• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா இங்கிலாந்து சுழலை சமாளித்து இமாலய ரன் குவிக்க உதவிய ‘கேப்டனின் ஒரு முடிவு’ – என்ன நடந்தது?

Byadmin

Mar 6, 2026


இந்தியா-இங்கிலாந்து, டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஒரு பிரமாதமான உலகக் கோப்பை அரையிறுதி ஒன்றைப் பார்த்திருக்கிறோம். ஒரு அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால், இன்னொரு அணி அதைத் துரத்திக்கொண்டே 246 ரன்கள் எடுக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் போட்டி ஒரு விருந்தாக அமைந்திருக்கும். குறிப்பாக இந்திய ரசிகர்களுக்கு இதுவொரு மறக்க முடியாத போட்டியாக இருக்கும். ஏனெனில், இது இந்தியாவை இன்னொரு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்திய அணிக்கு ஒருவகையில் சாதகமாக அமைந்துவிட்டது. வான்கடே மைதானத்தின் செம்மண் ஆடுகளங்களில் பவுன்ஸ் நன்றாக இருக்கும். பேட்டர்கள் அந்த பவுன்ஸை நன்கு நம்பி ஆடலாம்.

சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரருக்கு ஏற்ற சரியான ஆடுகளம் இது. சொல்லப்போனால், அடிக்கத் தேவையில்லை. பந்து வரும் வேகத்துக்கு, நல்ல ‘டைமிங்’ இருந்தாலே போதுமானதாக இருக்கும். அதற்கு ஏற்ப அவரும் ஒரு அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடினார். தன்னுடைய சிறப்பான ஃபார்மை அவர் இந்தப் போட்டியிலும் தொடர்ந்திருக்கிறார்.

எனக்குப் பிடித்த விஷயமே சாம்சன் மீதான அடையாளம் தற்போது மாறத் தொடங்கியிருப்பது என்பதுதான். வழக்கமாக அவர் ஒரு போட்டியில் நன்றாக அடித்தால், அடுத்த போட்டியில் நன்றாக ஆடமாட்டார் என்ற பேச்சு இருக்கும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக ஜொலித்தவர், அதை இந்தப் போட்டியிலும் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தொடர்ந்து அந்த நல்ல 20, 30 ரன்கள் அடித்துக்கொண்டிருந்தவர் தற்போது அதை 70, 80 ரன்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது சீரான செயல்பாட்டைக் கொடுப்பது இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல விஷயம்.

By admin