பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்திருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசவில்லை என்பதால்தான் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசாததால் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நடைபெறவில்லை என்ற ஹோவர்ட் லுட்னிக்கின் கூற்றை இந்தியா ‘தவறானது’ என்று வெள்ளிக்கிழமையன்று நிராகரித்தது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுமதித்துள்ள நிலையிலும், லுட்னிக் இந்தக் கூற்றை முன்வைத்தார்.
” இந்திய அரசுக்கு (ஒப்பந்தத்தில்) உடன்பாடு இல்லை, அதனால் மோதி அழைக்கவில்லை” என்று லட்னிக் கூறினார்.
லுட்னிக்கின் கூற்றுகள் குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் முன்னாள் தூதர் கே.சி. சிங், எக்ஸ் தளத்தில், “இதில் ஆச்சரியம் ஏதாவது உள்ளதா? இல்லை. டிரம்ப் நிர்வாகத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. பொருளாதார முன்னிலை பெறும் போட்டியை அடிப்படையாகக் கொண்ட அவர்களின் கணிக்க முடியாத கோரிக்கைகள். மேலும் டிரம்பின் ஈகோ. இறுதியில் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிடுகிறது” என்று எழுதினார்.
கடந்த மாதம், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட கட்டத்தில் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.
லுட்னிக் என்ன கூறினார்?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், முதலீட்டாளர் சாமத் பாலிஹாபிதியாவின் ‘ஆல்-இன் பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில், இந்தியா தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.
அனைத்து ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டுவிட்டன என்று கூறிய லுட்னிக், ஒப்பந்தம் தயாராக இருந்தது என்றும், கடைசி கட்டமாகத் தலைவர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே பாக்கி இருந்தது என்றும் கூறினார்.
“நான் ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசி, முழு ஒப்பந்தத்தையும் தயாரிக்க வேண்டியிருந்தது. எல்லாம் தயாராக இருந்தது. மோதி அதிபரை (டிரம்ப்) அழைக்கவேண்டியிருந்தது. அதைச் செய்வதற்கு அவர் (மோதி) சௌகரியமாக இல்லை. அதனால் மோதி அழைக்கவில்லை. அந்த வெள்ளிக்கிழமை கடந்துவிட்டது, அடுத்த வாரம் நாங்கள் இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். பல ஒப்பந்தங்களை அறிவித்தோம்” என்று அவர் கூறினார்.
அதிபர் டிரம்பின் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை உத்தி குறித்துப் பேசுகையில், இந்தியாவுக்கு ஒப்பந்தத்தை எட்ட மூன்று வெள்ளிக்கிழமைகள் அவகாசமாக வழங்கப்பட்டதாக லுட்னிக் தெரிவித்தார்.
அந்த காலக்கெடு முடிந்த பிறகு, அமெரிக்கா பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை எட்டியதாகவும் அவர் கூறினார்.
மாறிக்கொண்டிருக்கும் டிரம்பின் கொள்கைகள்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி போர், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்த அவரது முடிவு, மேலும் கிரீன்லாந்தின் உரிமை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் மசோதாவை டிரம்ப் அனுமதித்துள்ளார்.
இதன் மூலம், டிரம்பின் முடிவுகள் எங்கு செல்லும், அல்லது அவரது முடிவுகளுக்கு ஏதேனும் எல்லைகள் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பைத் தடுக்க முடியுமா?
தி நியூயார்க் டைம்ஸ்-க்கு டிரம்ப் அளித்த பேட்டியின்போது, தனது உலகளாவிய அதிகாரங்களுக்கு ஏதேனும் எல்லைகள் உள்ளனவா என்று கேட்கப்பட்டபோது, “ஆம், ஒரு விஷயம் மட்டுமே உள்ளது. என் சொந்த நெறிமுறை. என் சொந்த சிந்தனை. அதனால் மட்டுமே என்னைத் தடுக்கமுடியும்” என்று டிரம்ப் பதிலளித்தார்.
மேலும், “எனக்கு சர்வதேச சட்டம் தேவையில்லை. நான் மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கவில்லை” என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்ப் நிர்வாகம் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, “நான் பின்பற்றுகிறேன். ஆனால் அதை நான் தான் தீர்மானிப்பேன். அது சர்வதேச சட்டம் என்ற உங்கள் வரையறையைப் பொறுத்தது” என்று அவர் பதிலளித்தார்.
இந்த பேட்டி குறித்து தி நியூயார்க் டைம்ஸ், “ராணுவ, பொருளாதார அல்லது அரசியல் சக்தி என எந்த வழியையும் பயன்படுத்தி அமெரிக்க மேலாதிக்கத்தை ஒருங்கிணைக்கும் தனது சுதந்திரம் பற்றிய டிரம்ப்பின் மதிப்பீடு, அவரது உலகக் கண்ணோட்டத்தின் மிகத் தெளிவான ஒப்புதல் வாக்குமூலமாகும்.” என்று குறிப்பிட்டது.
இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கும் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்கும்” என்று அவர் கூறினார்.
“நாங்கள் இப்போது கடத்தல் கும்பல்களுக்கு எதிராக ஒரு தரைவழித் தாக்குதலைத் தொடங்கப் போகிறோம். மெக்ஸிகோவை அந்தக் கடத்தல் கும்பல்கள்தான் நடத்தி வருகின்றன” என்று அவர் கூறினார்.
“அந்த நாட்டிற்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் அங்கே எல்லாவற்றையும் அந்தக் கடத்தல் கும்பல்கள்தான் நடத்துகின்றன. மேலும் அவை எங்கள் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 3,00,000 பேரைக் கொல்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
நேர்காணல் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?
டொனால்ட் டிரம்பின் நேர்காணல் குறித்து பல ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். உத்தி சார் விவகார நிபுணர் பிரம்மா செல்லனி, இந்த நேர்காணலை “அசாதாரணமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த அசாதாரணமான நேர்காணலில், அமெரிக்கா தான் விரும்பும் வரை, பல ஆண்டுகளுக்கு வெனிசுவேலாவை ஆளும் என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கா கிரீன்லாந்தின் ‘உரிமையாளர்’ ஆவது மட்டுமே தனக்கு திருப்தி அளிக்கும் என்றும் அவர் கூறினார்” என பிரம்மா செல்லனி கூறியுள்ளார்.
”அவரது வெளிப்படைத்தன்மை அமெரிக்க அதிகாரத்தின் வரம்புகளை வெளிப்படுத்தியது. சர்வதேச சட்டம், எந்த விதிகளோ அல்லது தணிக்கை முறைகளோ தன்னைக் கட்டுப்படுத்தாது என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதிலிருந்து உங்களை தடுக்க வழி உள்ளதா என்று கேட்டபோது, அவர், ‘எனது சொந்த அறநெறி. எனது சொந்த சிந்தனை. அது ஒன்றுதான் என்னைத் தடுக்க முடியும்’ என்று பதிலளித்தார். மேலும், ‘எனக்கு சர்வதேச சட்டம் தேவையில்லை’ என்றும் அவர் கூறினார்.” என்கிறார் என பிரம்மா செல்லனி
“இது டிரம்பின் தெளிவான உலகக் கண்ணோட்டம். தேசிய நலன்கள் என வரும்போது சட்டத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது, நிறுவனங்கள் எளிதில் கைவிடப்படுகின்றன, அதிகாரம் மட்டுமே ஆட்சி செய்கிறது. டிரம்பின் உலகில், இறையாண்மை என்பது நாடுகளுக்கோ அல்லது மக்களுக்கோ சொந்தமானது அல்ல. அதைக் கைப்பற்றும் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே சொந்தமானது.” என்றார் பிரம்மா செல்லனி.
அமெரிக்க எழுத்தாளரும், டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பதவிக் காலத்தின் போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் முன்னாள் உறுப்பினருமான மைல்ஸ் டெய்லர், எக்ஸ் தளத்தில் பின் வருமாறு எழுதியுள்ளார்.
“தனது அதிகாரங்களுக்கு ஏதேனும் வரம்புகள் இருப்பதாக நினைக்கிறீர்களா என்று நியூயார்க் டைம்ஸ் கேட்டபோது, ‘ஒரே ஒரு விஷயம், எனது சொந்த அறநெறி. எனது சொந்த சிந்தனை, அது மட்டும்தான் என்னை நிறுத்த முடியும்’என டிரம்ப் பதிலளித்தார். ஜான் கெல்லி சொன்னது சரிதான், இது ஒரு பாசிசவாதியின் மனநிலை.” என்றார் அவர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு