பட மூலாதாரம், Reuters
நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது போன்ற சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால், ரஷ்யா மீது கடுமையான தடை விதிக்க தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில், ‘நேட்டோ நாடுகள் இதற்கு சம்மதம் தெரிவித்தால் ரஷ்யா மீது பெரும் தடைகளை விதிக்க தயார்’ என பதிவிட்டுள்ளார்.
மாஸ்கோ மீது அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். ஆனால் டிரம்பின் கால அவகாசம் மற்றும் தடை குறித்த அச்சுறுத்தல்களை புதின் நிராகரித்து வரும் நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிர்ச்சியூட்டுவதாக விவரித்தார். நேட்டோ சீனா மீது 50 முதல் 100% வரை வரிகளை விதிக்க வேண்டும் என்றும், அது ரஷ்யா மீதான அதன் வலுவான கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தும் என்றும் கூறினார்.
நேட்டோ நாடுகளுக்கு கடிதம்
பட மூலாதாரம், Getty Images
“நீங்கள் தயார் என்றால் நான் தடை விதிக்க தயார். எப்போது என்று மட்டும் சொல்லுங்கள்” என நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் “சிலர் ரஷ்ய எண்ணெய் வாங்குவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது ரஷ்யா மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும், பேரம் பேசும் அதிகாரத்தையும் பலவீனப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிறகு ரஷ்யாவின் எரிசக்தி கொள்முதலை நிறுத்துவதும், சீனா மீது அதிக வரிகளை விதிப்பதும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றும், இது மோதலை முடிவுக்குக் கொண்டுவர பெரிதும் உதவும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் இருந்தே ஐரோப்பிய நாடுகள் எரிசக்திக்காக ரஷ்யாவை சார்ந்திர்ப்பது பெருமளவில் சரிந்தது.
2022ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் 45% எரிவாயுவை ரஷ்யாவிடம் இருந்துதான் பெற்றது. இது இந்தாண்டில் 13% ஆக குறைந்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை போதாது என டிரம்பின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
கடந்த புதன்கிழமை அன்று போலந்து மீது ரஷ்யா 12 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நேட்டோ நாடுகள், ரஷ்யா இடையே பதற்றம் அதிகரித்த சமயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என போலந்து கூறும் நிலையில், இது திட்டமிட்ட தாக்குதல் இல்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
கிழக்குப் பகுதியில் கூட்டணியை வலுப்படுத்த டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நேட்டோவின் புதிய திட்டத்தில் இணைந்துள்ளன, மேலும் இது ராணுவ சொத்துக்களை கிழக்கு நோக்கி நகர்த்தும்.
கடந்த வாரம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது தொடர்பாக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ABC செய்தியில் நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவிடம் இருந்து “எந்த வகையான எரிசக்தி வாங்குவதையும் நாம் நிறுத்த வேண்டும். மேலும் அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் கைவிட்ட வேண்டும். அவர்களை தடுக்க வேண்டும் என நினைத்தால் நாம் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளக் கூடாது” எனக் கூறினார்.
2022ஆம் ஆண்டு முதல் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக ஐரோப்பிய நாடுகள் 182 பில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை யுக்ரேன் படையெடுப்புக்கான நிதியாக அளித்திருப்பதாக எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை கூறுகிறது.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் 2028ஆம் ஆண்டுக்குள் கொள்முதல்களை படிப்படியாக நிறுத்துவதாக உறுதியளித்திருந்தது. இதற்கு பதிலாக தங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதன் மூலம் அமெரிக்கா இதை விரைவுப்படுத்த விரும்புகிறது.
டிரம்பின் அறிவுறுத்தல் நேட்டோவிற்கு தானே தவிர ஐரோப்பிய நாடுகளுக்கு அல்ல. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாகவும், ரஷ்யாவிடம் நெருக்கமான உறவை தொடரும் நாடாகவும் திகழும் துருக்கியும் இதில் அடக்கம்.
ரஷ்யாவிடம் இருந்து பொர்ட்களை வாங்க துருக்கியை தடுப்பது சற்று கடினமாக காரியம்தான்.
போர் தொடங்கியதில் இருந்து யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்குப் பிறகு, செப்டம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தினார்.
ரஷ்யாவை தண்டிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஆம் என பதில் அளித்தார். இருப்பினும் எந்த தகவலும் அளிக்கவில்லை.
சீனா கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் இந்த கூற்றுக்குப் பிறகு, போர் மற்றும் தடை குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கருத்து தெரிவித்துள்ளார். ஸ்லோவேனியாவின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டான்யா ஃப்யான் உடனான சந்திப்புக்குப் பிறகு, ‘சீனா போரில் பங்கேற்கவும் செய்யாது. போருக்கு திட்டமும் தீட்டாது’ எனக் கூறியதாக க்ளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் நோக்கங்கள் முழுக்க முழுக்க உண்மையானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதாக அவர் கூறினார். மேலும் சீனா அனைத்தையும் மீண்டும் தொடங்கவோ அல்லது மற்ற நாடுகளிடம் இருந்து கைப்பற்றவோ நினைக்கவில்லை என்றார். மாறாக அனைத்து பொறுப்புள்ள நாடுகளுடனும் இணைந்து சீர்திருத்தங்கள் மூலம் உலகளாவிய நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் தற்போதைய நோக்கம் என தெரிவித்தார்.
ஐ.நா. சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், பன்முகத்தன்மையை செயல்படுத்துவதற்கும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் சீனா உறுதியுடன் உள்ளது என வாங் யீ வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில் சீனாவின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா மீதான டிரம்பின் கடுமையான நிலைப்பாடு:
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடம் இருந்து சீனா மற்றும் இந்தியாதான் அதிகளவில் எரிசக்தி வாங்குகின்றன.
சமீபத்தில் இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது. யுக்ரேன் போருக்கு முக்கிய காரணமாக திகழும் ரஷ்யாவிடம் பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்காக 25% ஆபராதமும் இதில் அடங்கும்.
இது யுக்ரேன் போருக்காக ரஷ்யாவிற்கு நிதியுதவி அளிக்கும் வேலை என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது காரணமற்ற செயல் என அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இந்தியா தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு கடந்த சில நாட்களாக பதற்றத்தில் உள்ளது.
எனினும் கடந்த 10ஆம் தேதி பிரதமர் நரேந்தினர மோதியை தனது நண்பன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த கூற்று, இந்தியா மீதான அவரது இலகுவான மனநிலைக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் என பிரதமர் மோதியும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்கடுத்து வரும் செய்தி இதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் முறையிட்டதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.
யுக்ரேன் மீதான போரை நிறுத்தும் முயற்சியாக டிரம்ப் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு