“கோலி, ரோஹித் இருவரின் ஃபார்மைப் பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை. உண்மையில் இருவருமே அதிக தன்னம்பிக்கை உடையவர்கள். இந்திய கிரிக்கெட்டில் ஏராளமாக சாதித்துள்ளனர், இன்னும் தொடர்ந்து சாதிக்க உள்ளனர். என்னைப் பொருத்தவரை இருவரும் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு, தொடர்ந்து உழைத்து வருகிறார்கள், கிரிக்கெட் மீதான காதல் இருவருக்கும் குறையவில்லை, இன்னும் சாதிக்க ஆவலாக இருக்கிறார்கள். இருவருக்கும் கிரிக்கெட் மீதான தேடல், பசி ஆகியவற்றை ஓய்வறையில் பார்த்து இதைக் கூறுகிறேன். நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின் இந்த தாகம் இருவரிடம் அதிகரித்துள்ளது”
விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சமீபத்திய மோசமான ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள், கேள்விகள் எழுந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அதிக நம்பிக்கையுடன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
இந்திய அணிக்கு வரும் 22-ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 4-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற முடியும்.
கடும் விமர்சனங்கள்
அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா, கோலி இருவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இந்தத் தொடர் முக்கியமானது. ரோஹித், கோலி இருவரும் ஆஸ்திரேலியத் தொடரில் சொதப்பினால், இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவது சிறந்தது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கர்சன் காவ்ரி உள்ளிட்ட வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் இதே கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ஏனென்றால், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகி பெரிய அவமானத்தைச் சந்தித்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதல்முறையாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இழந்தது. இதில் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, கோலியின் மோசமான ஃபார்ம் தொடரை இழக்க முக்கியக் காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க இயலாது.
ரோஹித், கோலி இருவருக்கும் நெருக்கடி
இதனால், ஆஸ்திரேலியத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா, கோலி இருவருக்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அணியின் வெற்றி ஒருபக்கம், தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஒருபக்கம் என அழுத்தங்கள் இருவருக்கும் அதிகரித்துள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த வீரர்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் விமர்சனம்
கோலியின் ஃபார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் “ எனக்குத் தெரிந்து சர்வதேச கிரிக்கெட்டில் எந்த டாப்ஆர்டர் பேட்டரும் கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் 2 சதங்களை மட்டுமே அடித்து, அணியில் நீடிப்பார் என்று நினைக்கவில்லை. விராட் கோலியைப் பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 2 அல்லது 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இது எனக்கு சரியாகப்படவில்லை. அவரது ஃபார்ம் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
கம்பீரின் பதிலடி
விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் விமர்சனத்துக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பதிலடி கொடுத்திருந்தார். அவர் பேசுகையில் “ இந்திய கிரிக்கெட்டுக்கு ரிக்கி பாண்டிங் என்ன பங்களிப்பு செய்துள்ளார். என்னைப் பொருத்தவரை பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பற்றி மட்டும் அக்கறைப்பட்டால் போதும். ரோஹித் சர்மா, கோலியின் ஃபார்ம் குறித்து பாண்டிங் எந்த அக்கறையும், கவலையும் படத் தேவையில்லை. இருவருமே கிரிக்கெட்டில் ஏராளமாக சாதித்துள்ளனர், இனியும் சாதிப்பார்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.
உண்மை நிலை என்ன?
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனாலும், இருவரின் மீதும் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.
கோலியின் மோசமான ஃபார்ம் தெரிந்தே அவரே இந்திய அணி ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாகவே பெர்த் நகருக்கு சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தன் மீதான விமர்சனங்களை உடைக்கும் விதத்தில், வரும் 22-ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தன்னை தயார் செய்ய கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதே பெர்த் மைதானத்தில்தான் கடைசியாக 2018ம் ஆண்டு கோலி 123 ரன் குவித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
கோலியின் நிலை என்ன?
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனை அளப்பரியது. சச்சின், கங்குலி படைத்த பல்வேறு சாதனைகளை குறைந்த வயதிலேயே கோலி அடைந்தவர்.
118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 9040 ரன்களைச் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இப்போது கோலியின் சராசரி 47.83 ஆக இருக்கிறது. 29 சதங்கள், 31 அரைசதங்கள் என கோலியின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் மிரட்சியை ஏற்படுத்துகின்றன.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் உண்மையில் கவலைக்குரியதுதான். ஏனென்றால், 2020-ஆம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுவரை கோலி டெஸ்ட் அரங்கில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள், 2023-ஆம் ஆண்டு ஜூலையில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 121 ரன்கள் என இரு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார், 7 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என கிரிக்இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் கோலி அரைசதம் அடித்திருந்தார். அதன்பின் கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம் அடித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி மொத்தமே 93 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 சராசரி வைத்திருந்தார். அதிலும் கடைசி 5 இன்னிங்ஸ்களில் 23 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்திருந்தார்.
2024-ஆம் ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் கோலி விளையாடி 221 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் 2 அரைசதங்கள் மட்டுமே அடங்கும். சராசரியாக 22 ரன்கள் வைத்துள்ளார். கோலியின் டெஸ்ட் சராசரி 2019-ஆம் ஆண்டு நவம்பரில் 55 ஆக இருந்த நிலையில் சமீபத்திய மோசமான ஃபார்ம் காரணமாக 47 ஆகக் குறைந்துவிட்டது என கிரிக்இன்போ புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
ஆனாலும், சிறந்த பேட்டர்களுக்கு இதுபோன்ற சறுக்கல்கள் வருவது இயல்புதான் என்றே கிரிக்கெட் வரலாறு கூறுகிறது. சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் போன்ற ஜாம்பவான்கள் இதே சங்கடங்களைச் சந்தித்து மீண்டவர்கள்தான்.
ஏதாவது ஒரு போட்டியில் அரைசதம், சதம் அடித்தாலே கோலி போன்ற ஜாம்பவான்கள் தங்களை சார்ஜ் செய்து கொள்வார்கள், கோலி மீண்டுவரக்கூடிய தொடராக பார்டர்-கவாஸ்கர் தொடர் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
ஆஸி. தொடருக்கு கோலி அவசியமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு கோலி, ரோஹித் ஆகிய இரு சீனியர் பேட்டர்களின் பங்களிப்பும், அனுபவமும் இந்திய அணிக்கு அவசியம் தேவை. ஏனென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், அஸ்திரேலிய மண்ணிலும் டெஸ்ட் போட்டியில் கோலி எப்போதுமே சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2011 முதல் 2023-ஆம் ஆண்டுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2042 ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 2011 முதல் 2020 வரை ஆடிய கோலி, 1352 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 6 சதங்கள் அடங்கும். அதாவது கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 8 சதங்களில் 6 சதங்கள் அந்நாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் கோலியின் சராசரி 54 ரன்கள் என்றபோதே அங்கு கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என அறியலாம்.
கோலியின் பேட்டிங் அணுகுமுறை என்பது வித்தியாசமானது. டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவுடன் அவசரப்பட்டு ஆடமாட்டார், ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பந்தையும் கவனித்து அதற்கேற்ப தன்னுடைய பேட்டிங்கை மாற்றி, ஆடுகளத்துக்கு ஏற்ப ஆடக்கூடியவர். இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இடம் பெற்றுள்ள வீரர்களில் கோலியை விட சிறப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் பேட் செய்தவர்கள் யாரும் இல்லை என்பதை புள்ளி விவரங்கள் புலப்படுத்துகின்றன.
ரோஹித் சர்மா நிலை என்ன?
கேப்டன் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஃபார்ம் மிகவும் மோசமாகவே இருக்கிறது. உண்மையில் கோலியைவிட டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா குறைவாகவே விளையாடிய அனுபவம் உடையவர்.
கோலி டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டதைப் போல , ரோஹித் சர்மா தன்னை தகவமைத்துக் கொண்டார் என்று கூற இயலாது.
2013 முதல் 2024 வரை ரோஹித் சர்மா 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4270 ரன்கள் குவித்துள்ளார், 12 சதங்கள், 18 அரைசதங்கள், என 42 சராசரி வைத்துள்ளார். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ரோஹித் சர்மா ஒரு சதம் உள்பட 708 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 7 போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட 408 ரன்கள் ரோஹித் சேர்த்துள்ளார்.
இந்த ஆண்டில் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட், தரம்சலாவில் நடந்த போட்டிகளில் இரு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். ஆனால், வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில்தான் ரோஹித்தின் ஃபார்ம் மோசமாகியுள்ளது. கடந்த 10 இன்னிங்ஸ்களில் ரோஹித் 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
ஆனாலும், டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் அனுபவம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரின் அனுபவம், கேப்டன்சி ஆகியவற்றுக்காக அவரின் தேவை இருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவை. புதிய பந்தில் ரோஹித் சர்மா அடிக்கடி விக்கெட்டை இழந்துள்ளார். ஏராளமான முறை ரோஹித் சர்மா கூக்கபுரா புதிய பந்தில் ஆட்டமிழந்துள்ளார். ஆதலால், இந்த முறை தொடக்க வீரராக களமிறங்குவதற்குப் பதிலாக ரோஹித் சர்மா நடுவரிசையில் களமிறங்கினால் அணிக்கும் பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஓய்வா அல்லது தொடர்வார்களா?
ஆஸ்திரேலியத் தொடர் இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெற முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். அதேநேரம், ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையை தீர்மானிக்கும் தொடராகவும் இருக்கும்.
ஏனென்றால், இந்தத் தொடருக்குப்பின் இந்தியாவில் 2025 அக்டோபரில்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மாவுக்கு 37 வயதாகிவிட்டது. கோலியும் 36 வயதை தொட்டுவிட்டார். இருவரும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்களா என்பது ஆஸ்திரேலியத் தொடர்தான் நிர்ணயிக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஆஸ்திரேலியத் தொடரை வெற்றிகரமாக முடித்து இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையயும் தொடரலாம் அல்லது தோல்வியோடு ஓய்வை அறிவித்தாலும் வியப்பில்லை.