு தெரிந்திருக்கிறது.
“அவர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தனர்,” என்கிறார் ஸேயா. அதனால், அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்தார்.
இந்தியாவுக்கு பயணித்து தங்களுடைய சிறுநீரகத்தை விற்றதாக, பிபிசி பர்மிய சேவையிடம் கூறிய அப்பகுதியை சேர்ந்த எட்டு பேரில் ஸேயாவும் ஒருவர்.
ஆசியா முழுவதும் சட்ட விரோதமாக உறுப்புகளை விற்பது பிரச்னையாக உள்ளது, ஸேயாவின் கதை அந்த வணிகம் எப்படி நடக்கிறது என்ற ஆழமான பார்வையை வழங்குகிறது.
சிறுநீரக வணிகத்துக்கான ஏற்பாடு
மியான்மர் மற்றும் இந்தியாவில் மனித உடல் உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்ட விரோதமானது. ஆனால், தன்னை “இடைத்தரகர்” என விவரித்துக்கொண்ட ஒருவரை தான் விரைவிலேயே கண்டுபிடித்ததாக ஸேயா கூறுகிறார்.
அந்த நபர், தனக்கு சில மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்ததாகவும் சில வாரங்கள் கழித்து தன்னுடைய சிறுநீரகத்தை வாங்குவதற்கு சாத்தியமான ஒருவர் (பர்மிய பெண்) உள்ளதாகவும், இருவரும் இந்தியாவுக்கு பயணித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியதாக ஸேயா தெரிவித்தார்.
இந்தியாவில் சிறுநீரகத்தை தானமாக கொடுப்பவரும் அதனை பெறுபவரும் நெருங்கிய உறவுமுறையாக இல்லையென்றால், இருவருக்கும் இடையே என்ன உறவு என்பதையும் தங்களுக்கு இதில் எவ்வித சுயநல நோக்கமும் இல்லை என்பதையும் இருவரும் விளக்க வேண்டும்.
மியான்மரில் அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்று இருக்கும். அந்த இடைத்தரகர் அதுபோன்றதொரு போலி ஆவணத்தை தயார் செய்ததாக கூறுகிறார் ஸேயா.
“சிறுநீரகத்தை பெறுபவரின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணத்தில், அந்த இடைத்தரகர் என்னுடைய பெயரை சேர்த்தார்,” என அவர் விளக்குகிறார்.
திருமணம் மூலம் ஏற்பட்ட உறவினர் ஒருவருக்கு தான் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதாக தோன்றும்படி அந்த இடைத்தரகர் செய்ததாக, ஸேயா கூறினார்.
“ரத்த சொந்தம் அல்லாத தூரத்து உறவினர் என்பது போன்று செய்தார்.”
பட மூலாதாரம், Getty Images
அதன்பின், தன் சிறுநீரகத்தை வாங்கவுள்ள நபரை பார்க்க யங்கோனுக்கு அந்த இடைத்தரகர் அழைத்துச் சென்றதாக கூறுகிறார்.
அங்கே, தன்னை ஒரு மருத்துவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு நபர், இன்னும் அதிகமான ஆவணங்கள் தொடர்பான பணிகளை முடித்தார். சிறுநீரகத்தை விற்பதிலிருந்து பின்வாங்கினால் கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என, தன்னை அந்நபர் எச்சரித்ததாக ஸேயா தெரிவித்தார்.
பிபிசி அந்நபரை தொடர்புகொண்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒருவருக்கு உடல் தகுதி உள்ளதா என பரிசோதிப்பதுதான் தன்னுடைய பணி என்றும், சிறுநீரகத்தை வழங்குபவர் மற்றும் பெறுபவர்களுக்கு இடையேயான உறவை சோதிப்பது அல்ல என்று அந்நபர் கூறினார்.
தனக்கு 7.5 கியாட் (மியான்மர் பணம்) கிடைக்கும் என கூறியதாக ஸேயா கூறுகிறார்.
அறுவை சிகிச்சைக்காக தான் வட இந்தியாவுக்கு சென்றதாகவும், அங்கே ஒரு பெரிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்தியாவில், வெளிநாட்டு குடிமக்கள் தொடர்புடைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அனைத்துக்கும், உள்ளூர் அரசாங்கம் அல்லது குறிப்பிட்ட மருத்துவமனையால் அமையப்பெற்ற அங்கீகாரக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வாயிலாக, நான்கு பேர் தன்னிடம் விசாரித்ததாக ஸேயா கூறுகிறார்.
“வலுக்கட்டாயமாக அல்லாமல், தாமாக முன்வந்து நான் சிறுநீரகத்தை தானமாக வழங்குகிறேனா என அவர்கள் கேட்டனர்,” என்கிறார் அவர்.
சிறுநீரகத்தை பெறுபவர் தன் உறவினர் என அவர்களிடம் கூறியதாக தெரிவிக்கும் ஸேயா, பின்னர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் கிடைத்ததாக கூறுகிறார்.
தான் சுயநினைவை இழப்பதற்கு முன்னர் தனக்கு மயக்க மருந்து அளிப்பதை மருத்துவர்கள் மேற்பார்வையிட்டதை ஸேயா நினைவில் வைத்துள்ளார்.
“அறுவை சிகிச்சைக்கு பின்னர், வலியின்று நகர முடியாததை தவிர பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை,” என கூறும் அவர், அதன்பின் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்ததாக குறிப்பிட்டார்.
‘போலி தாய்’
சிறுநீரகத்தை விற்ற மியோ-வின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியிடம் கூறுகையில், தானும் தனக்கு முன்பின் அறியாத ஒருவருக்கு உறவினராக நடித்ததாக தெரிவித்தார்.
“இடைத்தரகர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அதில் எழுதப்பட்டிருந்ததை நான் மனப்பாடம் செய்ய வேண்டும்,” எனக்கூறும் அவர், சிறுநீரகத்தை பெறும் நபர், தன்னுடைய உறவினர் ஒருவரை திருமணம் செய்தவர் என கூற வேண்டும் என தமக்கு கூறப்பட்டதாக தெரிவித்தார்.
“நான் சிறுநீரகத்தை விற்பதை சோதிக்கும் நபர், என்னுடைய அம்மாவையும் அழைத்தார். ஆனால் அந்த இடைத்தரகர் போனில் பேசுவதற்கு போலியாக ஒரு அம்மாவை ஏற்பாடு செய்தார்,” என்கிறார்.
”போன் அழைப்புக்கு பதிலளித்த பெண், தன்னுடைய அனுமதியின் பேரிலேயே நான் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதாக கூறினார்.”
ஸேயாவுக்கு வழங்கப்பட்டது போன்றே தனக்கும் தொகை தெரிவிக்கப்பட்டதாக மியோ வின் கூறுகிறார். ஆனால், “நன்கொடை” என விவரிக்கப்படும் அந்த தொகையிலிருந்து 10% பணத்தை இடைத்தரகருக்கு வழங்க வேண்டும் என்கிறார் மியோ வின்.
மியோ வின், ஸேயா இருவரும் அந்த தொகையை இடைத்தரகர்களுக்கு முன்கூட்டியே வழங்கியதாக தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை அரங்கத்துக்குள் நுழையும் போது தன் மனதில், “நான் ஏற்கெனவே பணத்தைப் பெற்றுவிட்டதால், நான் இதை செய்தாக வேண்டும்,” என்றுதான் இருந்ததாக கூறினார் மியோ வின்.
கடன் மற்றும் தன் மனைவியின் மருத்துவ செலவுகளுடன் தான் போராடியதாலேயே, “இந்த ஆபத்தான வழியை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததாகவும்” அவர் கூறினார்.
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியதால் அங்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. 2017-ம் ஆண்டில் கால் பங்கு மக்கள்தொகை வறுமையில் வாழ்ந்தனர், ஆனால், 2023-ல் மக்கள்தொகையில் பாதி பேர் வறுமையில் வாழ்வதாக ஐநாவின் வளர்ச்சி முகமை (UNDP) தெரிவித்துள்ளது.
தான் சிறுநீரகத்தை விற்பது சட்ட விரோதமானது என தன்னிடம் தரகர் கூறவில்லை என்கிறார் மியோ வின். “அவர் கூறியிருந்தால் நான் இதை செய்திருக்க மாட்டேன். சிறைக்கு சென்றுவிடுவோமோ என எனக்கு பயமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
பிபிசி நேர்காணல் செய்த அனைவருடைய தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கும் பொருட்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை வெளியிடவில்லை.
மியான்மரை சேர்ந்த, பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு நபர், பிபிசியிடம் கூறுகையில் இந்தியாவில் 10 பேர் சிறுநீரகங்களை வாங்கவோ அல்லது விற்கவோ தான் உதவியதாக கூறினார்.
மத்திய மியான்மரில் உள்ள மாண்டலேயில் உள்ள “ஏஜென்சி” ஒன்றுக்கு தான் மக்களை பரிந்துரைத்ததாக அவர் கூறினார், அந்த ஏஜென்சி அதற்கான ஏற்பாடுகளை செய்யும்.
“ஆனால், சிறுநீரகம் வழங்குபவர்கள் குறித்து கவலை வேண்டாம்,” என கூறுகிறார் அவர். “தங்கள் சிறுநீரகங்களை வழங்க வரிசையில் நிற்கும் நபர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது.”
முன்பின் தெரியாதவர்களை, திருமண உறவால் உறவினரானவர்கள் என காட்ட போலியாக ஆவணங்கள் தயார் செய்ததாக அவர் கூறினார். இப்படி உதவுவதற்கு அவர் பணம் ஏதும் பெறுவாரா என கேட்டதற்கு, அவர் பதில் அளிக்கவில்லை.
இந்தியாவில் கைதுகள்
2010-ல் இருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உலகம் முழுவதும் 50 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது, ஆண்டுதோறும் 150,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால், உலகளவில் தேவையான மாற்று உறுப்புகளில், 10% உறுப்புகள் மட்டுமே கிடைப்பதாகவும் அது கூறியுள்ளது.
மனித உடல் உறுப்புகளை வணிக நோக்கில் வாங்குவதோ, விற்பதோ கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் சட்ட விரோதமானது, ஆனால் அதை மதிப்பிடுவது கடினமானது. 2007ல் 5-10% உறுப்புகள் கள்ள சந்தையிலிருந்து வந்ததாகவும் ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
நேபாளம், பாகிஸ்தான், இந்தோனீசியா, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் உட்பட ஆசியா முழுவதும் சமீப ஆண்டுகளாக வறுமையால் சட்ட விரோத சிறுநீரக விற்பனை நடைபெற்று வருவது பதிவாகியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா நீண்ட காலமாக மருத்துவ நோக்கங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் முக்கிய நாடாக உள்ளதால், அங்கு சிறுநீரக விற்பனை அதிகரித்து வருவதாக கவலை எழுந்துள்ளது. ஊடக செய்திகள் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற காவல் துறை விசாரணையை அடுத்து இந்த கவலை எழுந்துள்ளது.
சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதில் தொடர்புடையவர்களாக இந்திய மருத்துவர் மற்றும் அவருடைய உதவியாளர் உட்பட ஏழு பேரை கைது செய்ததாக இந்திய காவல்துறை கடந்தாண்டு ஜூலை மாதம் தெரிவித்தது.
வங்கதேசத்தை சேர்ந்த ஏழை நபர்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்க போலியான ஆவணங்கள் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெற அந்த குழு ஏற்பாடு செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் விஜயா ராஜகுமாரி, சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள யதார்த் எனும் வேறொரு மருத்துவமனையின் ஆலோசனை மருத்துவராக இத்தகைய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவருடைய வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து பிபிசியிடம் கூறுகையில், “அனைத்து புகார்களும் அடிப்படை ஆதாரமற்றவை” என்றும், அங்கீகார குழுக்களால் ஒப்புதல் வழங்கப்படும் அறுவை சிகிச்சைகளையே மேற்கொண்டதாகவும் எப்போதும் சட்டபூர்வமாகவே செயல்பட்டதாகவும் கூறினார். அவருடைய ஜாமீன் உத்தரவின்படி, போலியாக ஆவணங்களை தயார் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை.
ஆலோசனை மருத்துவர்கள் மேற்கொள்வது உட்பட அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும், “கடுமையான விதிமுறைகளை பின்பற்றியும் சட்ட மற்றும் தார்மீக விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகவும்” யதார்த் மருத்துவமனை நிர்வாகம் பிபிசியிடம் தெரிவித்தது.
“வருங்காலத்தில் இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருக்க தங்கள் நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளோம்,” எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவருடைய கைதுக்கு பின்னர் கருத்து தெரிவித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ராஜகுமாரி மருத்துவமனை ஊழியர் அல்லாத ஒரு ஆலோசனை மருத்துவர் (சிகிச்சை வழங்கும் நோயாளிகளுக்கு மட்டும் கட்டணம் பெறும் மருத்துவர்) என்றும், அனைத்து விதமான மருத்துவ தொடர்புகளையும் அவரிடமிருந்து துண்டித்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
டாக்டர் ராஜகுமாரி தற்போது நீதிமன்றத்தில் எந்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளவில்லை.
‘வருத்தம் இல்லை’
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெளிநாட்டவர்கள் தொடர்புடைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் “அதிகரித்துவருவதாகவும்” எனவே உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கூறி மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய சட்டத்தின்படி, உறுப்புகளை தானம் செய்யவோ அல்லது பெறவோ விரும்பும் ஒரு வெளிநாட்டவர், தங்களுடைய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதில், தானமாக பெறுபவருக்கும் தானம் அளிப்பவருக்கும் இடையேயான உறவு என்ன என்பதை காண்பிக்க வேண்டும், இந்த தகவல் இந்தியாவில் உள்ள அவர்களின் நாட்டு தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஆகியவற்றை பிபிசி தொடர்புகொண்டது. மேலும், மியான்மர் ராணுவ அரசையும் தொடர்புகொண்டது. ஆனால், அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.
மியான்மரில் உள்ள பொது சுகாதார ஆர்வலர் டாக்டர் துரெய்ன் ஹ்லாயிங் வின் கூறுகையில், “சட்ட அமலாக்கம் திறம்பட செயல்படவில்லை.” என்கிறார்.
உறுப்புகளை தானமாக வழங்குபவர்கள், அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கு ஏற்படுவது, மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவது உட்பட அதன் ஆபத்துகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிகிச்சைக்குப் பின் முறையான கவனிப்பு வேண்டும் என்றும் அறிந்துகொள்ள வேன்டும் என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
அறுவை சிகிச்சைக்குப் பின் பல மாதங்கள் கழித்து ஸேயாவிடம் பிபிசி பேசியது.
“என்னால் கடனை அடைக்க முடிந்தது, சிறிது நிலம் வாங்க முடிந்தது,” என்கிறார் அவர்.
தன்னால் வீடு கட்ட முடியவில்லை என்றும், அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருவதால், தன்னால் வீடு கட்ட முடியவில்லை என்றும் கூறினார். தான் முதுகு வலியால் அவதிப்படுவதாகவும் அவர் கூறினார்.
“நான் மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்க வேண்டும். மீண்டும் உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டால், அதை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.
சிறுநீரகத்தை பெற்ற நபரிடம் சிறிது காலம் தொடர்பில் இருந்ததாகவும் தன்னுடைய சிறுநீரகத்தால் நலமுடன் இருப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
பெயர் தெரிவிக்க விரும்பாத அவர் பிபிசியிடம் கூறுகையில், தான் 100 கியாட் மொத்தமாக வழங்கியதாக குறிப்பிட்டார். ஆவணங்கள் போலியானவை என்பதை அவர் மறுக்கிறார், ஸேயா தன் உறவினர் என்றே குறிப்பிடுகிறார்.
அறுவை சிகிச்சைக்கு ஆறு மாதங்கள் கழித்து பிபிசியிடம் பேசிய மியோ வின், தன்னுடைய கடன்களில் பெருமளவை திருப்பி செலுத்திவிட்டதாகவும், ஆனாலும் மொத்தமாக செலுத்தவில்லை என்றும் கூறினார்.
“எனக்கு எந்த வேலையும் இல்லை, பணமும் சுத்தமாக இல்லை,” என்கிறார் அவர். அறுவை சிகிச்சைக்குப் பின் தனக்கு வயிற்று வலி ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
தனக்கு இதனால் எந்த வருத்தமும் இல்லை எனக்கூறும் அவர், “இப்படி செய்ய வேண்டாம் என நான் கூறுகிறேன், இது நல்லதல்ல.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு