பட மூலாதாரம், Getty Images
“இது நமக்கு அமெரிக்காவுடன் செயல்பட்டு, சீனாவை சமாளித்து, ஐரோப்பாவை அறுவடை செய்து, ரஷ்யாவை மறுஉத்தரவாதம் செய்து, அண்டை நாட்டினருடன் நெருக்கமாகி, நமது அக்கம்பக்கத்தினருடனான பாரம்பரிய ஆதரவு தளத்தை மேலும் வளர்க்க வேண்டிய நேரம்,” என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் 2020-இல் தனது The India Way: Strategies for an Uncertain World புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா ஒரு புறமாகவும், ரஷ்யா ஒரு புறமாகவும், சீனா மீது கவனமாகவும் ஒரு புதிய பன்முனை உலக ஒழுங்கில் இந்தியா தன்னையும் ஒரு முக்கிய அங்கமாக முன்னிறுத்தி வருகிறது.
ஆனால் இந்த பிம்பம் தற்போது உடைந்துவருகிறது. இந்தியாவின் நண்பராக இருந்து விமர்சகராக மாறியுள்ள அமெரிக்கா, மலிவு விலை கச்சா எண்ணெய் கொள்முதலால் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியளிப்பதாகக் குற்றம்சாட்டுகிறது. இந்தியா தற்போது டிரம்பின் பொதுவெளி விமர்சனங்களையும் அதிக வரிகளையும் சந்தித்து வருகிறது.
பன்முனை போட்டி உருவாகி வரும் உலக சூழலில் சீன அதிபர் ஜின்பிங் உடனான பிரதமர் மோதியின் சந்திப்பு ராஜாங்க வெற்றியாக அல்லாமல் நடைமுறை நல்லிணக்கமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை ஒரு அசௌகரியமான கட்டத்தில் உள்ளது.
இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு முகாம்களில் உள்ளது. அமெரிக்கா தலைமையிலான ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் ஒரு அங்கமாகவும், அமெரிக்கா நலனுக்கு மாறாக செயல்படும் சீன-ரஷ்ய கூட்டணி வழிநடத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) ஒரு அங்கமாகவும் உள்ளது. ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கும் அதே நேரத்தில் அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை பெறுவதிலும் இந்தியா கவனம் செலுத்துகிறது. அடுத்த வாரம் சீனாவில் நடக்கவுள்ள எஸ்சிஓ கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளது.
இவை போக தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் இஸ்ரேல், யுஏஇ மற்றும் அமெரிக்கா அடங்கிய I2U2 குழுவிலும் இந்தியா உள்ளது. அதோடு பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒரு முத்தரப்பு முன்னெடுப்பிலும் இந்தியா உள்ளது.
இந்த சமாளிக்கும் செயல் ஒரு விபத்தல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மூலோபாய தன்னாட்சியை முன்னிறுத்தும் இந்தியா போட்டிபோடும் முகாம்களுடன் இணைந்து செயல்படுவதால் பாதிப்புகளைவிட நன்மைகளே அதிகம் என வாதிடுகிறது.
“ஹெட்ஜிங் (பல்வேறு தரப்புகளை ஒரு சேர அணுகுவது) என்பது தவறான தேர்வு தான். ஆனால் யாராவது ஒருவருடன் அணி சேர்வது என்பது அதைவிட மோசமானது. இந்தியாவின் சிறப்பு தேர்வு என்பது ஹெட்ஜிங் என்கிற மோசமான தேர்வு தான்” என்கிறார் இந்திய முன்னாள் தூதரும் ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் பேராசியருமான ஜிதேந்திர நாத் மிஸ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “ஒரு வல்லரசுடன் அணி சேர்ந்தால் இந்தியா தான் சுயமாக செயல்பட முடியும் என நம்பிக்கையுடன் இருக்க முடியாது. நாகரிகமுள்ள நாடான இந்தியா, வரலாற்றில் தங்களுக்கான இடத்தை அடைந்த வல்லரசுகளின் பாதையைப் பின்பற்ற நினைக்கிறது.” என்றார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
உறுதியாக கூற வேண்டுமென்றால் இந்தியாவின் உலகளாவிய லட்சியங்கள் அதன் திறன்களை விஞ்சி செல்கின்றன.
இந்தியாவின் 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் அதனை 5வது பெரிய நாடாக ஆக்குகிறது. ஆனால் அது சீனாவின் 18 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் அல்லது அமெரிக்காவின் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமே. இந்தியாவின் ராணுவ-தொழில் தளமும் மிகவும் சிறிதானதாக உள்ளது. உலகில் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அதே சமயம் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா இல்லை. சுயசார்பு பிரசாரங்களுக்கு மத்தியில் உள்நாட்டு நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. இந்தியாவின் உயரிய ராணுவ தொழில்நுட்பங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே.
இந்த பொருத்தமற்ற தன்மை தான் இந்தியாவின் ராஜதந்திரத்தை வடிவமைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மோதியின் சீன பயணத்திற்குப் பின்னணியில் இந்த யதார்த்தம் தான் உள்ளதாக பலரும் நம்புகின்றனர். 2020-இல் கால்வான் மோதலுக்குப் பிறகு உறைந்து போன இந்திய-சீன உறவுகளைத் தொடர்ந்து இந்த பயணம் கவனமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. (இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தல் நிலவும் சமச்சீரற்ற தன்மையை சீனா உடனான இந்தியாவின் 99 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை வெளிப்படையாக காட்டுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டை விட அதிகமானது.)
உறவுகளுக்கு இடையேயான மாற்றத்தை வலியுறுத்தி பேசிய சீன தூதர் ஹு ஃபெய்ஹோங் இந்திய பொருட்களின் மீதான அமெரிக்காவின் வரிகளை நிராகரித்து டிரம்பை “அடாவடி செய்பவர் (bully)” என அழைத்தார். கடந்த வாரம் டெல்லிக்கு வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இணக்கமான தொனியில் இருநாடுகளும் தங்களை “எதிரிகள் அல்லது அச்சுறுத்தல்கள்” எனப் பார்க்காமல் “கூட்டாளிகளாக” பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் இந்தியா சீனாவுடன் ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கியது என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மூலோபாய விவகார வல்லுநரான ஹனிமூன் ஜேகப் தனது எக்ஸ் தளப்பதிவில், “மாற்று என்ன? இனி வரும் பல ஆண்டுகளுக்கு சீனாவை சமாளிப்பது தான் இந்தியா முக்கியமான மூலோபாய பணியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியா – சீனா பேச்சுவார்த்தையை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் முத்தரப்பு செயல் என முன்னிறுத்துகிறர்.
இந்த மூன்று வழி பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் கொள்கைக்குப் பதிலாக பரந்த மாற்று ஏற்பாடுகளை பிரதிபலிப்பதாகக் குறிப்பிடுகிறார். இது மாற்று கூட்டுகளும் சாத்தியம் என அமெரிக்காவுக்கு சமிக்ஞை செய்ய இந்தியா விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்தியா உடன் இயல்பான உறவு இல்லாமல் சீனா தனது சொந்த பெரிய புவிசார் அரசியல் நோக்கங்களுக்கு டிரம்புடன் “இந்திய அதிருப்தியை” முன்னிறுத்த முடியாது என எச்சரிக்கிறார்.
பெரிய நாடுகள் எவ்வளவு தூரம் உண்மையாக இணக்கமாக முடியும் என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமித் கங்குலி பிபிசியிடம் பேசுகையில் ரஷ்யா, சீனாவின் இளைய கூட்டாளியாக மாறியுள்ள நிலையில் அமெரிக்க-சீன மோதல் என்பது கட்டமைப்பு ரீதியாகவே சமரசம் செய்ய முடியாதது எனக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பின்னணியில் இந்தியாவுக்கான பாதை என்பது தெளிவாகிறது. “இந்தியாவின் தற்போதைய செயல்திட்டம் என்பது நேரம் பெறுவதற்காக சீனா உடன் இயல்பான உறவு இருக்கின்ற தோற்றத்தை பராமரிக்க முயல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
ரஷ்யா என்று வருகிற போது, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிவதில் இந்தியா சிறிதளவும் கூட ஆர்வம் காட்டவில்லை.
இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பிற்கு ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் முக்கியமாகிறது. ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்ய பயணம் , மேற்கத்திய பொருளாதார தடைகள் மற்றும் அதிகரித்து வரும் ரஷ்யாவின் சீன சார்புக்கு மத்தியிலும் இந்தியா இருநாடுகளின் உறவுகளை சுமூகமாக வைத்திருப்பது எரிபொருள் உயிர்நாடியாகவும் அதன் வெளியுறவு கொள்கை தன்னாட்சியின் நினைவூட்டலாகவும் இந்தியா காட்ட விரும்புகிறது.
இந்தியா, ரஷ்யாவுடனான தனது உறவுகளை இரண்டு காரணங்களுக்கு வலுப்படுத்துவதாக கூறுகிறார் கங்குலி. அவை ரஷ்யாவும் சீனாவும் மேலும் நெருக்கமாவது மற்றும் டிரம்பின் கீழ் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவுகள் தற்போது மோசமடைந்திருப்பது ஆகும்.
பாகிஸ்தான் உடனான போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது இந்தியாவை அசௌகரியப்படுத்தியுள்ளது. இந்திய வேளாண் சந்தைகளில் அமெரிக்கா பங்கு கேட்பதால் வர்த்தக ஒப்பந்தமும் தடைபட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் தொடர்பாகவும் டிரம்ப் தொடர்ந்து பேசுவது சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு சீனா தான் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருப்பதால் இந்த நிலைப்பாட்டை இந்தியா விளக்கமுடியாத ஒன்றாகப் பார்க்கிறது.
எனினும் மிக மோசமாக பிளவுகளும் பெரிய நலன்கள் என்று வருகிறபோது உறவுகளைப் பாதித்ததில்லை என்பதையே வரலாறு சொல்கிறது. “அடுத்த கடினமான சவால் வரை நாம் கடினமான சவாலை சந்தித்துள்ளோம்” என்கிறார் மிஸ்ரா.
1974 மற்றும் 1998-இல் இந்தியா அணுகுண்டு பரிசோதனைகளுக்குப் பிறகு அமெரிக்கா கடினமான பொருளாதாரத் தடைகளை விதித்ததை நினைவுகூர்கிறார். அப்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் பல ஆண்டுகளுக்கு மோசமடைந்தது. அதற்குப் பத்து ஆண்டுகள் கழித்து இருநாடுகளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இருதரப்பும் மூலோபாய காரணங்கள் என்று வருகையில் அவநம்பிக்கைகளை கடந்து வர தயாராக இருப்பதை காட்டுகிறது.
இப்போது வல்லுநர்கள் ஆராயும் ஆழமான கேள்வி என்பது உறவுகள் மீளுமா என்பதல்ல, அடுத்து என்ன வடிவம் எடுக்கும் என்பதாகத் தான் உள்ளது.
பட மூலாதாரம், LightRocket via Getty Images
சர்வதேச அமைதிக்கான கார்நெஜி கார்னெகி எண்டோவ்மென்டைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஆஷ்லி டெல்லிஸ் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான புதிய கட்டுரையில் பன்முனை உலக ஒழுங்கு மீது இந்தியா காட்டும் ஆர்வம் அதன் பாதுகாப்பை மட்டுப்படுத்துகிறது என்கிறார்.
அமெரிக்கா வீழ்ச்சியை சந்தித்தாலும் இரு ஆசிய நாடுகளுக்கும் மேலானதாகவே இருக்கும் என்று கூறும் அவர், சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா உடன் “சிறப்பான கூட்டணி”யை நிலைநிறுத்த வேண்டும் என்கிறார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்துள்ள நிருபமா ராவ், இந்தியா ஒரு வல்லரசுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு அதன் அளவும் லட்சியங்களும் இடம் கொடுக்காது என்கிறார். இருமுகாம்களாக அல்லாமல் பல சிக்கலான வழிகளில் உடையும் உலகில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நலன்கள் நெகிழ்வுத்தன்மையை கோருகின்றன. மூலோபாய நிலையற்றத்தன்மை என்பது பலவீனம் அல்ல சுதந்திரம் என்று அவர் வாதிடுகிறார்.
இதற்கு மத்தியில் ஒரு விஷயம் தெளிவாவதாக அவர் குறிப்பிடுகிறார், ரஷ்ய ஆதரவில், சீனா வழிநடத்தும் அமெரிக்கா அல்லாத உலக ஒழுங்கு இந்தியாவிற்கு மிகவும் அசௌகரியமான ஒன்றாக உள்ளது.
“வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் இந்தியாவின் தேர்வுகள் மிகவும் குறைவானது. சீனாவுடன் இணக்கம் ஏற்படுவது சாத்தியமில்லை, இந்த மோதல் என்பது தொடரும்” எனத் தெரிவித்தார் கங்குலி.
ரஷ்யாவை ஒரு எல்லை வரை நம்ப முடியும் எனக் கூறுகிறார். அமெரிக்கா பற்றி குறிப்பிடுகையில், “டிரம்ப் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார் என்கிற போதும் அமெரிக்கா-இந்தியா உறவுகள் தொடரும். டிரம்பின் செயல்பாடுகளுக்கு உறவுகளைப் பறிகொடுக்க முடியாத வகையில் இருநாடுகளுக்கும் பல்வேறு நலன்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.
வலிகளைத் தாங்கிக் கொள்வது தான் இந்தியாவுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும் எனப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.
“அமெரிக்காவின் அடிகளைத் தாங்கிக் கொண்டு அதனை கடந்து செல்வதை விட இந்தியாவிற்கு சிறந்த தேர்வு இருப்பதாக தெரியவில்லை.” என்கிறார் மிஸ்ரா. இறுதியில், இந்த மோதல்களை கடந்து கூட்டாளிகள் திரும்பி வருவார்கள் என்று மூலோபாய அமைதி காப்பது இந்தியாவிற்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு