பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவரது வருகை அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவரும் என அனைவரும் நம்பினர். அந்த மாற்றங்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன எனலாம்.
சர்வதேச உறவுகள் என்பது நீண்ட காலத்திற்கானவை. அதாவது கொள்கைகளும், திட்டங்களும் ஒரே நாளிலோ, மாதத்திலோ மாறாது, என்று பொதுவாக கருதப்படுகிறது.
ஆனால் கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் சர்வதேச அளவில் பல மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன. இவற்றை புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் கண்ணோட்டத்தில், பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, கத்தார் மன்னர் ஷேக் தமின் பின் ஹமத் அல்-தானி இந்தியாவிற்கு வந்தார்.
அமெரிக்காவுடன் நல்லுறவை பராமரிக்கும் அதேநேரத்தில் ரஷ்யா மற்றும் இரான் போன்ற நாடுகளுடனான உறவிலும் சமநிலையை இந்தியாவால் பேண முடியுமா?
இந்த சமன்பாட்டில் கத்தார் ஏன் இந்தியாவிற்கு முக்கியமானது? இந்தியாவை அமெரிக்கா – அரபு நாடுகளுக்கு இடையே டிரம்பின் முடிவுகள் சிக்க வைத்துவிட்டதா? டிரம்பின் நிலைப்பாட்டால் நேட்டோ மற்றும் ஐரோப்பா கவலை கொள்வது ஏன்? டிரம்புடனான உறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?
பிபிசி ஹிந்தியின் தி லென்ஸ் வாராந்திர நிகழ்ச்சியில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடகவியல் இயக்குநர் முகேஷ் சர்மா இந்த விஷயங்களையெல்லாம் விவாதித்தார்.
இதில் மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் நிறுவனர் சுபதா செளத்ரி, அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக் கழக பேராசிரியர் முக்தாதர் கான், அரபு நியூஸ் மேலாண்மை இயக்குநர் சிராஜ் வஹாப் ஆகியோர் பங்கேற்றனர்.
கத்தாருடனான இந்தியாவின் உறவு பாதிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 17ஆம் தேதி இரவு கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி இந்தியாவிற்கு வந்த போது அவரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோதி புது டெல்லி விமான நிலையத்திற்கே சென்றார்.
இந்தியா மற்றும் கத்தார் இடையே பாரம்பரியமாக ஆழமான உறவுகள் இருந்திருக்கின்றன. இரு நாடுகளிடையேயான தூதரக உறவுகள் 1970-களில் தொடங்கின.
எல்என்ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட எரிவாயு, ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், உரம், பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் போன்றவற்றை கத்தார் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணம் இந்தியா மற்றும் கத்தார் என இரண்டு நாடுகளுக்குமே சவாலாக மாறியுள்ளது.
இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கு உதவும் வகையில் இந்தியா இனி அமெரிக்காவிடம் அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா மாறும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தால், அமெரிக்காவுடன் எப்படி நல்லுறவை பராமரிக்க முடியும்? ஒருவேளை இயற்கை எரிவாயு வாங்க இந்தியா, அமெரிக்காவின் பக்கம் திரும்பினால், இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவின் மீதான தாக்கம் என்னவாக இருக்கும்?
இதுகுறித்து அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழக பேராசிரியார் முக்தாதர் கான்,”கத்தாரில் உளவு பார்த்ததாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் நரேந்திர மோதியின் தனிப்பட்ட ராஜ தந்திரத்தால் கத்தார் அவர்களை திருப்பி அனுப்பியதாக இந்தியாவில் பேசப்பட்டது. ஆனால் 78 பில்லியன் டாலர் அளவு இயற்கை எரிவாயுவை கத்தாரிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் இந்தியா கையெழுத்திட்டிருந்தது.” என்றார்.
“இப்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து இயற்கை எரிவாயுவை வாங்கினால், தங்களுடனான ஒப்பந்தம் எந்த வகையில் பாதிக்கப்படும் என கத்தார் கவலைப்படக் கூடும்,” என்கிறார் அவர்.
முக்தாதர் கான் ,”தங்களுடனான ஒப்பந்தம் தொடர்வதை உறுதி செய்து கொள்ளவே ஷேக் அல் தானி டெல்லி வந்தார் என நான் நினைக்கிறேன்” என்கிறார்.
எல்என்ஜி வழங்குவதில் இந்தியாவுக்கு கத்தார் ஒரு முக்கியமான நாடு என்கிறார் மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் நிறுவனர் சுபதா செளத்ரி.
இந்த விஷயத்தில், அரபு நியூஸின் மேலாண்மை இயக்குநர் சிராஜ் வஹாப்,”ஒவ்வொரு நாடும், அனைத்து நாடுகளுடன் நல்லுறவை பராமரிக்க விரும்பும் உலகில் நாம் இருக்கிறோம். இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவை பேண விரும்புகிறது. நாம் இப்போது முக்கியமான, தீர்க்கமான கட்டத்தில் நுழைகிறோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“வரும் நாட்களில் டிரம்பின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது என்பதால் அவரைப் பற்றி எதுவும் சொல்வது கடினமானது. எதிர்காலத்தில் மேலும் பல பயன்களைப் பெற இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவை பராமரிக்க முயற்சி செய்கிறது.”என்கிறார் அவர்.
“கத்தார் அதிக அளவில் எல்என்ஜி வழங்கும் நாடு என்றால், இந்தியா அதை வாங்கும் முக்கிய நாடு” என்பது அவரது கருத்து.
டிரம்ப் உலகுக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் அண்மையில் எடுத்த இரண்டு முடிவுகள் குறித்து உலகம் முழுவதும் சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவது ரஷ்ய -யுக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினிடம் டிரம்ப் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார். இரண்டாவது காஸா நெருக்கடியை சமாளிக்க காஸாவின் மொத்த மக்களையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார்.
புதினிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பது ஐரோப்பாவில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. காஸா மக்களை வேறு நாடுகளுக்கு மாற்றும் திட்டம் மத்திய கிழக்கு நாடுகளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
பதவியேற்றது முதலே டிரம்ப் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல முடிவுகளை எடுத்துள்ளார். ஆனால் தேர்தலின் போதே “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” என்ற தனது கொள்கையை அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால் இப்போது, ஒவ்வொரு நாளும் பெரிய முடிவுகளை எடுத்த பிறகு அவர் இந்த உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன என்ற கேள்வி எழுகிறது.
இதைப் பற்றி அமெரிக்காவின் டெலாவர் பலகலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் முக்தாதர் கான்,” கடந்த முப்பத்து-நாற்பது ஆண்டுகளில் சர்வதேச கட்டமைப்புகளுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவை மற்ற நாடுகள் அநியாய ஆதாயம் பெறுவதற்கு பயன்படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு 1990 முதல் சீனா வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவில் தொழில்மயமாக்கல் குன்றியுள்ளது, அமெரிக்கா அனைவருக்கும் உதவியது, ஆனால் மற்ற நாடுகள் அதனால் ஆதாயம் மட்டுமே பெற்றுக்கொண்டன என டிரம்ப் நம்புகிறார்.” என்று கூறினார்.
மேலும்,”சீனா மற்றும் அமெரிக்காவின் உள் கட்டமைப்பை ஒப்பிட்டால், தற்போது அமெரிக்கா பின்தங்கியிருப்பது போல் தோன்றுகிறது.”
மேலும் “ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா பங்களிக்கிறது. இதன் காரணமாக, ஐரோப்பா தனது பாதுகாப்பிற்கு இரண்டு விழுக்காடுக்கும் குறைவாகவே செலவு செய்துவிட்டு எஞ்சிய பணத்தை அதன் வளர்ச்சிக்கும் நலத்திட்டங்களுக்கும் செலவிடுகிறது. அங்கு இலவச கல்வியும், இலவச சுகாதார சேவைகளும் உள்ளன. இவை அமெரிக்காவில் இல்லை.” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“டிரம்ப்பின் அணுகுமுறை ராஜ ரீக அடிப்படையில் சரியற்றதாக இருக்கலாம். ஆனால் அவரது கொள்கைகள் தீவிரமானவை. உலகம் அவற்றை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர்.
இதைப்பற்றி மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் நிறுவனர் சுபதா செளத்ரி, “வருங்காலத்தில் நிகழவுள்ள சீர்குலைவு செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும்” என்கிறார்.
“தொழில்நுட்பம், கண்காணிப்பு மற்றும் சைபர் போர் போன்றவற்றை பார்த்தால், அமெரிக்கா வெகுவாக முன்னிலையில் உள்ளது என்பதால் அதை எதிர்ப்பது சற்று கடினமானது. அமெரிக்க பொருளாதாரத்தை சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் பொருளாதாரங்களுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் மொத்த உள்நாடு உற்பத்திதான் மிக அதிகம்.”
“நாம் மத்திய கிழக்கு குறித்து பேசினால், டொனால்ட் டிரம்ப் குறித்து நிறைய குழப்பம் இருக்கிறது,” என்கிறார் அரபு நியூஸ் மேலாண்மை இயக்குநர் சிராஜ் வஹாப்.
“ஒவ்வொரு நாட்டுடனும் அமெரிக்காவின் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய கிழக்கில் அடிக்கடி சொல்லப்படுகிறது. தற்போது டிரம்பின் செல்வாக்கு அதன் உச்சத்தில் உள்ளது. ஆனால் அவரது செல்வாக்கு நீண்டகாலம் நீடிக்காது.” என்கிறார் அவர்.
மோதி-டிரம்ப் சந்திப்பில் மறைமுக செய்தி என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திப்பதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன் அனைத்து நாடுகள் மீதும் பதில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
பிப்ரவரி 13, வியாழக்கிழமை பதில் வரி விதிக்க திட்டமிடும் ஓர் ஆவணத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முக்தாதர் கான்,”நரேந்திர மோதி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது சிறு விஷயங்களுக்கு கூட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக பிரான்ஸில் அதிபர் மக்ரோன் அவரை கெளரவித்தார் அல்லது ஷேக் அல்-தானியை நரேந்திர மோதி விமான நிலையத்த்திலேயே வரவேற்றார். இது போன்ற சிறு நிகழ்ச்சிகளுக்கு கூட கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது” என்கிறார்.
“இந்திய அரசு டொனால்ட் டிரம்ப் குறித்து சிறிது பதற்றமடைந்திருப்பதாக நினைக்கிறேன். மோதி அமெரிக்காவிற்கு செல்லும் முன்பே, டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார்,” என்கிறார் அவர்.
“டொனால்ட் டிரம்ப் மற்றும் நரேந்திர மோதி இடையேயான சந்திப்பில் டிரம்ப் மோதியை சிறந்த தலைவர் என கூறியது நல்ல விஷயம். ஆனால், இந்த சந்திப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் டிரம்ப் பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார். உதாரணமாக அவர் அனைத்து நாடுகள் மீதும் பதில் வரியை விதித்திருந்தார். இந்தியாவிற்கு எந்த விலக்கும் அவர் அளிகவில்லை” என்கிறார்.
டிரம்ப் அணுகுமுறையால் திணறும் யுக்ரேன்
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் யுத்தம் குறித்தும், ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் போராட்டத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்தும் டொனால்ட் டிரம்பின் பார்வை குறித்தும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்திருந்தால், அவற்றிற்கு கடந்த புதன்கிழமை டிரம்ப் தெளிவான முடிவு கட்டியிருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் யுக்ரேனின் முயற்சிகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தது.
ஆனால் இப்போது யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒரு ‘சர்வாதிகாரி’ என்று விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளார்.
போரை தொடங்கியதாக ரஷ்யா மீது அல்லாமல் யுக்ரேன் மீது டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்பின் இந்த நிலைப்பாடு யுக்ரேனுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முன்னாள் அதிபர் ஜோ பைடன் காலத்தில் முன்வைத்தது போன்ற நிபந்தனைகளை தற்போது விதிப்பது யுக்ரேனுக்கு சுலபமாக இருக்கப்போவதில்லை.
இது குறித்து முக்தாதர் கான் ,” யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் 2024-ல் முடிந்தது. தேர்தலே நடத்தாமல் நீங்கள் அரசை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என டிரம்ப் கூறினார். ஆனால் போரின் போது தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று யுக்ரேனின் அரசமைப்பு கூறுகிறது” என்று கூறுகிறார்.
மேலும்,” ஐரோப்பிய நாடுகள் ஜெலன்ஸ்கி சொல்வது சரி, டிரம்ப் சொல்வது தவறு என்கின்றன. அடிப்படையில் ஜெலன்ஸ்கியின் தனிப்பட்ட நிலையை வலுவிழக்கச் செய்து பேச்சுவார்த்தையில் சில சலுகைகளை தரலாம் என டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்கிறார்.”
கான் சொல்கிறார்,”யுத்தம் உடனடியாக முடிவுக்கு வந்து ரஷ்யாவுடனான உறவு சீரடைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. காரணம் இந்த யுத்தத்தின் செலவை ஏற்றுக் கொண்டிருப்பது அமெரிக்காதான்.”
“ஜெலன்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். யுத்தத்திற்காக ஐரோப்பா கொடுத்த பணம் எதுவாக இருந்தாலும் அதை அவர்கள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அமெரிக்கா அளித்த 300 பில்லியன் டாலர்கள் திருப்பியளிக்கப்படாது எனவும் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“நாம் இந்தியாவை எடுத்துக்கொண்டால், சீனா இந்தியாவை தாக்கினால், அமெரிக்கா இந்தியாவிற்கு உதவும், ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் யுத்தம் ஏற்பட்டால், இந்தியா ஒருவேளை அதில் பங்கேற்காது. இதையே டிரம்ப் சரிசெய்ய முயற்சிக்கிறார்.” என்று முக்தாதர் கான் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு