பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுடன் அந்நாட்டில் ‘எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார்.
அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் ‘அதிக எண்ணெய் வளங்களை மேம்படுத்தும்.
புதன்கிழமை, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரிகளை அறிவித்தார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் மீது அபராதம் விதிப்பது பற்றியும் அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.
இந்தியாவின் மீதான வரிகள் மற்றும் பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தனக்குத் தானே தோல்வியை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.
மறுபுறம் தற்போது டிரம்பின் முன்னுரிமை வர்த்தகமே தவிர பாரம்பரிய பாதுகாப்பு கூட்டாண்மை அல்ல என கேட்வே ஹவுஸ் ஆஃப் இந்தியா எனும் சிந்தனை குழுவின் ஆய்வாளர் நயனிமா பாசு, நம்புகிறார்.
பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images
இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை – டிரம்ப்
இதற்கிடையே இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழன் அன்று கூறியுள்ளார்.
முன்னதாக புதன்கிழமையன்று, ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்கிறது என்பது குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் இருவரும் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரங்களை ஒன்றாக மூழ்கடிக்க விரும்பினால், செய்யட்டும். எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை” என வியாழனன்று, டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டார்.
“இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வர்த்தகம் செய்துள்ளோம். ஏனெனில் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. அதேபோல், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகம் இல்லை. ” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விஷயமும் பிரிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தியா அந்த குழுவில் இருக்கிறது. இது டாலரின் மீதான தாக்குதல். டாலரை யாரும் தாக்க அனுமதிக்க மாட்டோம்.”என்று கூறினார்.
“இது பகுதி பிரிக்ஸ் குழுவையும், வர்த்தக பற்றாக்குறையையும் பற்றியது. அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோதி எனது நண்பர். ஆனால் இந்தியா எங்களுடன் அதிக வர்த்தகம் செய்யவில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய பொருட்கள் விற்கிறார்கள். ஆனால், அவர்கள் விதிக்கும் வரிகள் (அமெரிக்க பொருட்கள் இந்திய இறக்குமதிக்கு) மிக அதிகளவில் உள்ளன. இப்போது இந்தியா இந்த வரிகளை பெரிதும் குறைக்க தயாராக இருக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” என்றும் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
‘ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்’
இந்நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பாத்திரத்தை வகித்ததற்காக அதிபர் டிரம்ப்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என எக்ஸ் தளத்தில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதிவிட்டார்.
ஷாபாஸ் ஷெரீப்பின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்றிரவு (புதன்கிழமை) வாஷிங்டனில் எட்டப்பட்டது.
“இந்த வரலாற்று ஒப்பந்தம் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும், இதனால் எங்கள் நீடித்த கூட்டுறவின் நோக்கம் வரவிருக்கும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும்”என அவரது பதிவு குறிப்பிடுகிறது.
முன்னதாக, பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் பாகிஸ்தானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் கீழ் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து அங்குள்ள மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்தும்”என ட்ரூத் சோசியலில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த கூட்டாண்மைக்கு தலைமை தாங்கும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்” என்றும் அவரது பதிவு கூறியது.
பட மூலாதாரம், Getty Images
நிபுணர்கள் கூறுவது என்ன?
டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தாலும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பார்வையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொருத்தமானதாக இல்லை.
“அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதை காரணம் காட்டி அதன் மீது வரிகளை விதித்துவிட்டு, பின்னர் தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு கைகொடுப்பது ஒரு ‘தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக்கொள்ளும்’ நடவடிக்கையாகும். வரும் காலங்களில், அமெரிக்க இராஜதந்திரம் இதைத் தானாகவே உணரலாம்,” என டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடடீஸில் பேராசிரியராக இருக்கும் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட இந்த எண்ணெய் ஒப்பந்தம் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம், ஆனால் இது திடீரென நடந்துவிடவில்லை என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் டிரம்பை சந்தித்தபோது, அந்த சந்திப்பு ஆபரேஷன் சிந்தூரை பற்றியதாக இருக்கக்கூடும் என இந்தியா கருதியது என சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸின் ஆய்வாளர் நயனிமா பாசு சொல்கிறார்.
“உண்மையில் இது பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விவாதமாக இருந்தது. அமெரிக்காவுக்கு தலைவலியாக இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பிடிக்கிறது என்பதால் ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது, உண்மையில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவுகள் ஊடகங்களில் காட்டப்பட்ட அளவுக்கு மோசமாக இல்லை.”
இந்தியா-அமெரிக்க உறவுகளில் நெருக்கம் இருந்தபோதிலும், பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்டபோது, டிரம்பின் தலைமையில் அமெரிக்கா இப்போது வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என நயனிமா பாசு கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, டிரம்ப் ‘போர்’ செய்வதற்குப் பதிலாக ‘வர்த்தகப் போரை’ விரும்புகிறார் மற்றும் தனது சொந்த விதிமுறைகளின்படி எவ்வளவு நாடுகளுடன் முடியுமோ அவ்வளவு நாடுகளுடன் வணிகம் செய்ய விரும்புகிறார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பெரும் எண்ணெய் வளங்கள் உள்ளன, அமெரிக்கா இதை பாகிஸ்தானுடன் இணைந்து பயன்படுத்த விரும்புகிறது என்கிறார் பாசு.
அவரைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ஒரு மினி ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு