பட மூலாதாரம், Manan VATSYAYANA / AFP via Getty Images
கட்டுரை தகவல்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 ஆட்டத்தை இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ஆமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் 187 என்ற ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா 111 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 4 வெற்றிகளோடு நம்பிக்கையாக இந்த ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலுமே பல தவறுகளைச் செய்தது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கம் கொடுத்திருந்தும், மிடில் ஓவர்களில் அதை இந்தியாவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதேபோல் இந்தியாவின் பேட்டிங் மீண்டும் ஒருமுறை சரிவைச் சந்தித்தது.
டாப் ஆர்டர் பேட்டர்கள் மறுபடியும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார்கள். மிடில் ஆர்டரிலும் சரியான பார்ட்னர்ஷிப்கள் அமையவில்லை. சொல்லப்போனால், இந்தியா பேட்டிங் செய்தபோது தென்னாப்பிரிக்க அணி முழுமையாக ஆதிக்கம் செய்துவிட்டது.
மிடில் ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய மில்லர் – பிரெவிஸ்
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும் அந்த அணியின் டாப் ஆர்டருக்கு கடும் சவால் கொடுத்தனர்.
இரண்டாவது ஓவரில் டி காக்கை பும்ரா வெளியேற்ற, அடுத்த ஓவரில் மார்க்ரமை ஆட்டமிழக்கச் செய்தார் அர்ஷ்தீப் சிங். நான்காவது ஓவரில் இன்னொரு விக்கெட் எடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்தார் பும்ரா. ‘ஸ்லோ பால்’ மூலம் அவர் ரயன் ரிக்கில்டனை அவுட்டாக்கினார். அதனால் 4 ஓவர்கள் முடிவில் 20/3 எனத் தடுமாறியது தென்னாப்பிரிக்கா.
டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவால் பிரெவிஸ் – டேவிட் மில்லர் இருவரும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள்.
நிறைய விக்கெட்டுகள் வீழ்ந்த காரணத்தால் அவர்கள் டிஃபன்ஸிவாக ஆட்டத்தை அணுகவில்லை. ஓவருக்கு ஓவர் பவுண்டரிகள் அடித்தார்கள். பந்துகளை வீணடிக்காமல் ஸ்டிரைக்கை ரொடேட் செய்தனர். அதனால் அந்த அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது.
குறிப்பாக ஆபத்தான பௌலர் என்று கருதப்பட்டிருந்த வருண் சக்கரவர்த்தியை இருவருமே அதிரடியாக அடித்து ஆடினார்கள். முதல் 3 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்திருந்தார் வருண். அதனால் அனைத்து இந்திய பௌலர்களுக்குமே நெருக்கடி அதிகரித்தது.
பட மூலாதாரம், Matt Roberts-ICC/ICC via Getty Images
படக்குறிப்பு, மிடில் ஓவர்களில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார் டேவிட் மில்லர்
வருண் மட்டுமல்லாது ஹர்திக், துபே, வாஷிங்டன் என தொடர்ந்து ஒவ்வொருவர் பந்துவீச்சையும் அவர்கள் விளாச, 11.1 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 100 ரன்களை எட்டியது. டேவிட் மில்லர் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
போட்டிக்குப் பின்பு பேசிய ஆட்ட நாயகன் மில்லர் இந்த ஆட்டத்தை அணுகிய விதம் பற்றிப் பேசியிருந்தார். “இந்த மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஸ்கொயர் திசையில் ஆடாமல், அதிகமாக நேராக அடிக்கப் பார்த்தோம்” என்று அவர் கூறியிருந்தார். அவரும் பிரெவிஸும் ஆடிய ஆட்டம் அப்படித்தான் இருந்தது. இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் அடித்த ரன்கள் – 108 (மில்லர் – 63, பிரெவிஸ் – 45). அதில், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள் படி அவர்கள் இருவருமே தலா 8 ரன்கள் மட்டுமே விக்கெட்டுக்கு ஸ்கொயராக எடுத்தனர். மில்லர் 19 ரன்களையும், பிரெவிஸ் 27 ரன்களையும் ‘V’ எனப்படும் விக்கெட்டுக்கு நேரான பகுதியில் தான் அடித்தனர்.
ஆமதாபாத்தை ஹோம் கிரவுண்டாகக் கொண்ட குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் டேவிட் மில்லர் 3 ஆண்டுகள் ஆடியிருந்தார். இந்த மைதானத்தின் தன்மையைப் பற்றிய அவரது புரிதல் அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
பட மூலாதாரம், Manan VATSYAYANA / AFP via Getty Images
படக்குறிப்பு, நான்காவது விக்கெட்டுக்கு மில்லர் – பிரெவிஸ் பார்ட்னர்ஷிப் 97 ரன்கள் சேர்த்தது
இந்தியாவின் கம்பேக்கும், ஸ்டப்ஸ் கொடுத்த நல்ல முடிவும்
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரெவிஸ் துபே பந்துவீச்சை தூக்கி அடிக்க அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். பிரெவிஸ் – மில்லர் கூட்டணி 4 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்தது. 13-வது ஓவரில் பிரெவிஸ் அவுட்டான பிறகு தென்னாப்பிரிக்காவின் ரன் விகிதம் மெல்ல குறையத் தொடங்கியது. மில்லர் 63 ரன்களில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அந்த இரண்டு பேட்டர்களும் அவுட்டான பிறகு தென்னாப்பிரிக்காவால் அதே வேகத்தில் அடிக்க முடியவில்லை. ஒரு முணையில் ஸ்டப்ஸ் ஆடினாலும், மார்கோ யான்சன், கார்பின் பாஷ் போன்ற வீரர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் அவுட்டாகி வெளியேறினார்கள். டெத் ஓவர்களிலும் அர்ஷ்தீப், பும்ரா இருவரும் தென்னாப்பிரிக்க பேட்டர்களுக்கு சவாலாக விளங்கினார்கள்.
4 ஓவர்கள் வீடிய அர்ஷ்தீப் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ராவோ 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ரன் விகிதம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், 20-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் விளாசினார் ஸ்டப்ஸ். அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட, தென்னாப்பிரிக்க அணி 187/7 என்ற நிலையில் தங்கள் இன்னிங்ஸை முடித்தது.
மீண்டும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்
பட மூலாதாரம், Manan VATSYAYANA / AFP via Getty Images
படக்குறிப்பு, தொடர்ந்து நான்காவது போட்டியாக இந்திய ஓப்பனர் ஒருவர் டக் அவுட் ஆகியிருக்கிறார்
இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சில் இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் 3 பந்துகளையும் டாட் பால்களாக ஆடிய அவர், நான்காவது பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு எட்ஜ் ஆகி கேட்சானார். கடைசி 4 போட்டிகளிலுமே இஷான் ஆஃப் ஸ்பின்னர்களுக்கே ஆட்டமிழந்திருக்கிறார். மேலும், கடைசி 4 போட்டிகளிலும் ஒரு இந்திய ஓப்பனர் டக் அவுட் ஆகியிருக்கிறார்.
அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அபிஷேக் ஷர்மா பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் அடித்த முதல் ரன் அது.
ஆனால், இரண்டாவது ஓவரில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. மார்கோ யான்சன் வீசிய முதல் பந்தையே திலக் வர்மா இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து எட்ஜாகி கீப்பர் டி காக் வசம் கேட்சானது. அதன்பிறகு அபிஷேக், சூர்யகுமார் யாதவ் இருவரும் சில பவுண்டரிகள் அடித்தாலும், ஐந்தாவது ஓவரில் யான்சன் இன்னொரு விக்கெட்டை வீழ்த்தினார். அவர் வீசிய ‘ஸ்லோ பாலை’ அபிஷேக் தூக்கியடிக்க, சுமார் 20 மீட்டர் தூரம் பின்னால் ஓடி அதை கேட்ச் பிடித்தார் கார்பின் பாஷ்.
ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி பவர்பிளேவை 31/3 என முடித்தது.
நெருக்கடி ஏற்படுத்திய தென்னாப்பிரிக்க பௌலர்கள்
பட மூலாதாரம், Surjeet Yadav-ICC/ICC via Getty Images
படக்குறிப்பு, தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி இந்த மிகப் பெரிய தோல்வியால் – 3.800 என்ற ரன்ரேட் பெற்றிருக்கிறது
தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவருமே தொடர்ந்து நெருக்கடி தரும் வகையில் பந்துவீசினார்கள். குறிப்பாக யான்சன் மற்றும் லுங்கி எங்கிடி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்வது இந்திய பேட்டர்களுக்கு சிரமமாக இருந்தது. மிகவும் சிக்கனமாகப் பந்துவீசிய எங்கிடி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 1 பவுண்டரி கூடக் கொடுக்கவில்லை.
தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவின் ரன் விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே இருந்தது. அதனால், இந்திய பேட்டர்கள் பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சி செய்துகொண்டே இருந்தனர். கடினமான பந்துகளையும் அவர்கள் அப்படி அடிக்க நினைக்க, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன. வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் இருவரையும் கார்பின் பாஷ் பெவலியனுக்கு அனுப்பினார்.
தன்னுடைய முதலிரு ஓவர்களிலும் அதிகம் ரன் கொடுத்திருந்த கேஷவ் மஹராஜ், 15-வது ஓவரில் ஒரே மாதிரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் என மூவருமே அந்த ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வசமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்கள். ஹர்திக் கேட்சை லாங் ஆஃப் திசையில் நின்று பிடித்த ஸ்டப்ஸ், இடது கை பேட்டர்களின் இரு கேட்ச்களையும் லாங் ஆன் திசையில் நின்று பிடித்தார். அதனால் 88/8 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.
கடைசி கட்டத்தில் ஷிவம் துபே மட்டும் தனி ஆளாக சில சிக்ஸர்கள் அடித்துக்கொண்டிருந்தார். 42 ரன்கள் அடித்திருந்த துபேவை யான்சன் வெளியேற்றினார். அடுத்த பந்திலேயே யான்சன் பும்ராவை வெளியேற்ற, இந்தியாவின் இன்னிங்ஸ் 111 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அதனால் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன் அடிப்படையில், இதுதான் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தோல்வி.
இந்தப் பெரிய தோல்வியின் மூலம் இந்தியாவின் ரன்ரேட் – 3.800 ஆக இருக்கிறது. இது அரையிறுதி வாய்ப்பை பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.