பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை இந்தியா இதுவரை உறுதி செய்யவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்தது. அந்தப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போர் தொடங்கியதில் இருந்து இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஒரு சாதனை அளவிலான உயர்வைக் கண்டுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டில், ரஷ்யா, இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் டாலரை எட்டியது. ஆனால் இதில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 52.73 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.
இப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார். இந்தியா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 20 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்து விடும்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் புரி கடந்த மாதம் தெரிவித்தார். எரிபொருளை வாங்கும் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. அது தனது எண்ணெய் விநியோக நாடுகளைப் பன்முகப்படுத்தி வருகிறது என்று புரி கூறினார்.
ஜனவரி 27ஆம் தேதி ப்ளூம்பெர்க் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரஷ்ய எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே நாளொன்றுக்கு 1.3 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துவிட்டதாகவும், இதுவே கடந்த ஆண்டில் ஒரு நாள் சராசரி 1.8 மில்லியன் பீப்பாயாக இருந்ததாகவும் அவர் கூறினார். இந்த சரிவு, சந்தை நிலவரங்களால் ஏற்பட்டதாக புரி குறிப்பிட்டார்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான அமெரிக்காவின் அழுத்தம் தொடர்பாக ஹர்தீப் புரி குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால், ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதைத் தாமே தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் வெளிப்படையாகக் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மூலோபாய சுயாட்சி என்னவாகும்?
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த எண்ணெய் அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 13% குறைவாக இருந்தது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருந்தது.
புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன் இதற்கான காரணங்களை விளக்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அமெரிக்காவின் 25% கூடுதல் வரி இந்தியாவிற்கு ஒரு சுமையாக இருந்தது. அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது தடைகளை விதித்திருந்தது.
இந்தியாவுக்கு மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்பினாலும் 2024-25 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் 60 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையையும் அது எதிர்கொண்டது. இது சீனாவுடனான 100 பில்லியன் டாலர் பற்றாக்குறைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பற்றாக்குறையாகும்.”
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்குமா? என்ற கேள்விக்கு தன்வி மதன் “அதுகுறித்து கூறுவது கடினம். அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம் இறக்குமதியை மேலும் குறைக்கலாம் அல்லது பூஜ்ஜியமாகக் கூட குறைக்கலாம். ஆனால் இப்போதும், இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் ஒரு பெரிய பங்கு நயாரா நிறுவனத்திற்குச் செல்கிறது.”
“நயாரா நிறுவனம் ரஷ்ய நிறுவனமான ரோஸ்நெஃப்ட்டுக்குச் சொந்தமானது, அதன் பங்குகளை விற்கும் திட்டங்கள் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலத்தில் இந்தியா இரான் மற்றும் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுடனான வர்த்தக அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருந்தால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்த விரும்பாமல் இருக்கலாம்.” என்று அவரு கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் மூலோபாய சுயாட்சி என்னவாகும்?
தன்வி மதன் கூற்றுப்படி, “இந்திய அரசாங்கங்கள் பெரும்பாலும் மூலோபாய சுயாட்சியில் தீவிரப் பற்று கொண்டவர்களாக இருந்ததில்லை. அரசாங்கங்கள் பெரும்பாலும் நன்மை தீமைகளை எடைபோட்டு, இந்தியாவிற்கு எது சிறந்தது என்பதை அடிப்படையாக கொண்டே முடிவுகளை எடுக்கின்றன. இந்த விஷயத்தில், தொடர்ச்சியான எண்ணெய் இறக்குமதியால் கிடைக்கும் நன்மைகள், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யுமா என்பதையே இந்திய அரசாங்கம் எடை போடக்கூடும்.”
“ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் சலுகைகள், அமெரிக்க சந்தைக்கான அணுகல் அல்லது இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகளின் இழப்பை ஈடுசெய்யாது என்பதையும் இந்திய அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும். ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான சலுகைகளை விட, அமெரிக்க சந்தைகள், மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதே உண்மை. இந்தியா-அமெரிக்க உறவுகளில் உள்ள மற்ற காரணிகளை ஒதுக்கி வைத்தாலும் இது உண்மைதான்.” என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
பிற அமெரிக்க அதிபர்களைவிட ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் அதிக இணக்கமான அணுகுமுறையைக் கொண்டிருப்பவராகக் கருதப்படுகிறார். இருப்பினும், இந்தியா, ரஷ்யா இடையிலான உறவுகள் விவகாரத்தில் அவர் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கையாள்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், “இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் தங்கள் சீரழிந்த பொருளாதாரங்களை ஒன்றாகச் சேர்ந்து வீழ்த்திக்கொள்ள விரும்பினால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தியாவுடன் எங்களுக்கு மிகக் குறைந்த வர்த்தகமே உள்ளது. அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன.” என்று டிரம்ப் தெரிவித்தார்.
எரிசக்தி தவிர, இந்தியா, ரஷ்யா இடையிலான உறவுகளில் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், இங்கும் ரஷ்யாவின் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, 2020-2024க்கு இடையில் இந்தியா தனது ராணுவ உபகரணங்களில் 36 சதவிகிதத்தை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தது. இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட விநியோகஸ்தராக ரஷ்யா இருந்தது. ஆனால், இது 2006-10 காலகட்டத்தில் இருந்து நிகழ்ந்துள்ள ஒரு மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. அப்போது இந்தியாவின் ராணுவ உபகரணங்களில் 82% ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தியா-ரஷ்யா உறவுகள் மீது டிரம்ப் செலுத்தும் அழுத்தம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அழுத்தத்தின் கீழ் இந்தியாவால் தனது மூலோபாய சுயாட்சியை பின்பற்ற முடியாது என்று கூறப்படுகிறது.
‘அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை’ (Observer Research Foundation) என்ற சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளர் மனோஜ் ஜோஷி, டிரம்பின் அழுத்தம் காரணமாக இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், அது நமது வெளியுறவுக் கொள்கை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பும் என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, “இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், ரஷ்யாவும் இதை ஒரு பின்னடைவாகக் கருதக்கூடும். இந்தியா தானாகவே இறக்குமதியை நிறுத்தியிருந்தால் யாரும் அதைக் குறைகூறியிருக்க மாட்டார்கள். ஆனால், டிரம்பின் அழுத்தத்தின் விளைவாக அவ்வாறு செய்தால், அது மோதி அரசின் மூலோபாய சுயாட்சி மற்றும் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளை எழுப்புகிறது,”
“இந்தியாவின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும். ரஷ்யாவுக்கு இப்போது இந்தியா எண்ணெய் வாங்குவது அவசியம். ரஷ்யா கடுமையான மேற்கத்திய தடைகளை எதிர்கொண்டுள்ளது. எனவே, இந்தியாவின் இந்த நிலைப்பாடு ரஷ்யாவில் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படாது.
நடுத்தர வலிமை கொண்ட நாடுகள்(middle-power countries) ஒன்றிணைவது பற்றிப் பேசப்படும் நேரத்தில், இந்தியா பிரிக்ஸ் அமைப்புக்குத் தலைமையேற்று இருக்கும் போது இதைச் செய்கிறது. இது ரஷ்யாவுக்கு ஏற்படும் இழப்பைவிட இந்தியாவின் நம்பகத்தன்மை தொடர்பான ஒரு பெரிய கேள்வியை எழுப்பும்,” என்று கூறினார் மனோஜ் ஜோஷி.
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா கோபமடையுமா?
ஆனால், எரிசக்தி நிபுணர் நரேந்திர தனேஜா இதை ஏற்கவில்லை. இந்தியா – ரஷ்யா உறவை வர்த்தகம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கக்கூடாது என்கிறார் அவர்.
“முதலாவதாக, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்திவிடுவோம் என்று இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை. இரண்டாவதாக, எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியாவுக்கு நிறைவேற்றியே தீர வேண்டிய எந்தவொரு கடமையும் இல்லை.
யுக்ரேன் போர் தொடங்கியவுடனேயே, எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து கணிசமான தள்ளுபடிகள் கிடைத்தன. இந்தியாவுக்கு ஒரு பீப்பாய்க்கு குறைந்தபட்சம் 15 டாலர் லாபம் கிடைத்தது. இப்போது இந்த நன்மை கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது,” என்று கூறினார் நரேந்திர தனேஜா.
அவர் மேலும் பேசியபோது, “இந்தியாவின் வளர்ச்சிக்கு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகள் தேவை. இந்த மூன்று விஷயங்களையும் நாம் ரஷ்யாவிடம் பெறுவோமா, சீனாவிடம் பெறுவோமா என்பதற்குப் பதில் இல்லை. இந்த மூன்று விஷயங்களையும் நாம் அமெரிக்காவிடம் இருந்துதான் பெறுவோம். அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. எனவே, இந்தியா தனது எரிசக்தி இறக்குமதிக் கொள்கையை மாற்றினால், அது தர்க்கமற்றதாகக் கருதப்படாது,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தனேஜாவின் கூற்றுப்படி, இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் எரிசக்தித் துறையில் 17 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
“எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஒரு அமெரிக்க அதிபரின் கொள்கைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப விஷயங்கள் மாறும். ஆனால், எதுவும் முற்றிலும் கறுப்பு அல்லது வெள்ளை என்ற நிலையில் இருக்காது.”
டிரம்பின் கோரிக்கைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டால், அவர் அதோடு நின்றுவிட மாட்டார் எனக் கூறப்படுகிறது. டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும்படி இந்தியாவை வற்புறுத்தினால், அது பாதுகாப்புக் கூட்டாண்மையை மேலும் சேதப்படுத்தக்கூடுமென பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகிறார்.
ராகுல் பேடியை பொறுத்தவரை, “தனது முதல் பதவிக் காலத்தில், டிரம்ப் ‘அமெரிக்காவின் எதிரிகளைத் தடைகள் மூலம் எதிர்கொள்ளும் சட்டம் (CAATSA)’ என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த தடையால் ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியாவால் முடியவில்லை. ஆனால் பைடன் இந்தியாவுக்கு விலக்கு அளித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், டிரம்ப் அடுத்ததாக இந்தியா-ரஷ்யா பாதுகாப்புக் கூட்டாண்மையைக் குறிவைக்கக்கூடும். இந்தியா ஒரு பொறியில் சிக்கிக் கொண்டதாக நான் கருதுகிறேன். அதனால் ரஷ்யாவை விட்டு விலகவும் முடியாது, வெளிப்படையாக அதனுடன் இருக்கவும் முடியாது.”

ரஷ்யா பதிலுக்கு என்ன செய்யக்கூடும்?
டிரம்பின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது ரஷ்யாவுக்கு பின்னடைவு எனக் கூறிய ராகுல் பேடி, “இது இந்தியாவுடனான பாதுகாப்புக் கூட்டாண்மை மீதான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும். மோதி அரசு தொடர்ந்து தன்னிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டுமென ரஷ்யாவும் விரும்புவதால், அது இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்காது.
ரஷ்யா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இருந்து விலகினால், இந்தியாவுக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் உதவி கிடைக்காது. பாகிஸ்தானுடனான ஐந்து நாள் மோதலில் பிரமோஸ் ஏவுகணையும், எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் முக்கியப் பங்கு வகித்தன. இது இந்தியாவின் பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டப் போதுமானது,” என்று தெரிவித்தார்.
ரஷ்யா முழுமையாக சீனாவின் கைகளில் விழுந்துவிடாமல் தடுப்பது இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. யுக்ரேன் போர் வெடித்ததில் இருந்து சீனா மீதான ரஷ்யாவின் சார்பு நிலை அதிகரித்துள்ளது.
அதோடு, பாகிஸ்தான் சீனாவுடன் நெருக்கமாக இருப்பதை இந்தியா தனக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. ரஷ்யாவும் இதில் ஈடுபட்டால், இந்தியாவுக்கான சவால் மேலும் அதிகரிக்கக்கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு